விருதுநகர் மாவட்டம் முன்னேற்றம் அடைந்த மாவட்டமாக விரைவில் மாற்றப்படும் மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் உறுதி

புதன்கிழமை, 31 ஜனவரி 2018      விருதுநகர்
nirmala -ktr31 1 18

விருதுநகர், -விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக்கூட்டரங்கில் விருதுநகர் மாவட்டத்தை முன்னோடி மாவட்டமாக மாற்றுவதற்கான அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் புதிய மற்றும் புதுப்பிக்கதக்க ஆற்றல் அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் பிரவீன் குமார், மாநில அரசின் சார்பில் தமிழ்நாடு கைத்தறித் தொழில்கள் வளர்ச்சி கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் டாக்டர்.சந்தோஷ் பாபு மற்றும்   விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.சிவஞானம், முன்னிலையில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன்,  மத்திய நிதி மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்  மற்றும் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.இராஜேந்திரபாலாஜி ஆகியோர் ஆய்வு செய்தனர்.

இந்தஆய்வுக்கூட்டத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்ததாவது:-
மத்திய அரசு நிதி ஆயோக் குழுவின் அறிவுரைப்படி சுகாதராம், கல்வி, சாலைவசதி, குடிநீர் ஆகியவற்றின் அடிப்படையில்  இந்தியாவில் 115 மாவட்டங்களை தேர்ந்தெடுத்து அதற்கு தனி கவனம் செலுத்தி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு துறைகளையும் ஒருங்கிணைத்து அந்த மாவட்டத்தை முற்றிலும் வளர்ச்சியடைந்த மாவட்டமாக மாற்றுவது தான் இத்திட்டத்தின் நோக்கம். இந்தியாவில் 115 மாவட்டங்கள் 12 துறைகளில் பின்தங்கியாக கண்டறியப்பட்டுள்ளது. இவற்றை 2022க்குள் வளர்ச்சியடைந்த மாவட்டமாக மாற்றுவதற்கு மத்திய, மாநில அரசின் மூலமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் விருதுநகர் மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. விருதுநகர் மாவட்டத்தை பின்தங்கிய மாவட்டமாக தேர்வு செய்தற்கு முக்கிய காரணம் ஏழ்மை, அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாதது. மாவட்டத்தில் ஆண் பாலின விகிதத்தை விட பெண் பாலின விகிதம் முன்பைவிட குறைவாக உள்ளது.  அதிலும் திருச்சுழி, நரிக்குடி ஆகிய பகுதிகளில் மிக குறைவாக உள்ளது. திருச்சுழி, நரிக்குடி ஆகிய பகுதிகள் மிகவும் பின்தங்கியும், இந்த பகுதிகளில் வாழும் பெரும்பான்மையான மக்கள் ஏழ்மையாக உள்ளனர். ஆரம்ப பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கணக்குபாடம் குறித்த திறமை தேசிய சராசரியை விட குறைவாக உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைஉறுதித் திட்டத்தில் 3 லட்சத்து 14 ஆயிரம் நபர்கள் உறுப்பினரகளாக உள்ளனர். இது விருதுநகர் மாவட்டத்தின் மக்கள் தொகையில் 15 சதவிகிதம் ஆகும்,  எனவே இவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கி மாற்று வேலை கிடைப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும். பின்தங்கிய பகுதிகளில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள், செவிலியர்கள் குறைவாக உள்ளதாகவும், சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவத்திலும் கூடுதல் கவனம் தேவைப்படகிறது.
  விருதுநகர் மாவட்டத்தில் கல்வி, உணவு, பாதுகாப்பு ,பொது சுகாதாரம், ஊட்டச்சத்து, குழந்தைகள் வளர்ச்சி, நலிவடைந்த தொழில்துறை மேம்பாடு, வேலைவாய்ப்பை அதிகரித்தல், வேளாண்மை, கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளில் தனிகவனம் செலுத்தி அந்த துறைகளை முன்னேற்ற பாதையில் எடுத்து செல்வதற்கு மத்திய, மாநில அரசுத்துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு விருதுநகர் மாவட்டத்தை மிக விரைவில் முன்னேற்றம் அடைந்த மாவட்டமாக மாற்றுவதற்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். என்றார்.
தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தெரிவித்தாவது:-
 தமிழக முதலமைச்சர் தலைமையிலான  அம்மாவின் அரசு, விருதுநகர் மாவட்டத்தை வளர்ச்சியடைந்த மாவட்டமாக மாற்றுவதற்கு மத்திய அரசுடன் இணைந்து செயல்படும். இந்திய நாட்டை காக்கின்ற பணியில் மிகப்பெரிய பொருப்பான மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராக இடம்பெற்றுள்ள தமிழகத்தை சேர்ந்த பெண்மணி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது மிகவும் பெருமைப்படதக்கதாக உள்ளது.
இராஜபாளையம் மற்றும் திருவில்லிப்புத்தூர் பகுதிகள் அதிகளவில் மலைச்சார்ந்த பகுதிகளாக உள்ளது. ஆகையால் இப்பகுதிகளில் இராணுவ பயிற்சி மையம் அல்லது இராணுவ பயிற்சிப்பள்ளி தொடங்கினால் அப்பகுதி மக்களின் வளர்ச்சிக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என்றும்;, சிவகாசியில் சுமார் 10 லட்சம் பேர் பட்டாசுத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். மறைமுகமாக சுமார் 1 கோடி பேர் இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். பட்டாசுத் தொழிலாளர்களை மத்திய அரசு நினைத்தால்தான் அவர்களுக்கு நிரந்தரமாக பாதுகாப்பு வழங்க முடியும்;. டில்லியில் தடைவிதித்ததால் இங்கும் அதுபோன்ற நிலைமை ஏற்பட்டுவிடுமோ என பட்டாசுத்தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு அச்சம் ஏற்படுகின்றது. அந்த அச்சத்தினை போக்கி அங்குள்ள மக்களுக்கு நிலையான வாழ்வாதாரம் கிடைக்கும் வகையில் வழிசெய்ய வேண்டும் என்றும், விருதுநகர் மாவட்டம் பள்ளிக்கல்வியில் தேர்ச்சி சதவிகிதத்தில் தொடர்ந்து மாநிலத்தில் முதலிடம் வகித்து வருகிறது. இருப்பினும் விருதுநகர் மாவட்டத்தில் பின்தங்கிய பகுதிகளான திருச்சூழி, நரிக்குடி ஆகிய பகுதிகளிலுள்ள மாணவர்கள் மேற்படிப்பு படிக்க வசதியாக தொழில்நுட்பக்கல்லூரிகள் அமைப்பதற்கு உதவிகள் புரிய வேண்டும் என்றும் பல்வேறு கோரிக்கைகளை மத்திய பாதுகாப்புதுறை அமைச்சர் வைத்தார் என்றார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.இராதாகிருஷ்ணன், ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மு.சந்திரபிரபா, மாவட்ட வருவாய் அலுவலர் இ.ஆனந்தகுமார்,மாவட்ட ஊரக வளரச்சி முகமை திட்ட இயக்குநர் திலகவதி ,மற்றும் அனைத்துதுறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து