முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிராமங்களில் ‘இண்டர்நெட்’: தமிழகத்துக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு: தமிழக அரசு தகவல்

வெள்ளிக்கிழமை, 20 அக்டோபர் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை, தமிழகத்தில் அனைத்து கிராமங்களையும் கண்ணாடி ஒளி இழை மூலம் இணைத்து கேபிள் டி.வி., மின்னாளுமை சேவை உட்பட அனைத்து சேவைகளையும் இணையம் மூலம் பெற மத்திய அரசு 1231 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. ஏற்கனவே மறைந்த முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியபடி இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

மறைந்த முதல்வர் ஜெயலலிதா கடந்த 14.9.2015 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், அனைத்து மாநிலங்களிலும் உள்ள கிராம ஊராட்சிகளை இணைத்து அரசின் சேவைகளை இணையம் மூலமாக பொதுமக்கள் பெற்று பயன்பெறும் வகையில் பாரத்நெட் என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இத்திட்டம் தமிழகத்தில் தமிழ்நாடு அரசின் மூலமாகத்தான் செயல்படுத்தப்பட வேண்டும் என நான் வலியுறுத்தியதின் அடிப்படையில் மத்திய அரசு இத்திட்டத்தினை தமிழ்நாடு அரசே செயல்படுத்திட ஒப்புதல் அளித்துள்ளது.

இதன்படி, தமிழ்நாட்டிலுள்ள 12,524 கிராம ஊராட்சிகளும் ஆப்டிகல் பைபர் மூலம் இணைக்கப்பட்டு தமிழக அரசின் பல்வேறு சேவைகளை பொதுமக்கள், தங்கள் கிராமங்களில் இருந்தே இணையம் மூலமாக பெற்று பயனடையும் வகையில் இத்திட்டம் நிறைவேற்றப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துகொள்கிறேன். இத்திட்டத்தினை 3 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் மத்திய அரசின் பங்களிப்புடன் தமிழக அரசே செயல்படுத்தும். இத்திட்டத்தினைச் செயல்படுத்துவதற்கென தமிழ்நாடு பைபர்நெட் கார்ப்பரேஷன் என்ற ஒரு தனி அமைப்பு உருவாக்கப்படும் என அறிவித்திருந்தார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அறிவிப்பிற்கிணங்க, தமிழ்நாடு பைபர்நெட் கார்ப்பரேஷன் நிறுவனம் உருவாக்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டு இந்நிறுவனத்திற்கு தமிழ்நாடு அரசின் பங்கு முதலீடாக ரூ.50 லட்சம் ஒதுக்கப்பட்டது. இந்நிறுவனத்தினை பதிவு செய்வதற்கான பூர்வாங்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஒப்பந்தம்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அறிவிப்பினை செயல்படுத்துவதற்காக, மத்திய அரசின் தொலைதொடர்பு துறை, பாரத் பிராண்ட்பேன்ட் நெட்வொர்க் லிமிடெட் (BBNL) நிறுவனம் மற்றும் தமிழ்நாடு அரசு ஆகியவற்றிற்கு இடையே முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த 25.4.2017 அன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி முன்னிலையில் பரிமாறிக்கொள்ளப்பட்டது.

இதன்படி, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளையும் கண்ணாடி ஒளி இழை மூலம் இணைக்க ஏதுவாக விரிவான திட்ட அறிக்கை தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு 31.8.2017 அன்று மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

ரூ.1231 கோடி நிதி ஒதுக்கீடு

மத்திய அரசின் தொலைதொடர்பு துறை, மேற்காணும் விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் அளித்து ஆயிரத்து இருநூற்றி முப்பது கோடியே தொண்ணூறு லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதன் மூலம் தமிழ்நாடு அரசின் இணைய சேவைகள், கேபிள் டி.வி சேவைகள், மின்னாளுமை சேவைகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் விரைவில் ஏற்படுத்தப்பட்டு பொதுமக்கள், தங்கள் கிராமங்களில் இருந்தே இணையம் மூலமாக பெற்று பயனடைவர்.

இவ்வாறு அரசு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து