முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கத்திற்கு தடை விதிக்க மறுப்பு - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

புதன்கிழமை, 20 செப்டம்பர் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்த சபாநாயகரின் உத்தரவுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் நேற்று மறுப்பு தெரிவித்துவிட்டது. மேலும், இந்த வழக்கில் அடுத்த உத்தரவு வரும் வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கூடாது என்றும், வழக்கு முடியும் வரை 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க கூடாது என்றும் உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம் வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை அக்டோபர் 4-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

கவர்னரிடம் கடிதம்

டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவான 21 எம்.எல்.ஏ.க்களில் 19 பேர் கடந்த மாதம் கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும் எனவே அவருக்கு கொடுக்கும் ஆதரவை திரும்பப் பெற்றுக் கொள்வதாக கடிதம் கொடுத்தனர்.

சபாநாயகர் நோட்டீஸ்

இது கட்சிக்கு எதிரான செயல் என்றும் எனவே 19 எம்.எல்.ஏ.க்கள் மீதும் நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சபாநாயகர் தனபாலிடம் அரசு தலைமை கொறடா ராஜேந்திரன் பரிந்துரை செய்தார். இதை ஏற்று 19 எம்.எல்.ஏ.க்களுக்கும் நோட்டீசு அனுப்பி சபாநாயகர் விளக்கம் கேட்டார்.

தகுதி நீக்க நடவடிக்கை

அப்போது கம்பம் தொகுதி எம்.எல்.ஏ. ஜக்கையன் மட்டும் டி.டி.வி.தினகரன் அணியில் இருந்து பிரிந்து மீண்டும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்தார். மற்ற 18 எம்.எல்.ஏ.க்களையும் செப். 18-ம் தேதி தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் அதிரடி நடவடிக்கை எடுத்தார். இது தமிழக அரசிதழிலும் அன்றே உடனடியாக வெளியிடப்பட்டது. 18 எம்.எல்.ஏ.க்கள் நீக்கம் செய்யப்பட்டிருப்பது பற்றி தேர்தல் ஆணையத்துக்கும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது.

உயர்நீதிமன்றத்தில் வழக்கு

தகுதி நீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 18 எம்.எல்.ஏ.க்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஏற்கனவே முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்ககோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்குடன் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 18 பேரின் தகுதிநீக்கம் குறித்த மனுக்களும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிபதி துரைசாமி அறிவித்தார்.

இருதரப்பும் வாதம்

அதன்படி நேற்று 18 எம்.எல்.ஏ.க்களின் மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. 18 எம்.எல்.ஏ.க்கள் சார்பில் மூத்த வக்கீல்கள் சல்மான் குர்ஷித், துஷ்யந்த் தவே, சபாநாயகர் தரப்பில் அரிமா சுந்தரம் ஆகியோர் ஆஜரானார்கள். இருதரப்பு சார்பிலும் நேற்று வாதம் நடைபெற்றது.

தினகரன் தரப்பு வாதம்

தினகரன் தரப்பில்  தாங்கள் கட்சி தாவல் தடை சட்டத்தை  மீறவில்லை என வக்கீல் துஷ்யந்த் தவே வாதிட்டார்.  சபாநாயகரின் நடவடிக்கை நீதிக்கு எதிரானது. பதவி காலம் முடிய 4 ஆண்டுகள் உள்ள நிலையில் தகுதி நீக்க நடவடிக்கை சரியானது இல்லை என வாதிடப்பட்டது. பிப்ரவரியில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு வாக்களித்தோம். எம்.எல்.ஏக்கள் வேறு எந்த கட்சிக்கும் செல்லவில்லை. எடியூரப்பா வழக்கில் சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பு இந்த வழக்கிற்கும் பொருந்தும் என வாதிடபட்டது.

சபாநாயகர் தரப்பு வாதம்

சபாநாயகர் தரப்பில் வக்கீல் அரிமா சுந்தரம் வாதிட்டார்.  வழக்கிற்கு தேவையில்லாத வாதம் முன் வைக்கப்படுகிறது. நீதிமன்றத்தில் மத்திய அரசை குறை கூறக்கூடாது.  சபாநாயகர் குறித்து கண்மூடித்தனமாக குற்றச்சாட்டுகளை வைப்பது கண்டனத்திற்குரியது. அரசு, சபாநாயகர் மீது குற்றசாட்டுகளை வைப்பதால் விளக்கம் அளிக்க கூடுதல் அவகாசம் தேவை. பதில் அளிக்க 10 நாட்கள் கால அவகாசம் தேவை. அதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கபடாது.பெரும்பான்மையை நிரூபிக்க போடப்பட்டுள்ள தடையை தேவைப்பட்டால் நீட்டிக்கலாம் என வாதிட்டார்.
பெரும்பான்மையை நிரூபிப்பது குறித்து முதல்வர் அலுவலகத்தில் இருந்து எந்த தகவலும் இல்லை என  கவர்னர்  தரப்பில் வாதம் முன்வைக்கபட்டது.

தடைவிதிக்க மறுப்பு

பின்னர் பெரும்பான்மையை நிரூபிக்க கோரிய வழக்கில் தி.மு.க தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல் வாதிட்டார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி துரைசாமி, இந்த வழக்கில் அடுத்த உத்தரவு வரும் வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கூடாது என்றும், வழக்கு முடியும் வரை 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க கூடாது என்றும் உத்தரவிட்டார். 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட சபாநாயகரின் உத்தரவுக்கு தடை விதிக்கவும் அவர் மறுத்துவிட்டார்.

மேலும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் பேரவைச்செயலாளர், முதல்வர், அரசு கொறடா பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை அக்டோபர் 4-ம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தேர்தல் நடத்த தடை

எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கு முடியும் வரை 18 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த அறிக்கை வெளியிடக் கூடாது. நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கூடாது என்ற உத்தரவு, மறுஉத்தரவு வரும் வரை நீட்டிக்கப்படுகிறது என்று நீதிபதி உத்தரவிட்டார். அக்டோபர் 4-ம் தேதிக்குள் சட்டசபை செயலாளர், கொறடா, முதல்வர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை அக்டோபர் 4-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து