தலா 660 மெகாவாட் திறன் கொண்ட 2 அலகுகளை உடைய உடன்குடி அனல் மின் திட்டம்: முதல்வர் அடிக்கல் நாட்டினார்

திங்கட்கிழமை, 29 ஜனவரி 2018      தமிழகம்
Udangudi power 2018 01 29

சென்னை, தூத்துக்குடி மாவட்டத்தில் தலா 660 மெகாவாட் திறன் கொண்ட 2 அலகுகளை  உடைய உடன்குடி அனல் மின் திட்டத்திற்கு முதல்வர் எட்பாடி பழனிசாமி நேற்று அடிக்கல் நாட்டினார். வரும் 2021-ல் இந்த திட்டம் நிறைவடைந்து செயல்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உடன்குடி அனல் மின் திட்டத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று அடிக்கல் நாட்டினார். இத்திட்டம் 2021-ல் செயல்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எரிசக்தி துறை சார்பில் உடன்குடி மிக உய்ய அனல் மின் நிலையம் நிலை-1 அடிக்கல் நாட்டு விழா மற்றும் களப்பணி உதவியாளர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது. விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு உடன்குடி அனல் மின் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்.


வருமானம் பெருகும்

அப்போது அவர் பேசியதாவது:-

இந்தியாவிலேயே தமிழ்நாடு தொழில் துறையில் முதன்மையான இடத்தில் உள்ளது. மாநிலத்தில் தொழில் துறை வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது மின்சாரம் ஆகும். தடையற்ற மின்சாரம் இருந்தால் தான் தொழில்களை சிரமமின்றி நடத்த முடியும். தொழில்கள் சிரமமின்றி நடத்த முடியும் என்ற நிலை இருந்தால் தான், தொழிற்சாலைகள் பெருகும், வேலைவாய்ப்பு அதிகரிக்கும், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க ஆர்வம் காட்டுவார்கள். அதன் மூலம் தனிநபர் வருமானம் பெருகும், நாடும் வளம் பெறும். 

மின்மிகை மாநிலமாக....

தமிழகத்தில் பல்வேறு மின் திட்டங்களை நமது அரசு செயல்படுத்தியதன் காரணமாக தமிழ்நாடு மின் தேவையில் தன்னிறைவு அடைந்தது மட்டுமல்லாமல் மின்மிகை மாநிலமாகவும் திகழ்கிறது. எதிர்வரும் காலங்களில் மாநிலத்தின் எரிசக்தி தேவை வேகமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை எதிர்கொள்ளும் வகையில், பல்வேறு மின் திட்டங்களை விரைந்து செயலாக்கத்திற்கு கொண்டுவர தொடர்ந்து ஆக்கபூர்வமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

புதிய மின் திட்டங்கள்...

அந்த வகையில், 46 ஆயிரத்து 821 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 6 ஆயிரத்து 200 மெகாவாட் அளவிற்கு மின் திட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மேலும் கூடுதலாக, 53 ஆயிரத்து 890 கோடி ரூபாய் மதிப்பீட்டில்  ஆயிரத்து 300 மெகாவாட் அளவிற்கான புதிய மின் திட்டங்கள் நிறுவ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

2 அலகுகள் கொண்ட...

இந்த தொலைநோக்கு பார்வையின் அடிப்படையில், தற்பொழுது, தலா 660 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு அலகுகளை உடைய உடன்குடி அனல் மின் திட்டம் - நிலை-1க்கான பணி ஆணை பாரத மிகுமின் கழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் 2020-2021ஆம் ஆண்டில் செயல்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் இடத்தையும்...

மேலும், செயலாக்கத்திற்கு வரவிருக்கும் பல்வேறு மின் திட்டங்களை கருத்தில் கொண்டு  தற்போது உள்ள மின் தொடர் கட்டமைப்பு, தொடர்ந்து விரிவாக்கப்பட்டு வருகின்றன. அதன் விளைவாக, 2016-2017-ஆம் நிதியாண்டில் தமிழ்நாடு மின்தொடரமைப்பு கழகம் மாநிலத்தில் உயர் அழுத்த மின் பாதை அமைப்பதில் இந்தியாவிலேயே முதல் இடத்தையும், துணை மின் நிலையங்களின் மின்திறனை அதிகப்படுத்துவதில் இந்தியாவிலேயே இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளது. 

இவ்வாறு முதல்வர் எடப்பாடி பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து