வாகனத்தின் பழைய உரிமையாளரே விபத்துக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

வியாழக்கிழமை, 8 பெப்ரவரி 2018      இந்தியா
SUPREMECOURT 2017 10 30

புது டெல்லி, காரை மற்றவர்களுக்கு விற்பனை செய்தாலும் வாகன பதிவுச் சான்றில் உரிமையாளர் பெயர் மாற்றப்படாமல் இருந்து விபத்து ஏற்பட்டால், காரை ஏற்கனவே வைத்திருந்த பழைய உரிமையாளரே பாதிக்கப்பட்டவருக்கு நஷ்ட ஈடு தர வேண்டும் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த விஜய்குமார் என்பவர் தனக்கு சொந்தமான காரை கடந்த 2007-ம் ஆண்டு ஜூலை மாதம் மற்றொருவருக்கு விற்று விட்டார். காரை வாங்கியவர் 2008-ம் ஆண்டு செப்டம்பரில் வேறொருவருக்கு விற்பனை செய்தார். அவரிடம் இருந்து நவீன் குமார் என்பவருக்கு கார் கைமாறியது. நவீன் குமாரும் அந்த காரை மீர் சிங் என்பவருக்கு விற்று விட்டார். ஆனால், இந்த விற்பனைகளின்போது வாகனப் பதிவு சான்றில் அதை வாங்கிய உரிமையாளர்களின் பெயர் மாற்றப்படவில்லை. காரை முதலில் வைத்திருந்த விஜய்குமார் பெயரிலேயே கார் இருந்து வந்தது.

இந்நிலையில், கடந்த 2009-ம் ஆண்டு மே மாதம் 27-ம் தேதி கார் விபத்துக்குள்ளானது. அப்போது காரை கடைசியாக வாங்கிய மீர் சிங்கின் டிரைவர் ஓட்டி வந்தார். இந்த விபத்தில் கார் மோதி ஒருவர் இறந்து விட்டார். மற்றொருவர் காயமடைந்தார். இது தொடர்பான வழக்கை விசாரித்த வாகன விபத்து இழப்பீடு நடுவர் மன்றம், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக ரூ.3.85 லட்சத்தை பதிவு ஆவணத்தின்படி கார் உரிமையாளராக உள்ள விஜய்குமாரும் காரை ஓட்டி வந்த டிரைவரும் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.


இதை எதிர்த்து விஜய்குமார் தாக்கல் செய்த மனுவை விசாரித்த பஞ்சாப் அரியானா ஐகோர்ட், காரை மற்றவருக்கு விஜய்குமார் விற்று விட்ட நிலையில் அவர் இழப்பீடு தர வேண்டியது இல்லை என்று உத்தரவிட்டது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. மோட்டார் வாகனச் சட்டத்தின்படி யார் பெயரில் கார் உள்ளதோ, அதாவது, காரின் உரிமையாளராக வாகனப் பதிவுச் சான்று ஆவணத்தில் யார் பெயர் உள்ளதோ அவர்தான் இழப்பீடு கொடுக்க வேண்டும் என்று விதி உள்ளதாக வாதிடப்பட்டது. இதையடுத்து ஒருவர் தனது காரை மற்றவர்களுக்கு விற்றால் வாகனப் பதிவுச் சான்றில், யார் காரை வாங்கினார்களோ அவர்களது பெயரில் மாற்ற வேண்டும். அவ்வாறு பெயர் மாற்றப்படாமல் பழைய உரிமையாளரின் பெயரே நீடித்தால், விபத்தின்போது பழைய உரிமையாளரே பாதிக்கப்பட்டவருக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து