முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சங்கர் கொலை வழக்கில் நீதிமன்ற தீர்ப்பு: சுப. வீரபாண்டியன், ஜி.ராமகிருஷ்ணன் வரவேற்பு

செவ்வாய்க்கிழமை, 12 டிசம்பர் 2017      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை  :   உடுமலைப்பேட்டை சங்கர் கொலை வழக்கில் கவுசல்யாவின் தந்தைக்கு உள்பட 6 பேருக்கு  தூக்குதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு சாதி தான் பெரியது என்று நினைப்பவர்களுக்கான சம்மட்டியடி என்று அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சங்கர் கொலை வழக்கு தீர்ப்பு குறித்து திராவிடர் இயக்கப் பேரவைத் தலைவர் சுப. வீரபாண்டியன் கூறியுள்ளதாவது : திருப்பூர் நீதிம்ன்றத்தின் தீர்ப்பு சாதி வெறிக்கு வழங்கப்பட்டிருக்கும் தண்டனையாகத் தான் பார்க்க வேண்டும்.

மிகப்பெரிய எச்சரிக்கையாக இந்த தீர்ப்பு இருக்கும், இந்த மண்ணில் எதிர்காலத்தில் ஆணவக் கொலைகள் தடுக்கப்பட வேண்டும் என்றால் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். தூக்கு தண்டனைக் கூடாது என்ற கொள்கையில் இருப்பவன் நான், அதனால் பழிக்கு பழி என்கிற ரீதியில் தூக்கு தண்டனை அளிக்காமல் இரட்டை ஆயுள் தண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனைகளை வழங்க வேண்டும்.

சங்கர் கொல்லப்பட்ட காட்சிகளைப் பார்க்கும் போது யாராக இருந்தாலும் கோபம் வரும். அந்தக் கோபம் மனிதநேய உணர்வோடு மட்டும் இல்லாமல் சாதி எதிர்ப்பு உணர்வைத் தூண்டுவதாக இருக்க வேண்டும். கவுசல்யா தனது வாழ்க்கையையே சாதிக்கு எதிராக அர்ப்பணித்து துணிந்து நின்று போராடி இருக்கிறார் அவரை நான் பாராட்டுகிறேன்.
சாதி அடிப்படையில் கொலை வரை செல்பவர்களுக்கு இந்த தீர்ப்பு ஒரு நல்ல உதாரணமாக இருக்கும். சாதி தான் எல்லாம் என்று கருதும் அனைவருக்குமான சம்மட்டியடி தான் இந்த தீர்ப்பு என்றும் சுப. வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

இதே போன்று சங்கர் கொலை குறித்து கருத்து தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், சங்கர் கொலை என்பது ஒரு சாதி ஆணவக் கொலை. இரண்டு சாதியைச் சேர்ந்த ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொண்டால் அப்படி சாதி மறுப்பு திருமணம் செய்பவர்களை ஆதரிப்பதற்கு பதிலாக இப்படி ஒரு கொலை என்பது சாதி ஆணவக் கொலை தவிர ஒன்றும் இல்லை.

இந்த சாதி ஆணவக் கொலைக்கு எதிராக நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்கது. எதிர்காலத்தில் இப்படிப்பட்ட ஆணவக்கொலைகள் கூடாது என்பதை உணர்த்தக்கூடிய தீர்ப்பு இது. எதிர்காலத்தில் காதல் திருமணங்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும், தடுக்கக் கூடாது. அதனை மீறி திருமணம் செய்பவர்களை கொலை செய்பவர்களுக்கு ஏற்ற ஒரு தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது என்று ஜி. ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து