கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியம் கருங்குழி, மேட்டுக்குப்பம் ஆகிய பகுதிகளில் ஊரக வளர்ச்சித்துறை, பள்ளிக்கல்வித்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சித்திட்டப் பணிகளை கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வளர்ச்சித்திட்டப் பணிகள்
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியம் கருங்குழி ஊராட்சியில் பிரதமந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீட்டின் பயனாளியிடம் கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஊரக வளர்ச்சித்துறை சார்பில் வீடு கட்டுவதற்கு உரிய கம்பிகள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளதா எனவும், இதுவரை உரிய தொகை வழங்கப்பட்டுள்ளதா எனவும் கேட்டறிந்தார். மேலும் வீடு கட்டும் பணியினை விரைவில் முடிக்க வேண்டுமென பயனாளிகளுக்கும், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கும் அறிவுரை வழங்கினார். இதன் பின்னர் கருங்குழி பகுதியில் தானே வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் 3 பயனாளிகளின் வீட்டினை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து மேட்டுக்குப்பம் பகுதியில் தானே வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீட்டினையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து கருங்குழி பகுதியில் இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளையும் பார்வையிட்ட கலெக்டர் கட்டுமானப்பணிகளுக்கு தரமான செங்கற்கள் மற்றும் கம்பிகள் வழங்கப்பட்டுள்ளதா எனவும், கட்டுமானப்பணிகளுக்கேற்ப அவ்வப்போது உரிய தொகை வழங்கப்படுகிறதா எனவும் பயனாளிகளிடம் கலெக்டர் கேட்டறிந்தார். அதன்பின்னர் குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியம் பாச்சராபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்பள்ளியில் ஆசிரியர்கள் வருகை பதிவேட்டினை பார்வையிட்டு ஆய்வு செய்து எத்தனை ஆசிரியர்கள் உள்ளனர் எனவும், புரொஜக்டர் மூலம் மாணவ, மாணவிகளுக்கு கற்றலின் திறமையினை வெளிப்படுத்தும் வகையில் அவ்வப்போது ஒளிபரப்பப்பட்டு காண்பிக்கப்படுகிறதா என தலைமை ஆசிரியரிடம் கேட்டறிந்தார். மேலும் மாணவ, மாணவிகளின் கற்றலின் திறமையினை பரிசோதிக்கும் வகையில் பாடப்புத்தகங்களை படிக்க சொல்லி கேட்டறிந்தார். இப்பள்ளியின் சத்துணவு கூடத்தினை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து உணவு தயாரித்து வைக்க்ப்பட்டுள்ளதை தரமானதாக உள்ளதா என்ற வகையில் உணவினை சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தார். சத்துணவு வழங்கப்படும் வருகைப்பதிவேட்டினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது சிதம்பரம் வட்டாட்சியர் விஜயா, குறிஞ்சிப்பாடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கே.தமிழ்மணி (வ.ஊ), கே.அசோக்பாபு (கி.ஊ), செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வை.ரவிச்சந்திரன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) அ.கதிரவன் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் பலர் உடனிருந்தனர்.