முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி பட்டாசு கிடங்கில் தீ விபத்து: 17 பேர் உடல் கருகி பலி : உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம்: கெஜ்ரிவால்

ஞாயிற்றுக்கிழமை, 21 ஜனவரி 2018      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி :  டெல்லியில் பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட மிகப் பெரிய தீ விபத்தில் 17 பேர் உடல் கருகி பலியானார்கள். 2 பேர் படுகாயமடைந்தனர். இது குறித்து விசாரணை நடத்த டெல்லி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

டெல்லி தீ தடுப்பு சேவையின் இயக்குநர் ஜி.சி. மிஸ்ரா நிருபர்களிடம் கூறியதாவது: டெல்லி பாவனா தொழிற்பேட்டை பகுதியில் உள்ள 2 அடுக்கு தளத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக சனிக்கிழமை மாலை 6 மணிக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. இதையடுத்து, அங்கு 10க்கும் மேற்பட்ட தீ தடுப்பு வாகனங்களுடன் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டோம். ஏறக்குறைய 3 மணி நேர போராட்டத்துக்குப் பின், தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இந்த கட்டிடத்தில் பட்டாசுகள் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. இந்த தீ விபத்தில் 7 பெண்கள் உள்பட 17 பேர் உயிரிழந்தனர்.

கட்டிடத்தின் கீழ் தளத்தில் இருந்து ஒருவர் உடலும், முதல் தளத்தில் இருந்து 16 பேரின் உடலும் மீட்கப்பட்டன. ஒருவர் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள 2-வது தளத்தில் இருந்து குதிக்கும் போது கால் எலும்பு முறிவு ஏற்பட்டது அவரை காயத்துடன் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளோம். மேலும் காயங்களுடன் 2 பெண்கள் மீட்கப்பட்டனர். இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு மிஸ்ரா தெரிவித்தார்.

டெல்லி ரோகினி பகுதி போலீஸ் துணை ஆணையர் ராஜ்னீஷ் குப்தா கூறுகையில், தீ விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம். உயிரிழப்பை ஏற்படுத்துதல், கவனக்குறைவாக இருத்தல், தீ விபத்தை உண்டாக்கும் விதத்தில் பொருட்களை பதுக்கி வைத்தல், உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளோம். இந்த பட்டாசு கிடங்கை நடத்தி வந்த மனோஜ் ஜெயின், மற்றொருவர் லலித் கோயல் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இது மிகவும் ஆபத்தானதாகும், இந்த வீட்டில் பட்டாசு கிடங்கு செயல்பட்டதா, அல்லது சட்டவிரோத பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வந்ததா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் எனத் தெரிவித்தார்.

இந்த தீ விபத்து குறித்து அறிந்த பிரதமர் மோடி, டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவிக்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவாக குணமடைய வேண்டுகிறேன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நிருபர்களிடம் கூறுகையில், தீ விபத்து குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும் , பட்டாசுகள் வைக்க யார் உரிமம் கொடுத்தது? விபத்து எப்படி நடந்தது? என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார். தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு ரூ. 5 லட்சம் நிதி உதவியும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ. ஓரு லட்சம் நிதி உதவியும் அளிக்கப்படும் எனவும் முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து