முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க.வில் 5 லட்சம் இளைஞர்களை புதிய உறுப்பினர்களாக சேர்க்க ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்

வியாழக்கிழமை, 15 பெப்ரவரி 2018      அரசியல்
Image Unavailable

சென்னை, அ.தி.மு.க.வில் 5 லட்சம் இளைஞர்களை புதிய உறுப்பினர்களை சேர்க்க அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முதல்வர் எடப்பாடி தொடங்கிவைத்தார்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்த நாளை, ஜெயலலிதா பேரவையின் சார்பில் எழுச்சியுடன் கொண்டாடுவது தொடர்பாக அம்மா பேரவையின் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம், அ.தி.மு.க. அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது, வருவாய்த்துறை அமைச்சரும் ஜெயலலிதா பேரவை செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தை, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம்; அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தொடங்கி வைத்தார். அப்போது அவர் , ஜெயலலிதாவின் பிறந்த நாளை ஏழை, எளியோர் பயன்பெறும் வகையில் சிறப்பாகக் கொண்டாடுவது குறித்தும், அ.தி.மு.க. உறுப்பினர்களாக உள்ளவர்கள் தங்கள் பதிவை புதுப்பித்தல் மற்றும் புதிய உறுப்பினர்களை சேர்த்தலுக்கான பணிகளை விரைவுபடுத்துவது குறித்தும் ஆலோசனை வழங்கினார்.

70 ஜோடிகளுக்கு இலவச திருமணங்கள்

இதைத்தொடர்ந்து நடைபெற்ற ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்த நாள் விழாவினை  "நாட்டு மக்களின் நல்வாழ்வு தின" மாக, ஜெயலலிதா பேரவை சார்பில் ஆண்டு முழுவதும் கடைப்பிடித்து, அனைத்துப் பிரிவினருக்கும் நலத்திட்ட உதவிகளை வழங்கி, அன்னதானம், இரத்ததானம், கண் தானம் போன்றவற்றை வழங்கி, ஜெயலலிதாவின் பிறந்த தின விழாவினை, உலகமே பாராட்டுகின்ற வகையில், அம்மா பேரவை சார்பில் கொண்டாடுவதோடு, அவரது திருப்பெயரால்70 வகையான சீர்வரிசைகளோடு, 70 திருமணங்களையும் நடத்துவதென தீர்மானிக்கிறது.

மேலும் ஒட்டு மொத்த இளைய சமுதாயத்தை ஊக்குவிக்கும் வகையில், 10,000 இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் பங்கு கொள்கின்ற "மாபெரும் இளைஞர் பெருவிழா" வினையும்; கிராமப் பாரம்பரிய வீர விளையாட்டான "ரேக்ளா ரேசி" னையும், கிராம இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் இன்னும் பல்வேறு மாவட்ட, மாநில, தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளையும் நடத்தி உலகமே வியக்கின்ற வகையில், ஆண்டு முழுவதும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 70-வது பிறந்த தின விழாவினைக் கொண்டாடிட அம்மா பேரவை சூளுரை ஏற்கிறது.

5 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க முடிவு

புதிய உறுப்பினர் சேர்க்கை முகாமினை தீவிரமாகக் கடைப்பிடித்து, கிராமம், கிராமமாகச் சென்று, 5 லட்சம் இளைஞர், இளம் பெண்களை அ.தி.மு.க கழகத்தில் புதிய உறுப்பினர்களாக சேர்த்து, ஒட்டுமொத்த இளைய சமுதாயத்தின் அடையாளமாகத் திகழ்கின்ற இந்தியத் திருநாட்டின் ஒரே அரசியல் இயக்கம் அ.தி.மு.க. ஒன்றுதான் என்பதை மீண்டும் நிரூபித்துக் காட்டுகின்ற வகையில், "புதிய உறுப்பினர் சேர்க்கை முகாமினை" நடத்திட, ஜெயலலிதா பேரவை இக்கூட்டத்தின் வாயிலாக உறுதியேற்கிறது.

சட்டசபையில் ஜெயலலிதா உருவப்படம்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின், ஈடில்லா தியாகத்தினையும், அயராத உழைப்பினையும், வற்றாத அன்பினையும், வாழும் வரலாறாக, வருங்கால தலைமுறைக்கு வழங்கிடும் வகையில், அவரது முழு உருவப் படத்தை, வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழ்நாடு சட்டமன்றத்தில் திறந்து வைத்து, வரலாறு படைத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சட்டப் பேரவைத் தலைவர், ப.தனபால் ஆகியோருக்கு, ஜெயலலிதா பேரவை கோடானு கோடி நன்றி மலர்களை காணிக்கையாக்கி வணங்குகிறது.

அ.தி.மு.க. அலுவலகத்தில் ஜெயலலிதா உருவச்சிலை

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு வங்கக் கடலோரம், மிகப் பிரமாண்டமான நினைவு மண்டபம் அமைத்து, வருகின்ற காலமெல்லாம் அனைவரும் வந்து வணங்கிச் செல்லும் "புனித வழிபாட்டுத் தலமாக" உருவாக்கித் தந்திட அயராது உழைத்துக் கொண்டிருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரோடு இணைந்து ஆதரவு அளித்து துணை நிற்கின்ற அனைத்து நல் உள்ளங்களுக்கும், அம்மா வாழ்ந்து வரலாறு படைத்திட்ட "போயஸ் தோட்ட இல்லத்தை", பொதுமக்கள் அனைவரும் வந்து பார்த்து வணங்கிச் செல்கின்ற வகையில் "நினைவு இல்லமாகவும்", அ.தி.மு.க. அலுவலகத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் முழுஉருவச் சிலையை நிறுவிட மிக விரைவாக நடவடிக்கை எடுத்திட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு ஜெயலலிதா பேரவை கோடானு கோடி நன்றி மலர்களை காணிக்கையாக்கி வணங்குகிறது.

பல்வேறு சோதனைகளை, சாதனைகளாக்கி, நெருப்பாற்றில் நீந்தி, சரித்திர சாதனை பல படைத்திட்ட மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தியாகத்தால், அயராத உழைப்பால், உருவாக்கப்பட்ட இச்சீர்மிகு தலைமைக் கழக கட்டிடத்திற்கு "அம்மா அன்பு மாளிகை" என்ற திருப்பெயரைச் சூட்ட வேண்டும் என்றும், அவரது முழு திருவுருவச் சிலையினை தமிழக சட்டமன்ற வளாகத்திலும், இந்திய நாடாளுமன்ற வளாகத்திலும் திறந்திட வேண்டும் என்றும், நாடாளுமன்ற வளாகத்தில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தியாக வாழ்விற்கு நன்றி செலுத்தும் வகையில், அவரது திருவுருவப் படத்தினை திறந்திட வேண்டும் என்றும், இத்திருப்பணிகளை எல்லாம் வெற்றிகரமாக நிறைவேற்றிட அனைத்து சட்ட பூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டிட, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை ஜெயலலிதா பேரவை வேண்டுகிறது. இவ்வாறு அந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, கடம்பூர் ராஜூ, சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து