முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எங்களது தொலைபேசி உரையாடலை ஒட்டு கேட்கிறது மத்திய அரசு: கர்நாடக முதல்வர் சித்தராமையா குற்றச்சாட்டு

வியாழக்கிழமை, 21 செப்டம்பர் 2017      இந்தியா
Image Unavailable

பெங்களூரு : காங்கிரஸ் தலைவர்களின் தொலைபேசி உரையாடலை மத்திய அரசு ஒட்டுக் கேட்பதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா குற்றம்சாட்டி உள்ளார்.

பெங்களூருவில் சமீபத்தில் நடந்த பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் முன்னாள் துணை முதல்வர் ஆர்.அசோக் கூறியபோது,

 “முதல்வர் சித்தராமையா உளவுத்துறை மூலமாக பாஜக நிர்வாகிகளின் தொலைபேசி உரையாடலை ஒட்டு கேட்டு வருகிறார். இதன் மூலம் பாஜகவினரின் தேர்தல் வியூகத்தை அறிந்து, அதற்கேற்றவாறு காங்கிரஸ் காய்களை நகர்த்தி வருகிறது. இது தொடர்பான ஆதாரங்களை விரைவில் வெளியிடுவேன்” என்றார்.

இதுகுறித்து சித்தராமையா கூறியபோது, “நான் யாருடைய தொலைபேசி உரையாடலையும் ஒட்டு கேட்கவில்லை. எதிர்க்கட்சி தலைவர்களின் தொலைபேசி உரையாடலை ஒட்டு கேட்கும் அளவுக்கு காங்கிரஸ் அரசு தரம் தாழ்ந்துவிடவில்லை. அசோக்கின் குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது. மத்திய அரசுதான் எங்களின் தொலைபேசி உரையாடலை ஒட்டு கேட்கிறது.

மத்திய அரசு எதிர்க்கட்சித் தலைவர்களின் தொலைபேசி உரையாடலை ஒட்டு கேட்டு வருவதாக ஏற்கெனவே புகார் எழுந்தது. இந்நிலையில் கர்நாடகாவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருப்பதால் காங்கிரஸ் கட்சியினரின் தொலைபேசி உரையாடலை ஒட்டு கேட்டு வருகிறது. மத்திய பாஜக அரசு தொலைபேசி உரையாடலை ஒட்டு கேட்பது அனைவருக்கும் தெரிந்த தகவல் என்பதால், யாரும் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை” என்றார். சித்தராமையாவின் இந்த குற்றச்சாட்டு கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கர்நாடக காவல் துறை அமைச்சர் ராமலிங்கரெட்டி கூறியபோது, “எங்கள் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள் உட்பட 35-க்கும் மேற்பட்டோரின் தொலைபேசி உரையாடலை மத்திய அரசு ஒட்டு கேட்டு வருகிறது. இது தொடர்பான உறுதியான தகவல் எனது கவனத்துக்கு வந்துள்ளது. இதேபோல காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக மத்திய அரசு வருமான வரித்துறை, சி.பி.ஐ, அமலாக்கத்துறை ஆகியவற்றையும் உள்நோக்கத்தோடு பயன்படுத்தி வருகிறது” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து