முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகளிர் சேலஞ்சர் கோப்பை கிரிக்கெட்: இந்தியா கிரீன் அணியை வீழ்த்தி இந்தியா புளூ அணி சாம்பியன்

செவ்வாய்க்கிழமை, 9 ஜனவரி 2018      விளையாட்டு
Image Unavailable

இந்தூர் : இந்திய மகளிர் சேலஞ்சர் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா கிரீன் அணியை வீழ்த்தி இந்தியா புளூ அணி சாம்பியன் 5-வது முறை சாம்பியன் பட்டம் வென்றது.

மூன்று அணிகள் ...

இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகள் கலந்துகொண்ட சேலஞ்சர் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தூரில் 4-ம் தேதி தொடங்கியது. இதில் இந்தியா புளூ, இந்தியா கிரீன் மற்றும் இந்தியா ரெட் ஆகிய மூன்று அணிகள் கலந்துகொண்டன. இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்தியா புளூ மற்றும் இந்தியா கிரீன் அணிகள் தகுதிப்பெற்றன.

இறுதிப்போட்டி

இறுதிப்போட்டி இந்தூர் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்தியா புளூ அணி கேப்டன் மந்தனா பேட்டிங் தேர்வு செய்தார். இதையடுத்து தொடக்க ஆட்டக்காரர்களாக வனிதாவும், மந்தனாவும் களமிறங்கினர். வனிதா 19 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த ஹேமலதாவும் 24 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் மந்தனாவுடன், மோனா ஜோடி சேர்ந்து ரன் சிறப்பாக விளையாடினார்.

மந்தனா அபாரம்

மந்தனா அரைசதம் அடித்தார். அவர் 58 ரன்கள் எடுத்திருந்த நிலையில் எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆகி வெளியேறினார். அவரைத்தொடர்ந்து மோனாவும் 63 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்தவர்கள் ரன்குவிக்க தவறியதையடுத்து இந்தியா புளூ அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்தது. கிரீன் அணி பந்துவீச்சில் அஜுனா பட்டேல், ஆஷா ஆகியோர் தலா மூன்று விக்கெட்களும், ஷிகா பாண்டே, எக்தா பிஷித் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

ராவத் அரைசதம்

இதையடுத்து 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா கிரீன் அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பூனம் ராவத் - ஜெமிமா ஆகியோர் களமிறங்கினர். இந்த ஜோடி நிதானமாக விளையாடி ரன் சேர்த்தது. பூனம் ராவத் அரைசதம் அடித்தார். ஜெமிமா 43 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து வந்தவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இருப்பினும் ஒரு முனையில் பூனம் நிலைத்து நின்று விளையாடினார்.

ப்ரத்யூஷா அபாரம்

சிறப்பாக விளையாடிய பூனம் 88 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரன் அவுட் ஆனார். இதையடுத்து இந்தியா கிரீன் அணி 45.2 ஓவர்களில் 174 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியா புளூ அணி பந்துவீச்சில் ப்ரத்யூஷா 4 விக்கெட்கள் வீழ்த்தினார். இதன்மூலம் இந்தியா புளு அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. சிறப்பாக விளையாடி 63 ரன்கள் மற்றும் ஒரு விக்கெட் கைப்பற்றிய இந்தியா புளூ அணியின் மோனா மெஷ்ராம் ஆட்டநாயகி விருது பெற்றார். இது இந்தியா புளூ அணி வெல்லும் ஐந்தாவது சாம்பியன் பட்டமாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து