முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அத்தியாவசிய பொருட்கள் தேவையான அளவுக்கு கையிருப்பில் உள்ளது - அமைச்சர் காமராஜ் தகவல்

செவ்வாய்க்கிழமை, 17 அக்டோபர் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : அத்தியாவசிய பொருட்கள் தேவையான அளவுக்கு கையிருப்பில் உள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.

அமைச்சர் திடீர் ஆய்வு

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், சென்னை,கோபாலபுரம் அமுதம் நியாய விலை அங்காடிகள் மற்றும் அமுதம் பல்பொருள்சிறப்பங்காடி ஆகியவற்றில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். பொது விநியோகத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் விலையில்லா அரிசி, மானிய விலையில்  வழங்கப்படும் சர்க்கரை, கோதுமை மற்றும் சிறப்பு பொது விநியோகத்திட்டத்தின் கீழ்  வழங்கப்படும் பருப்பு, பாமாயில் ஆகியவை உணவு பொருள் வழங்கல் துறை  ஆணையரின் மாத ஒதுக்கீட்டின்படி, கிடங்கிலிருந்து நியாயவிலை அங்காடிகளுக்கு  நகர்வு செய்யப்பட்டிருப்பதையும், அங்காடிகளில் போதுமானஅளவு இருப்பு வைத்து  குடும்ப அட்டைதாரர்களுக்கு சீரான முறையில் விநியோகம்செய்யப்பட்டு வருவதையும்  ஆய்வின் போது அமைச்சர் உறுதி செய்தார்.

பொருட்கள் இருப்பு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு. அரிசி 98 சதவீதமும் சர்க்கரை 98 சதவீதமும், கோதுமை 97 சதவீதமும், பருப்பு 96 சதவீதமும், பாமாயில் 96 சதவீதமும், கடைகளுக்கு அனுப்பப்பட்டு விற்பனையாகி வருகிறது. இதுபோக மேலும், கிடங்குகளில் அத்தியாவசியப் பொருட்கள் தேவையான அளவில் கையிருப்பில் உள்ளதாகவும், அரிசி 1,17,262 மெ.டன்னும், சர்க்கரை 40,063 மெ.டன்னும், கோதுமை 9,989 மெ.டன்னும், பருப்பு 11,085 மெ.டன்னும், பாமாயில் 35,60,817பாக்கெட்டுகளும் கையிருப்பில்  உள்ளதாக தெரிவித்தார்.

பொருட்கள் விநியோகம்

நியாய விலை அங்காடிகள் ஆய்வின்போது, அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் தேவைக்கேற்ப தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறதா என்பதைக் கேட்டறிந்த அமைச்சர் காமராஜூடம் நியாய விலை அங்காடிகள் மூலம் தரமான பொருட்கள் சரியான எடையுடன் சீரான முறையில் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன என்று பொது மக்கள் தெரிவித்தனர். இந்த ஆய்வின் போது கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக  இயக்குநர் சுதாதேவி உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை  ஆணையாளர் எஸ்.மதுமதி மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து