காரைக்குடி.-காரைக்குடி அழகப்பாபல்கலைக்கழக அறிவியல் வளாகத்தில் அமையப் பெற்றுள்ள பல்கலைக்கழக அறிவியல் கருவியியல் மையத்திலுள்ள (ருniஎநசளவைல ளுஉநைnஉந ஐளெவசரஅநவெயவழைn ஊநவெசந) கருவிகளின் பயன்பாட்டுத் தொடக்கவிழா நடைபெற்றது.
அழகப்பாபல்கலைக்கழகத் துணைவேந்தர் பேரா. சொ. சுப்பையா இந்நிகழ்ச்சிக்கு தலைமையேற்று உரையாற்றுகையில், இம்மையத்தில் ஆராய்ச்சிக்குத் தேவையான உயர் தொழில்நுட்பக் கருவிகள் அனைத்தையும் ஓரிடத்தில் ஒருங்கிணைத்து அனைத்து ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் இப்பகுதியைச் சார்ந்த ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றார். இதன் மூலம் அக்கருவிகளின் பயன்பாட்டை அதிகரிக்கச் செய்யமுடியும் எனவும் குறிப்பிட்டார். இம்மையத்தில் தற்போது ரூ.9 கோடியளவில் அறிவியல் தொழில் நுட்பகருவிகள் உள்ளதாகவும், சுமார் ரூ.10 கோடி மதிப்பீட்டிலுள்ள புதிய கருவிகள் கூடுதலாக நிறுவப்பட உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இக்கருவிகளை மாணவர்கள் திறம்படபயன்படுத்தி உலகத்தரத்திற்கு இணையாக தங்களது ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அவ்வாறு மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகள் அனைத்தும் சமுதாயத்திற்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
பேரா. எஸ்.பி. தியாகராஜன், சென்னைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் மற்றும் முதன்மையர் (ஆராய்ச்சி), ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழகம், சென்னை, அவர்கள் இம்மையத்தினை தொடங்கிவைத்து, சிறப்புரையாற்றுகையில், அழகப்பாபல்கலைக்கழகத்தின் அறிவியல் வளாகத்திலுள்ள துறைகள் அனைத்தும் உயர் கல்வி சார்ந்த உட்கட்டமைப்பு வசதிகள் மிகச் சிறப்பாகவும், மாணவர்கள் திறம்பட படித்திட ஏதுவாகவும், உள்ளதாக பாராட்டினார். இந்த உட்கட்டமைப்புகளை பல்கலைக்கழகம் செய்திருப்பது ஓர் இமாலயசாதனை எனத் தெரிவித்தார். மேலும், இப்பல்கலைக்கழகத்தில் நிர்வாக அதிகாரிகள் பேராசிரியர்கள், மற்றும் மாணவர்களிடையே உள்ள பணிக் கலாச்சாரம் மிகவும் சிறப்பாக உள்ளது எனப் பாராட்டினார். இவ்வசதிகளை உடைய இப்பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி பூங்காக்கள், புதியகண்டு பிடிப்புகளை உருவாக்கும் சூழல், புதிய தொழில் தொடங்குவதற்கு உதவிடும் மையங்கள், மற்றும் பல்கலைக்கழகமும் தொழிற்சாலைகளும் இணைந்து செயல்படும் மையங்கள் ஆகியன தொடங்கப்பட வாய்ப்புகள் சிறப்பாக உள்ளதாக கூறினார்.
இவ்விழாவில் பல்கலைக்கழகப் பதிவாளர் முனைவர் வி. பாலச்சந்திரன், திரு. ரங்கநாதன் ராகவன்,பொது மேலாளாளர்,திரு. தேவ் சந்திரன், பாஸ்ட் டிராக் லீடர், ஜி.யி. ஹெல்த்கேர் லைப் சயின்சஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
அழகப்பாபல்கலைக்கழகம் மற்றும் ஜி.யி. ஹெல்த்கேர் லைப் சயின்சஸ், பெங்க@ரூ ஆகியன இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டன. இதன் மூலம் ஆசிரியர்களும், மாணவர்களும், உயிர் தொழில் நுட்பம் சார்ந்த துறையில் வெகுவாக பயனடைவார்கள்.
பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்கள் பேரா. எஸ்.எம். ராமசாமி,பேரா. பி. சுபாசுசந்திரபோசு, பேரா. ஜெ. ஜெயகாந்தன், பேரா.எ. நாராயணமூர்த்தி மற்றும் பேரா. கே. குருநாதன், மற்றும் புலமுதன்மையர்கள், அறிவியல் வளாக இயக்குநர் முனைவர் இராமராஜ், அறிவியல் துறைபேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.
அறிவியல் கருவியியல் மைய இயக்குனர் பேரா. கே. சங்கரநாராயணன் அனைவரையும் வரவேற்றார். துணை இயக்குநர் முனைவர் வி. தருமன் நன்றி கூறினார்.