டர்பன் டெஸ்ட் - மார்கிராம் ஆட்டம் வீண்: ஆஸ்திரேலியா 118 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தியது

திங்கட்கிழமை, 5 மார்ச் 2018      விளையாட்டு
Aus beat SA 2018 3 5

டர்பன் : டர்பனில் நடைபெற்று வந்த தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா 118 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

227 ரன்கள்...

தென்ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டர்பனில் நடைபெற்றது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 351 ரன்களும், தென்ஆப்பிரிக்கா 162 ரன்களும் சேர்த்தது. பின்னர் 2-வது இன்னிங்சில் ஆஸ்திரேலியா 227 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. முதல் இன்னிங்சில் 189 ரன்கள் முன்னிலைப் பெற்றதால் தென்ஆப்பிரிக்கா அணியின் வெற்றிக்கு 417 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா.


417 ரன்கள்...

4-வது நாள் ஆட்டத்தில் 417 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா களம் இறங்கியது. தொடக்க வீரர் எய்டன் மார்கிராம் ஒருபுறம் நிலைத்து நின்று விளையாட மறுமுனையில் டீன் எல்கர் (9), அம்லா (8), டி வில்லியர்ஸ் (0), டு பிளிசிஸ் (4), டி ப்ரூயின் (36) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

மார்கிராம் அபாரம்

6-வது விக்கெட்டுக்கு மார்கிராம் உடன் குயின்டான் டி காக் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிலைத்து நின்று விளையாடியது. இதனால் தென்ஆப்பிரிக்காவிற்கு வெற்றி பெற்று விடலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. அதேசமயத்தில் ஆஸ்திரேலியா கலக்கம் அடைந்தனர்.

143 ரன்னில் அவுட்...

தென்ஆப்பிரிக்காவின் ஸ்கோர் 283 ரன்னாக இருக்கும்போது மார்கிராம் 143 ரன்கள் எடுத்த நிலையில் மிட்செல் மார்ஷ் பந்தில் ஆட்டமிழந்தார். அப்போதுதான் ஆஸ்திரேலிய வீரர்கள் பெருமூச்சு விட்டனர். மார்கிராம் அவுட்டானதும் தென்ஆப்பிரிக்காவின் தோல்வி உறுதியானது. அடுத்து வந்த பிலாண்டர் (6), மகாராஜ் (0), ரபாடா (0) ஸ்டார்க் பந்தில் ஆட்டமிழக்க நேற்றைய 4-வது நாள் ஆட்ட முடிவில் தென்ஆப்பிரிக்கா 9 விக்கெட் இழப்பிற்கு 293 ரன்கள் எடுத்திருந்தது. டி காக் 81 ரன்னுடனும், மோர்னே மோர்கல் ரன்ஏதும் எடுக்காமல் களத்தில் இருந்தனர்.

கடைசி நாள் ஆட்டம்

மார்கிராம் அவுட்டான பிறகு தென்ஆப்பிரிக்கா 3.5 ஓவர்கள் விளையாடியதும் 4-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. மார்கிராம் 23 பந்துகள் தாக்குப்பிடித்திருந்தால் ஆட்டத்தின் போக்கே மாறியிருக்கும். நேற்று கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது. டி காக் 83 ரன்கள் எடுத்த நிலையில் ஹசில்வுட் பந்தில் ஆட்டமிழக்க தென்ஆப்பிரிக்கா 92.4 ஓவர்களில் 298 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இதனால் ஆஸ்திரேலியா 118 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆஸி. முன்னிலை...

முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டும், 2-வது இன்னிங்சில் 4 விக்கெட்டும் வீழ்த்திய மிட்செல் ஸ்டார்க் ஆட்டநாயகன் விருதை பெற்றார். நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என முன்னிலைப் பெற்றுள்ளது. 2-வது டெஸ்ட் வருகிற 9-ந்தேதி போர்ட் எலிசபெத்தில் நடக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து