முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா என்றாலே வர்த்தகம்தான் முதலீடுசெய்ய வாய்ப்புகள் அதிகம் பிரதமர் மோடி பெருமிதம்

செவ்வாய்க்கிழமை, 23 ஜனவரி 2018      உலகம்
Image Unavailable

டாவோஸ்: இந்தியா என்றாலே வர்த்தகம்தான். இங்கு முதலீடுசெய்ய ஏராளமான வாய்ப்புகள் குவிந்து கிடக்கின்றன என்று பிரதமர் மோடி பெருமிதத்தோடு பேசினார்.

சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் உலகப் பொருளாதார மாநாடு நேற்று நடந்தது. இதில் 60 நாடுகளின் தலைவர்கள், 150-க்கும் மேற்பட்ட உலகத் தலைவர்கள், வர்த்தக நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

கடந்த 20 ஆண்டுகளில் முதல் முறையாக இந்தியப் பிரதமர் ஒருவர், உலகப் பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி நேற்றுமுன்தினம் மாலை சுவிட்சர்லாந்து புறப்பட்டுச் சென்றார்.

டாவோஸ் நகர் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு சுவிட்சர்லாந்து நாட்டு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதன்பின் சுவிட்சர்லாந்து நாட்டு அதிபர் ஆலன் பெர்சட்டை சந்தித்து பிரதமர் மோடி பேச்சு நடத்தினார். இரு நாட்டு உறவுகளையும் எதிர்காலத்தில் எவ்வாறு வலுப்படுத்துவது என்று இரு தலைவர்களும் ஆலோசித்தனர்.

இந்த சந்திப்பு குறித்து பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது-
டாவோஸ் நகர் வந்தபின், சுவிட்சர்லாந்து அதிபர் ஆலன் பெர்சட்டை சந்தித்து பேசினேன். இரு நாட்டு கூட்டுறவை வலுப்படுத்துவது, எதிர்காலத்தில் சிறப்பாக கொண்டு செல்வது குறித்து விவாதித்தோம் .இவ்வாறு அவர் தெரிவித்து இருந்தார்.

அதன்பின், 40 நாடுகளில் உள்ள நிறுவனத் தலைவர்களுடன் சிறிய அளவிலான வட்டமேஜை மாநாடு நடந்தது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அவருடன் வெளியுறவுத்துறையின் வர்த்தகச் செயலாளர் விஜய் கோகலே, வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய் சங்கர், தொழிற்கொள்கை மற்றும் மேம்பாட்டுத்துறையின் செயலாளர் ரமேஷ் அபிஷேக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்துக்கு பின் மத்திய வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
சர்வதேச நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் நடந்த வட்டமேஜை மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். அந்த மாநாட்டில், இந்தியாவில் வளர்ச்சி, அங்குள்ள வாய்ப்புகள் குறித்தும், சமீப காலமாக இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்தும், முதலீட்டுக்கான வாய்ப்புகள் குறித்தும் பேசினார். இந்தியா என்றால் வர்த்தகம்தான். முதலீடு செய்ய ஏராளமான வாய்ப்புகள் குவிந்து கிடக்கிறது என்று பேசினார். இவ்வாறு அதில் தெரிவி்க்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து