முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிவகங்கை மாவட்டத்தில் இன்று எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா: முதல்வர் எடப்பாடி - துணை முதல்வர் ஓ.பி.எஸ் பங்கேற்பு

வெள்ளிக்கிழமை, 17 நவம்பர் 2017      தமிழகம்
Image Unavailable

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் இன்று எம்.ஜி.ஆர்.  நூற்றாண்டு விழா  நடைபெறவுள்ளது. இதில்  முதல்வர்  எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர்  ஒ.பன்னீர்செல்வம்  மற்றும் அமைச்சர்கள்  பங்கேற்கிறார்கள். விழாவில் முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு  முதல்வர் அடிக்கல் நாட்டி ,நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு வழங்குகிறார்.

தமிழக அரசு முடிவு
எம்.ஜி.ஆரின் எண்ணம், குறிக்கோள் மற்றும் செயல் அனைத்தும் ஏழை எளிய மக்களின் வாழ்க்தைத் தரத்தினை முன்னேற்றுவதற்காகவே இருந்தது. அவருடைய வழியை பின்பற்றி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஏழை, எளிய மக்களின் மேம்பாட்டிற்காக பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை அறிவித்து எம்.ஜி.ஆர்.  புகழுக்கு மேலும் பெருமை சேர்த்தார். எம்.ஜி.ஆர்  நினைவை போற்றும் வகையிலும், அவர் ஆற்றிய பணிகள், அவர் பற்றிய வரலாறு இன்றைய இளைஞர்கள் மற்றும் வருங்கால சந்ததியினர் அறிந்திடும் வகையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா தமிழ்நாடு அரசின் சார்பில் மிக சிறப்பாக அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாடிட வேண்டும் என்று  தமிழ்நாடு முதல்வர்தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு அதன் தொடக்க விழா 30.06.2017 அன்று மதுரை மாநகரில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, இந்த விழா பல்வேறு நகரங்களில் நடைபெற்றது.

தற்போது சிவகங்கை மாவட்டத்தில் மன்னர் துரைச்சிங்கம் அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா இன்று சனிக்கிழமை  மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது.  தமிழ்நாடு முதல்வர்எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம்  மற்றும்  அமைச்சர்கள் இவ்விழாவில் பங்கேற்று சிறப்பிக்க உள்ளார்கள். இவ்விழாவிற்கு  துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்  தலைமை வகிக்கிறார்.  மக்களவை துணைத் தலைவர் டாக்டர்.மு.தம்பிதுரைமுன்னிலை வகிக்கிறார். கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர்  க.பாஸ்கரன் சிறப்புரை  ஆற்றுகிறார்.

எம்.ஜி.ஆர். படம் திறப்பு
முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, எம்.ஜி.ஆர்.  திருவுருவப் படத்தினை திறந்து வைத்து ரூ.44.58 கோடி மதிப்பிலான முடிவுற்ற 88 திட்டப் பணிகளை திறந்து வைத்தும், ரூ.34.07 கோடி மதிப்பிலான 127 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும்,  15,689 பயனாளிகளுக்கு ரூ.39.02 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கியும் மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி விழா பேரூரையாற்றுவார்.
இவ்விழாவில்  அமைச்சர் பெருமக்கள், சட்டப் பேரவை துணைத் தலைவர், அரசு தலைமை கொறடா, தமிழ்நாடு அரசின் சிறப்பு பிரதிநிதி (புதுடெல்லி) மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பிஆர்.செந்தில்நாதன், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் பங்கு பெற்று சிறப்பிக்க உள்ளனர்.
 
தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் கிரிஜா வைத்தியநாதன் வரவேற்புரையாற்றுகிறார்.  சிவகங்கை மாவட்ட கலெக்டர் க.லதா நன்றியுரையாற்றுகிறார்.

புகைப்படக் கண்காட்சி
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விழா நடைபெறும் இன்று காலை 10.00 மணியளவில் அமைச்சர்கள் எம்.ஜி.ஆர். சிறப்பு புகைப்படக் கண்காட்சியை திறந்து வைத்து, அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் தொடர்பாக சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பல்வேறு துறைகளின் சார்பாக அமைக்கப்பட்டுள்ள அரங்குகளை பார்வையிடுகின்றனர். அதனைத் தொடர்ந்து, நண்பகல் 1.00 மணியளவில் எம்.ஜி.ஆர் புகழ் பாடும் இன்னிசை நிகழ்ச்சி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். இவ்விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளை  கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர்  க.பாஸ்கரன் , சிவகங்கை மாவட்ட நிர்வாகம் மற்றும் செய்தி மக்கள் தொடர்புத் துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து