பெரம்பலூர் மாவட்டத்தில் 300 பயனாளிகளுக்கு ரூ.1.77 கோடி மதிப்பிலான தாலிக்கு தங்கம் மற்றும் நிதியுதவி : கலெக்டர் வே.சாந்தா வழங்கினார்

புதன்கிழமை, 14 மார்ச் 2018      பெரம்பலூர்
Perambalur

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் சமூக நலத்துறையின் சார்பில் தமிழக அரசின் சிறப்புத்திட்டங்களுள் ஒன்றான ஏழைப்பெண்களுக்கு திருமண நிதியுதவியுடன், திருமாங்கல்யத்திற்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் பள்ளிக் கல்வி முடித்த 150 பயனாளிகளுக்கு திருமாங்கல்யம் செய்வதற்காக தலா 8 கிராம் தங்கமும், ரூ.25,000- மதிப்பிலான நிதியுதவியும், கல்லூரிப் படிப்பு முடித்த 150 நபர்களுக்கு திருமாங்கல்யம் செய்வதற்காக தலா 8 கிராம் தங்கமும், ரூ.50,000- மதிப்பிலான நிதியுதவியும் என மொத்தம் 300 பயனாளிகளுக்கு ரூ.64,80,000 மதிப்பிலான 2,400 கிராம் தங்கமும், ரூ.1,12,50,000- மதிப்பிலான திருமண நிதியுதவியும் வழங்கும் நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் இரா.தமிழ்ச்செல்வன் (பெரம்பலூர்), ஆர்.டி.இராமச்சந்திரன் (குன்னம்) ஆகியோர் முன்னிலையில் மாவட்ட கலெக்டர் வே.சாந்தா, நேற்று (14.03.2018) நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.

 எம்எல்ஏ பேச்சு

இந்நிகழ்ச்சியில் குன்னம் சட்டமன்ற உறுப்பினர் பேசியதாவது:தமிழக முன்னாள் முதலமைச்சர் மகளிருக்காக பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களை அறிமுகப்படுத்தி சிறப்பாக செயல்படுத்தினார்கள். பொதுவாக ஆட்சியாளர்கள் நாட்டிற்குத் தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். முன்னாள் தமிழக முதலமைச்சர் அம்மா ஒருவர் மட்டுமே ஒவ்வொருவரின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் திட்டங்களாக அறிவித்து செயல்படுத்தினார்கள்.

அதில் சிறப்பான ஒரு திட்டம்தான் திருமாங்கல்யத்திற்கு தங்கம் வழங்கும் திட்டம் ஆகும் என்றார். பெரம்பலூர் எம்எல்ஏ அதனைத்தொடர்ந்து பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பேசியதாவது:தமிழக முன்னாள் முதலமைச்சர் அம்மா ஏழைப் பெண்களின் திருமணங்களை நடத்தும் வகையில் தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தை தமிழகத்தில் அறிமுகப்படுத்தி சிறப்பாக செயல்படுத்தி வந்தார்கள். மேலும், தமிழக முன்னாள் முதலமைச்சர் வழியில் செயல்படும் தமிழக முதலமைச்சர் அவர்களும், பெண்ணினத்தை மேம்படுத்தும் வகையில் பெண்களுக்கான திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து செயல்படுத்தி வருகிறார்கள். மேலும், பெரம்பலூர் நகராட்சி, அரும்பாவூர் மற்றும் பூலாம்பாடி பேரூராட்சிகளில் வசிக்கும் பொதுமக்களின் குடிநீர் தேவைக்காகவும், வேப்பந்தட்டை வட்டத்தில் சுமார் 2,500 ஏக்கருக்கு மேற்பட்ட விளைநிலங்களுக்கு பாசன வசதி அளிக்கும் வகையில் சின்னமுட்லு அணைக்கட்டு விரைவில் அமைக்கப்பட உள்ளது.

மேலும், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஏழை, எளிய பொதுமக்களின் சுகாதாரத்தில் மிகுந்த அக்கறை கொண்ட தமிழக அரசு ரூ.9.14 கோடி மதிப்பீட்டில் மருத்துவக் கல்லூரிக்கு இணையான வசதிகளுடைய மருத்துவமனையாக பெரம்பலூர் தலைமை மருத்துவமனையை மாற்றும் வகையில் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளன. மேலும், தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டம், பிரசவித்த பெண்களுக்கு அம்மாப் பெட்டகம் வழங்குதல், பிரசவித்த தாய்மார்களுக்கு பேறுகால நிதியுதவி, சமூகத்தில் உள்ள கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு, பணிக்குச் செல்லும் தாய்மார்களுக்கு அம்மா இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பெண்கள் அனைவரும் முறையாகப் பயன்படுத்திக்கொண்டு, தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார். இந்நிகழ்ச்சியில் தலைமையேற்று மாவட்ட கலெக்டர் பேசியதாவது:தமிழகஅரசு பெண்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்காகவும், பொருளாதாரத்தில் சுயசார்புள்ளவர்களாகவும் இருப்பதற்காக பல்வேறு திட்டங்களை பெண்களுக்காக தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

அதன்படி, பெண்களுக்காக மகப்பேறு நிதியுதவி திட்டம், உழைக்கும் மகளிருக்கான மானிய விலையில் இருசக்கர வாகனங்கள் வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தமிழக அரசு பெண்களுக்காக செயல்படுத்தி வருகிறது. பெண்குழந்தைகளை நாம் போற்ற வேண்டும். பெண்களுக்கான முன்னேற்றமே சமுதாயத்தின் முன்னேற்றம். எனவே, பெண்களை மையமாக வைத்து தமிழக அரசு வழங்கிவரும் திட்டங்களை அனைவரும் நல்லமுறையில் பயன்படுத்தி பெண்கல்வியினை ஊக்குவிக்க வேண்டும். குழந்தை திருமணங்கள் சமுதாயத்திலிருந்து முற்றிலுமாக அகற்றப்பட வேண்டும். இதன்காரணமாக பெண்களின் உடல்நலம் மேம்படுவதுடன் ஆரோக்கியமான எதிர்கால சந்ததிகளும் உருவாக வழிவகை ஏற்படும். மேலும் இக்காலத்தில் பெண்கள் அனைவரும் சிறுதொழில், கைத்தொழில் என சமுதாயத்தில் பொருளாதார முன்னேற்றம் அடையும் வகையில் பெண்கள் தங்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும், பெண் குழந்தைகளை போற்றி வளர்த்து அவர்களுக்கு தேவையான, ஆண்களுக்கு இணையான அனைத்து வசதிவாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும் என்றார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.அழகிரிசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ஸ்ரீதர், மாவட்ட சமூக நல அலுவலர் (பொ) பூங்கொடி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து