முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாகை, தரங்கம்பாடியில் ரூ.170 கோடி மதிப்பில் நவீன மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

புதன்கிழமை, 20 செப்டம்பர் 2017      தமிழகம்
Image Unavailable

நாகை : நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடியில் 170 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 1054 விசைப்படகுகளும், 6917 கண்ணாடி நாரிழை படகுகளும் பாதுகாப்பாக நிறுத்துவதற்கான வசதி, பிரதான மற்றும் துணை அலை தடுப்புச்சுவர்கள், மீன் ஏலக்கூடம், வலை பின்னும் கூடம், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, அலுவலக கட்டிடம், சாலை வசதிகள் போன்ற அடிப்படை வசதிகளுடன் கூடிய நவீன மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்படும் என்று நேற்று நாகையில் நடைப்பெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவிலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

நாகப்பட்டினத்தில் நேற்று நடைப்பெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது.,

குடிமராமத்து என்னும் திட்டம் விவசாயிகளின் கனவு திட்டம்.  இந்த மாவட்டத்தில் விவசாயம் சிறப்பாக நடைபெற வேண்டுமென்பதற்காக மறைந்த முதல்வர் ஜெயலலிதா கண்ட கனவை நனவாக்க வேண்டுமெனபதற்காக குடிமராமத்து என்ற அற்புதமான திட்டத்தை துவக்கி, விவசாயிகள் பங்களிப்போடு இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது என்று தெரிவித்துக் கொள்கிறேன். ஏரிகளில் உள்ள வண்டல் மண்ணை விவசாயிகள் இலவசமாக எடுத்து, தங்கள் நிலங்களுக்கு இட்டு அதிக மகசூலைப் பெருக்குவதற்கு அம்மாவினுடைய அரசு திட்டமிட்டு இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு, பணிகள் நிறைவுபெறவுள்ளன. இந்தத் திட்டத்தின் மூலமாக தூர்வாரப்படுவதால், இந்தப் பகுதியிலே பருவ காலங்களில் பெய்கின்ற மழைநீரை ஏரிகள், குளங்கள், குட்டைகளில் அதிக நீர் சேமிக்க இயலும். நிலத்தடி நீர் உயர்வதால் விவசாயிகளுக்குத் தேவையான நீர் கிடைக்கின்றது. குடிநீர் பிரச்சினையும் தீர்க்கப்படுகின்றது. இப்படிப்பட்ட அற்புதமான திட்டத்தை இந்த அரசு நிறைவேற்றியிருக்கின்றது.

பொதுப்பணித்துறை மூலமாக, ஆசிய வளர்ச்சி வங்கி திட்டப் பணிகள், அரிச்சந்திரா நதியை நவீனப்படுத்துவதற்காக ரூபாய் 257.74 கோடி, அடப்பாறு ரூபாய் 168.35 கோடி, பாண்டவையாறு ரூபாய் 100.80 கோடி, வெள்ளையாறு ரூபாய் 178.17 கோடி,  வளவனாறு வடிகால் 44.62 கோடி, வேதாரண்யம் கால்வாய் ரூபாய் 32.18 கோடி, மின்இறவை பாசனங்கள் ரூபாய் 14.59 கோடி, இப்படி மற்றவை 164.21 கோடி, ஆகமொத்தம் ரூபாய் 960.66 கோடி இந்த மாவட்டத்தில் இருக்கின்ற விவசாயப் பெருங்குடி மக்களின் நன்மைக்காக அம்மா அவர்கள் போட்ட திட்டம். ஒரு நாட்டினுடைய விவசாயி, நாட்டின் முதுகெலும்பாகத் திகழ்கின்றான். அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கவேண்டுமென்று சொல்லி  அம்மாவின் அரசு இவ்வளவு திட்டங்களை அறிவித்து, இன்றைக்கு இந்த திட்டங்களெல்லாம் நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

புதிய அறிவிப்புகள்

நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடியில் 170 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 1054 விசைப்படகுகளும், 6917 கண்ணாடி நாரிழை படகுகளும் பாதுகாப்பாக நிறுத்துவதற்கான வசதி, பிரதான மற்றும் துணை அலை தடுப்புச்சுவர்கள், மீன் ஏலக்கூடம், வலை பின்னும் கூடம், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, அலுவலக கட்டிடம், சாலை வசதிகள் போன்ற அடிப்படை வசதிகளுடன் கூடிய நவீன மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்படும்.  வரும் நிதியாண்டில் இத்திட்டப் பணிகள் துவக்கப்படும். இத்திட்டத்தினால் தரங்கம்பாடி உள்ளிட்ட சின்னமேடு, சின்னங்குடி, தாழம்பேட்டை, புதுப்பேட்டை, பெருமாள்பேட்டை, வெள்ளகோவில், குட்டியான்டியூர், சந்திரபாடி மற்றும் சின்னூர்பேட்டை பத்து கிராமங்களில் உள்ள 14,470 மீனவர்கள் பயனடைவார்கள்.

நாகப்பட்டினம் மாவட்டம் வெள்ளப்பள்ளம் மீனவ கிராமத்தில் 152 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 100 விசைப் படகுகள் மற்றும் 1000 கண்ணாடி நாரிழை படகுகளும்,  பாதுகாப்பாக நிறுத்துவதற்கான வசதி, பிரதான மற்றும் துணை அலை தடுப்பு சுவர்கள், மீன் ஏலக்கூடம், வலை பின்னும் கூடம், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, அலுவலக கட்டிடம், சாலை வசதிகள் மற்றும் சகல வசதிகளுடன் கூடிய ஒரு நவீன மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும்.  வரும் நிதியாண்டில் இப்பணிகள் துவக்கப்படும். இத்திட்டத்தினால் காமேஸ்வரம், விழுந்தமாவடி, வானவன்மகாதேவி, வெள்ளப்பள்ளம், நாலுவேதபதி, புஷ்பவனம் ஆகிய 6 மீனவ கிராமங்களைச் சார்ந்த 7,176 மீனவர்கள் பயனடைவார்கள்.

நாகப்பட்டினம் மாவட்டம், ஆற்காட்டுத்துறையில் ஒரு நவீன மீன்பிடி துறைமுகம் அமைப்பதற்கான சாத்தியகூறு ஆய்வுகள் உடனடியாக மேற்கொள்ளப்படும். இந்த ஆய்வுக்குத் தேவையான நிதி  இந்த ஆண்டு ஒதுக்கீடு செய்யப்படும். இத்திட்டத்தினால் ஆற்காட்டுத்துறை உள்ளிட்ட  மணியன்தீவு, கோடியக்காடு, கோடியக்கரை, செருதலைக்காடு, பன்னல், சிந்தாமணிக்காடு, அன்னபேட்டை, கோவில்தாவு, வெள்ளமணல், வாய்மேடு ஆகிய 11 மீனவ கிராமங்களைச் சேர்ந்த  மீனவர்கள் பயன் பெறுவார்கள்.

நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை நகராட்சியில் தற்போது இரண்டு பேருந்து நிலையங்கள் இயங்கி வருகின்றன.  இருப்பினும், இங்கு நிலவி வரும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாக நகராட்சிக்கு அருகே உள்ள மணக்குடி கிராமத்தில் புதிய பேருந்து நிலையம் தனியார் பங்களிப்புடன் (ஞஞஞ ஆடினந) சுமார் 13.77 ஏக்கர் நிலத்தில் அமைக்கப்படும்.  

நாகப்பட்டினம் மாவட்டத்தில் மழைக்காலத்தில் வீணாகும் உபரிநீரினை சேமிக்கவும், நிலத்தடி நீர்மட்டத்தினை உயர்த்திடும் வகையிலும், கடல் நீர் உட்புகாமல் தடுத்திடும் பொருட்டும்,

சீர்காழி வட்டம், காவேரி பூம்பட்டினம், தர்மகுளம் அருகில் காவிரி ஆற்றின் குறுக்கே ஒரு தடுப்பணையும்,  சீர்காழி வட்டம், திருநகரியில், வெள்ளப்பள்ளம் உப்பனாற்றின் குறுக்கே ஒரு தடுப்பணையும்,  வேதாரண்யம் வட்டம், ஏகராசபுரத்தில் சக்கிலிய வாய்க்கால் குறுக்கே ஒரு தடுப்பணையும், வரும் நிதியாண்டில் (2018-2019) கட்டப்படும். 

மேலும் அடுத்த நிதியாண்டில் (2019-2020),   கீழ்வேளூர் வட்டம், கருவேலங்கடையில் கடுவையாற்றின் குறுக்கே ஒரு தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தஞ்சாவூர், மன்னார்குடி, திருத்துறைபூண்டி, வேதாரண்யம் வழியாக கோடியக்கரையை இணைக்கும் 106.86 கிலோமீட்டர் நீளமுள்ள மாநில நெடுஞ்சாலை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்கள் வழியாக செல்கிறது. இம் மாநில நெடுஞ்சாலையை தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்திட மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் மயிலாடுதுறை நகராட்சிக்கு 16.880 கிலோமீட்டர் நீளமுள்ள புறவழிச்சாலை அமைக்கப்படும். நாகப்பட்டினம் மாவட்டம், நாகப்பட்டினம் காவல் உட்கோட்டத்திலுள்ள திட்டச்சேரி காவல் நிலையம் மற்றும் நாகூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமங்களை பிரித்து பொதுமக்களின் நலன் கருதி நாகூர் வட்டம் திருக்கண்ணபுரத்தில் ஒரு புதிய காவல் நிலையம் தோற்றுவிக்க இந்த அரசு பரிசீலனை செய்யும். இவ்வாறு முதல்வர் எடப்பாடி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து