முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டிசம்பர் 31-க்குள் ஆர்.கே.நகர் தேர்தலை நடத்த வேண்டும்: தேர்தல் கமிஷனுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 21 நவம்பர் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை, வருகிற டிசம்பர் 31-ம் தேதிக்குள் ஆர்.கே. நகர் தொகுதிக்கு இடைத்தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்ததையடுத்து ஆர்.கே.நகர் தொகுதி காலி இடமாக அறிவிக்கப்பட்டது. அந்த தொகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் பட்டியல் வெளியிட்டது. இந்த நிலையில் தேர்தல் பிரசாரத்தின் போது வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து ஆர்.கே.நகர் தொகுதி தேர்தலை தலைமை தேர்தல் கமி‌ஷன் ரத்து செய்தது. ஆர்.கே.நகரில் மீண்டும் ஆய்வு செய்த பிறகே தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.  இந்த நிலையில் ஆர்.கே.நகர் தொகுதிக்கு உடனே தேர்தல் நடத்த வேண்டும் என்று ரமேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.கே.நகரில் டிசம்பர் 31-ம் தேதிக்குள் இடைத்தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று முன்பு உத்தரவிட்டு இருந்தனர். இதை தொடர்ந்து இடைத்தேர்தல் விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ‘இந்த தொகுதியில் போலி வாக்காளர்கள் அதிகம் பேர் இடம் பெற்றுள்ளனர். போலி வாக்காளர்களை நீக்கிய பிறகே ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்திய தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான வக்கீல் நிரஞ்சன், ‘ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள வாக்காளர் பட்டியலில் உள்ள போலி வாக்காளர்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதில், 45 ஆயிரத்து 819 போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டு விட்டனர்’ என்று கூறினார். அதோடு அதுதொடர்பான அறிக்கையையும் தாக்கல் செய்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், ‘ஆர்.கே.நகர் தொகுதிக்கு எப்போது தேர்தல் நடைபெறும்? ஏற்கனவே டிசம்பர் 31-ம் தேதிக்குள் தேர்தலை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தோமே?’ என்று கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு பதிலளித்த வக்கீல் நிரஞ்சன், ‘டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகையும், அதை தொடர்ந்து பொங்கல் பண்டிகையும் வருகிறது. இந்த பண்டிகை காலங்களை பயன்படுத்தி அரசியல் கட்சியினர், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்களை கொடுப்பார்கள். இதை தடுப்பது கடினம். அதனால், டிசம்பர் 31-ம் தேதிக்கு பின்னர் தேர்தல் நடத்த அனுமதிக்க வேண்டும்’ என்றார். ஆனால் நீதிபதிகள் அதை ஏற்கவில்லை.

‘ஜெயலலிதா இறந்ததை தொடர்ந்து, கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி ஆர்.கே.நகர் தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டது. கிட்டத்தட்ட ஓர் ஆண்டு இந்த தொகுதி காலியாகவே இருந்து வருகிறது. மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் ஓர் ஆண்டாக ஒரு தொகுதியை வைத்திருக்க முடியாது. இந்த வி‌ஷயத்தில் எந்த ஒரு சமரசமும் செய்ய முடியாது. ஏற்கனவே, நாங்கள் பிறப்பித்த உத்தரவின் படி, வருகிற டிசம்பர் 31-ம் தேதிக்குள் ஆர்.கே. நகர் தொகுதிக்கு இடைத்தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து