தமிழகத்தில் வன்முறை கலாசாரத்தை உருவாக்க நினைத்தால் சிறை உறுதி - அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை

வியாழக்கிழமை, 8 மார்ச் 2018      தமிழகம்
jayakumar(N)

சென்னை : பெரியார் குறித்து மீண்டும் சர்ச்சை கருத்தை வெளியிட்டுள்ள எச்.ராஜா குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயகுமார் தமிழ்நாட்டில் ஒரு வன்முறை கலாசாரத்தை உருவாக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் சிறை செல்வது உறுதி என தெரிவித்தார்.

சென்னையில் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

கேள்வி: தமிழ் மொழியை அழிப்பதற்காகவே திராவிடம் என்ற சொல்லை பெரியார் கொண்டு வந்தார். தமிழ் என்ற சனியனே இருக்க கூடாது என்று பெரியார் பேசியதற்கான ஆதாரம் தன்னிடம் உள்ளதாக எச்.ராஜா கூறி இருக்கிறாரே?


பதில்: அந்த மாதிரி எந்த ஆதாரமும் இல்லை. ஒருவர் மலிவான விளம்பரத்துக்காக இந்த மாதிரி கூற்றுகளை தயவு செய்து சொல்லக் கூடாது. இதை தமிழ் மக்கள் நம்பக் கூடாது. எனவே தமிழை அவமதித்து, தமிழை கேவலப்படுத்துகிற எந்த செயலையும் எந்த நிலையிலும் அரசு ஏற்றுக் கொள்ளாது. அது யாராக இருந்தாலும், எவராக இருந்தாலும் சரி, உள்ள பிடிச்சி போட வேண்டிய ஆள்தான் அவர்.
பிடிச்சு போடுவோம்

இந்த மாதிரி ஒரு தவறான தகவல் கொடுத்து மக்களை திசை திருப்புகின்ற வேலையில் மக்களை திசை மாற்றி அதன் மூலம் தமிழ்நாட்டில் ஒரு வன்முறை கலாசாரத்தை உருவாக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு சொல்லிக் கொள்கிறேன். அவர் ஜெயிலுக்கு போவது நிச்சயம். கண்டிப்பாக உள்ளே பிடிச்சு போடுவோம்.

நேற்றைய சம்பவங்களுக்கு எச்.ராஜா வருத்தம் தெரிவித்தார். ட்விட்டரில் வருத்தம் தெரிவித்தார். இப்போது அவர் மீண்டும் தேவையில்லாமல் பேசுகிறார். எனவே ராஜா வீட்டு பிள்ளையாக இருந்தாலும் சரி, அது எந்த ராஜாவாக இருந்தாலும் சரி. சட்டத்தின் முன்பு அனைவரும் சமம். எனவே சட்டம் தன் கடமையை செய்யும்.

துரதிருஷ்டவசமானது

திருச்சி அருகே நேற்று பெண் உயிரிழந்த சம்பவம் மிகவும் துரதிருஷ்டவசமானது. கவலை கொள்கின்ற ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். இதில் கருணை காட்டவில்லை. சட்டத்தின் முன்பு அனைவரும் சமம் என்ற வகையில் அந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டுள்ளார். வழக்கும் தொடரப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து