முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசியல் பயணத்தை தொடங்கினார்: கமல் கட்சிக்கு பெயர் 'மக்கள் நீதி மய்யம்'

புதன்கிழமை, 21 பெப்ரவரி 2018      தமிழகம்
Image Unavailable

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கிய நடிகர் கமல் தனது கட்சிக்கு மக்கள் நீதி மய்யம் என்று பெயர் சூட்டி அதை மதுரை பொதுக்கூட்டத்தில் அறிவித்தார்.

நடிகர் கமல் தனது அரசியல் பயணத்தினை முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் வீட்டில் இருந்து தொடங்கியது தெரிந்ததே. அப்துல்கலாமின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர் நேற்று பிற்பகலில் நடிகர் கமல் ராமநாதபுரம் வந்தார்.  இதன்பின்னர் ராமநாதபுரம் அரண்மனையில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் ஏறிய நடிகர் கமல் பேசியதாவது:-
நான் இந்த ஊருக்கு சுமார் 45 வருடம் கழித்து வருகிறேன். இந்த ஊர் முன்பை விட கொஞ்சம் மாறி உள்ளது. இங்கே எனது சித்தப்பா ஆராவமுதன் இருந்தார். அதனால் நான் அடிக்கடி  நினைத்துக் கொள்வேன். நமக்கு ராமநாதபுரத்தில் ஒரு வீடு இருக்கிறது என்று. என்றாவது அங்கு செல்லலாம்என்று நினைப்பேன். ஆனால், இப்போது இங்கு உங்களை எல்லாம் பார்க்கும்போது எனக்கு இங்கு ஒரு வீடு மட்டும் இல்லை. இந்த ஊரே என் வீடுதான்.

நான் மதுரையில் சொல்லலாம் என்று நினைத்திருந்த ஒன்றினை உங்களின் அன்பை பார்த்து இங்கு சொல்கிறேன். என்னை இதுவரை நீங்கள் சினிமா நட்சத்திரமாக மட்டுமே  பார்த்தீர்கள். நான் இனிமேல் சினிமா நட்சத்திரம் இல்லை. நான் உங்கள் வீட்டு விளக்கு. இந்த விளக்கினை நீங்கள்தான் பார்த்து கொள்ள வேண்டும். இவ்வாறு பேசினார். இதனை தொடர்து நடிகர் கமல் ராமநாதபுரம் மன்னர் குமரன்சேதுபதி வீட்டிற்கு சென்று உணவருந்திய பின்னர் பரமக்குடிக்கு புறப்பட்டு சென்றார்.

முன்னதாக நேற்று காலையில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் வீட்டிற்கு கமல் சென்றார். அப்போது அவரை அப்துல்கலாம் பேரன் சேக் மற்றும் சலீம் ஆகியோர் வரவேற்றனர். பின்னர்  அப்துல்கலாமின் மூத்த சகோதரர் முகம்மது முத்து மீரான் மரைக்காயரை சந்தித்து கமல்ஹாசன் வாழ்த்துக்கள் பெற்றார். அதன் பின்னர் அப்துல்கலாம் அண்ணனுக்கு அப்துல் கலாம் பொறிக்கப்பட்ட வாட்ச் ஒன்றை பரிசாக கமல் வழங்கினார்.  இதனை தொடர்ந்து அப்துல்கலாம் வீட்டில் அளிக்கப்பட்ட விருந்தில் கலந்துகொண்டு அரசியல் பயணத்தை தொடங்கினார்.

பின்னர் வந்த அவர் இரவு 7.30 மணிக்கு பொதுக்கூட்டத்தில் தனது கட்சி பெயரை அறிவித்தார். அவரது கட்சிக்கு மக்கள் நீதி மய்யம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கலந்து கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து