அண்டை நாட்டின் பகுதிகளை ஆக்கிரமிக்கும் எண்ணம் இந்தியாவுக்கு இல்லை: பிரதமர் மோடி

புதன்கிழமை, 10 ஜனவரி 2018      இந்தியா
Modi 2017 12 20

புதுடெல்லி: பிற நாடுகளுக்குச் சொந்தமான பகுதிகளைக் கைப்பற்றும் நோக்கமோ, வளங்களைச் சுரண்டும் எண்ணமோ இந்தியாவுக்கு இல்லை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். எந்த நாட்டுடனும் பிரதிபலன் கருதி நட்பு பாராட்டுவதில்லை என்றும் மாறாக மனிதநேயத்துக்கு மட்டுமே இந்தியா மதிப்பளிக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

அருணாசலப் பிரதேச எல்லைக்குள் சீனப் படைகள் அண்மையில் ஊடுருவிய நிலையில், அந்நாட்டுக்கு மறைமுகமாக பதிலடி கொடுக்கும் வகையில் இந்தக் கருத்துகளை பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கடந்த டிசம்பர் இறுதியில் அருணாசலப் பிரதேசத்தின் பைசிங் பகுதியில் சாலை செப்பனிடும் வாகனங்களுடன் (புல்டோஸர்கள்) சீனப் படைகள் மக்களோடு, மக்களாக ஊடுருவின. இதுதொடர்பாக அந்த கிராம மக்கள் அளித்த தகவலையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற இந்திய ராணுவத்தினர் சீனப் படைகளை திரும்பிச் செல்லுமாறு அறிவுறுத்தினர். அவர்களது புல்டோஸர்களையும் பறிமுதல் செய்தனர். இந்த நிகழ்வுகளால் எல்லையில் மீண்டும் போர்ச் சூழல் உருவானது.

இந்நிலையில், தில்லியில் இந்திய வம்சாவளி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் 23 நாடுகளைச் சேர்ந்த 120-க்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளி எம்.பி.க்கள், 17 நகரசபை மேயர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அவர்களிடையே பிரதமர் மோடி பேசியதாவது:
மத்தியில் ஆட்சி மாற்றம் (பாஜக அரசு) ஏற்பட்ட பிறகு பல்வேறு வளர்ச்சி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. காலங்காலமாக பின்பற்றப்படும் நடைமுறைகளை மாற்றும் சீர்திருத்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.


அத்தகைய சீர்திருத்தங்களின் வாயிலாகவே மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என நாங்கள் நம்புகிறோம். இந்திய தேசம் உயரிய மாண்புகளையும், கலாசார நெறிகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. அத்தகைய சிறப்புகளை உலகுக்கே கற்றுக் கொடுக்கும் திறனும் நமக்கு உண்டு. இத்தனை நூற்றாண்டுகளாக பல்வேறு வல்லரசு நாடுகள் சர்வதேச அரங்கில் ஆதிக்கம் செலுத்தி வந்திருக்கலாம். ஆனால், 21-ஆம் நூற்றாண்டானது ஆசியக் கண்டத்தின் ஆதிக்கத்தில் இருக்கப் போகிறது. அதில் இந்தியா மிக முக்கியமான தேசமாக விளங்கப் போகிறது என்பதில் மாற்றமில்லை.

வெளிநாடுகளில் வசித்து வரும் இந்திய வம்சாவளியினர் அனைவருமே உலக அளவில் வியாபித்து நமது தேசத்துக்கு பெருமை தேடித் தந்து வருகின்றனர். அவர்களில் சிலர் பிற நாடுகளின் ஆட்சி அதிகாரத்தில் முக்கியப் பொறுப்பு வகித்து வருகின்றனர். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கும், மேம்பாட்டுக்கும் அவர்கள் பங்களிக்க வேண்டும் என்று இந்தத் தருணத்தில் வலியுறுத்துகிறேன்.

கடந்த மூன்றாண்டுகளாக இந்தியாவில் செய்யப்படும் முதலீடுகளில் ஏறத்தாழ பாதி அளவு அந்நிய நேரடி முதலீடாக இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. குறிப்பாக, கடந்த ஆண்டு மட்டும் 6,000 கோடி டாலர்கள் (சுமார் ரூ.3.7 லட்சம் கோடி) அந்நிய முதலீடு கிடைத்துள்ளது.

இந்தியாவைப் பொருத்தவரை எந்த நாட்டுடனும் பிரதிபலன் கருதி நட்பு பாராட்டியது கிடையாது. மனிதநேயத்துக்கும், மாற்று நாட்டு மக்களின் உயரிய பண்புகளுக்கு மட்டுமே மதிப்பளித்து வருகிறது நமது தேசம். அதேபோன்று வேறு நாட்டுக்குச் சொந்தமான பகுதியை கைப்பற்ற வேண்டும் என்றோ அதன் வளங்களைச் சூறையாட வேண்டும் என்றோ இந்தியா கருதியது கிடையாது என்றார் பிரதமர் மோடி

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து