‘‘தமிழகத்தில் 5 மாவட்டங்களில் ஆதிதிராவிட மாணவிகளுக்கு விரைவில் உறைவிட பள்ளிகள்’’ : மத்திய அமைச்சர் கிருஷ்ணன் பால் குர்ஜர் தகவல்

செவ்வாய்க்கிழமை, 12 செப்டம்பர் 2017      தமிழகம்
central gcenovernment(N)

Source: provided

சென்னை :  தமிழகத்தில் 5 மாவட்டங்களில் ஆதிதிராவிட மாணவிகளுக்கு உறைவிட பள்ளிகள் அமைக்கப்படும் என்று மத்திய அமைச்சர் கிருஷ்ணன் பால் குர்ஜர் தெரிவித்துள்ளார்.

தென் மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த சமூக நலத்துறை அமைச்சர்கள் பங்கேற்ற மண்டல கூட்டம் சென்னையில் நடைபெற்றது. மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை அமைச்சர் கிருஷ்ணன் பால் குர்ஜர் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில், மத்திய அமைச்சர்கள் ராம்தாஸ் அத்வாலே, விஜய் சம்ப்லா, தமிழ்நாடு சமூக நலத்துறை அமைச்சர் வி.சரோஜா, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி, புதுச்சேரி சமூக நலம் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் எம்.கந்தசாமி, மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை செயலாளர் ஜி.லதா கிருஷ்ணா ராவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


இதில் மத்திய அரசு சார்பில் நிதியுதவி அளிக்கப்படும் தாழ்த்தப்பட்ட (எஸ்.சி.), பழங்குடியின (எஸ்.டி.) பள்ளி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகைக்கான நிதி, முதியோர் ஓய்வூதியத் திட்டம், போதை மறுவாழ்வு மையத் திட்டம் என்பன உள்ளிட்ட திட்டங்கள் குறித்த ஆய்வுகள் நடத்தப்பட்டன.

ரூ.60 கோடி செலவில் உறைவிட பள்ளி

இந்த கூட்டத்துக்கு பின்னர் மத்திய அமைச்சர் கிருஷ்ணன் பால் குர்ஜர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் ரூ.60 கோடி ரூபாய் செலவில் ஆதிதிராவிட மாணவிகளுக்கு உறைவிடப் பள்ளிகள் அமைக்கப்படும்.

6 முதல் 12 வகுப்பு வரையில் ஆதிதிராவிட (ஷெட்யூல் வகுப்பு) மாணவிகளுக்கு இந்த பள்ளிகளில் உறைவிட வசதியுடன் கல்வி அளிக்கப்படும். இதற்கான பள்ளிக் கட்டிடங்கள் 12 கோடி செலவில் கட்டப்படும். மலைப் பகுதிகளில் இத்தகையப் பள்ளிகள் அமைக்க 16 கோடி ரூபாய் வீதம் மத்திய அரசு வழங்கும்.

இந்த பள்ளிகளில் ஏற்படும் தொடர் செலவினங்களை முதல் 3 ஆண்டுகளுக்கு மத்திய அரசே ஏற்றுக்கொள்ளும். 4வது ஆண்டு முதல் இப்பள்ளிகளில் நடப்புச் செலவினம் மத்திய மாநில அரசுகளால் 60%, 40% என்ற விகிதாச்சாரத்தில் செலவிடப்படும்.இப்பள்ளிகளில் பயிலும் மாணவியர் ஒவ்வொருவருக்கும் ஆண்டுக்கு ரூபாய் 85,000 வீதம் மத்திய அரசு வழங்கும் என்று அமைச்சர் கூறினார்.

முதியோருக்கு விசேஷ திட்டம்

மத்திய அரசு முதியோருக்கான பிரத்யகமான புதிய திட்டம் ஒன்றை அறிவித்து செயல்படுத்தி வருவகிறது. இத்திட்டம் தமிழ்நாட்டில் தென் சென்னையிலும் கன்னியாகுமரியிலும் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் தேர்ந்தெடுக்கபட்ட முதியவர்களுக்கு கண் கண்ணாடி, சக்கர நாற்காலி, செயற்கைப் பல் செட் உள்ளிட்டவை வழங்கப்படும் என்று அமைச்சர் கூறினார்.

10ம் வகுப்புகளுக்கு மேற்பட்ட வகுப்புகளுக்கான ஷெட்யூல்ட் வகுப்பு மாணவ மாணவியருக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகை மத்திய அரசு அறிவித்த நெறிகளின் படி அந்தந்த மாணவ மாணவியரின் வங்கி கணக்குகளில் செலுத்தப்பட வேண்டும். இதற்கென அந்தந்த மாநிலங்களில் வலைதளங்களை உருவாக்கி விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் மட்டுமே பெற வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டதாக அமைச்சர் கூறினார். மத்திய அரசின் நெறிமுறைகளின்படி செயல்படாத மாநிலங்களுக்கு இனி மானியங்கள் வழங்கப்பாடது என்று கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டதாகவும் அமைச்சர் கிருஷ்ணன் பால் குர்ஜர் கூறினார்.

ஓரிரு வாரங்களில்…

ஜி.லதாகிருஷ்ண ராவ் முன்னதாக கூட்டத்தில் பேசிய மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத் துறைச் செயலர் ஜி.லதாகிருஷ்ண ராவ் கூறுகையில், எஸ்.சி., எஸ்.டி. பள்ளி மாணவர்களின் வங்கிக் கணக்குடன் ஆதார் எண் இணைக்கப்பட்டது தொடர்பான எந்தவொரு விவரங்களையும் தமிழகம், கேரளம், புதுச்சேரி போன்ற சில மாநிலங்கள் இன்னும் சமர்ப்பிக்கவில்லை. இந்த விவரங்களை உடனடியாக, ஓரிரு வாரங்களில் இந்த மாநிலங்கள் சமர்ப்பிக்க வேண்டும். அப்போதுதான் இந்தத் திட்டத்துக்கான நிதியை மத்திய அரசு விடுவிக்கும். அவ்வாறு குறிப்பிட்ட காலத்துக்குள் விவரங்களைச் சமர்ப்பிக்கவில்லை எனில், நிதி ரத்து செய்யப்படும்.

இந்த வார ராசிபலன் - 24.06.2018 முதல் 30.06.2018 வரை | Weekly Tamil Horoscope from 24.06.2018 to 30.06.2018

Kashmiri Capscicum Chicken Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து