திருவண்ணாமலை மாவட்டத்தில் முருகன் கோவில்களில் சூரம்ஹார விழா: ஏராளமான பக்தர்கள் விரதமிருந்து வழிபாடு

புதன்கிழமை, 25 அக்டோபர் 2017      திருவண்ணாமலை
photo04

 

திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து முருகன் கோவில்களிலும் சஷ்டி விழாவின் நிறைவு நாளான நேற்று சூரசம்ஹார விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் விரதமிருந்து வழிபட்டனர்.

சூரசம்ஹார விழா

இந்து மதத்திலுள்ள 6 வகை வழிபாடுகளில் முருகனை வழிபடுவது கவுமாரம் என்று அழைக்கப்படுகிறது. முருகன் தமிழ்க்கடவுளாக பக்தர்களால் வணங்கப்படுகிறார். முருகன் கோவில்களில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்று கந்த சஷ்டிவிழாவாகும். இவ்விழா ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் அமாவாசை முடிந்து தேய்பிறை பிரதமை தொடங்கி 6 நாட்கள் நடைபெறும். கந்த புராண கதையின்படி சூரர்களை முருகன் வதம் செய்ததை நினைவூட்டுவதாக விழா நடத்தப்படுகிறது. இந்நாட்களில் முருக பக்தர்கள் விரதமிருந்து வழிபடுவார்கள்.

மேலும் ஒவ்வொரு மனிதனும் தன்னிடத்தில் உள்ள ஆணவம், கன்மம், மாயை என்ற முக்கிய குணங்களை ஞானத்தால் வெற்றிபெற வேண்டுமென்று தத்துவத்தை விளக்குவதுதான் சஷ்டி விழாவாகும். அறிவு ஆழமாகவும், அகலமாகவும், கூர்மையாகவும் இருக்க வேண்டுமென்பதை விளக்குவதுதான் முருகன் கையிலுள்ள ஞானவேல் ஆகும். இந்த ஆண்டு சஷ்டி விழா கடந்த 20ந் தேதி தொடங்கியது. திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரம் அடுத்த கம்பத்து இளையனார் சன்னதியில் சிறப்பு வழிபாடுகள் அபிஷேக ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து நேற்று மாலை 6 மணியளவில் முருகன் பராசக்தி அம்பாளிடம் வேல்வாங்கி ஆட்டுக்கிடா வாகனத்தில் எழுந்தருளி மாடவீதிவலம் வந்து சின்னக்கடை தெருவில் வடவீதி சுப்பிரமணியர் கோவில் முன்பு சூரர்களை சம்ஹாரம் செய்தார்.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விரதமிருந்து வழிபட்டனர். இதேபோல் மாவட்டத்தில் அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை வழிபட்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து