முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உணவு தானிய உற்பத்தியில் தேசிய அளவில் சாதனை படைத்த தமிழக அரசுக்கு மத்திய அரசு விருது

சனிக்கிழமை, 17 மார்ச் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை, 2015-16 ஆம் ஆண்டு உணவுதானிய உற்பத்தியில் சாதனை புரிந்ததற்காக மத்திய அரசின்  கிரிஷ்கர்மான் விருது தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை தமிழக அரசின் சார்பில் அமைச்சர் துரைக்கண்ணு பிரதமரிடமிருந்து பெற்றுக் கொண்டார்,

கடந்த 17-ம் தேதி புது டெல்லியில் உள்ள பூசா வளாகத்தில் அமைந்துள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்ற கிருஷி உன்னதி மேளாவில், 2015-16-ம் ஆண்டில் நெல், சிறுதானியங்கள் மற்றும் பயறுவகைகள் உள்ளிட்ட உணவுதானிய உற்பத்தியில் தமிழ்நாடு அரசு சாதனை புரிந்தமைக்காக கிருஷி கர்மான் விருது வழங்கினார்.

மகசூல் இடைவெளியினை குறைத்து உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவு அடைவதற்காக, 2012-13-ம் ஆண்டில் உணவு தானிய இயக்கம் தமிழ் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டு, சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக தமிழ்நாடு அரசு, உணவு தானிய உற்பத்தியில் அதிக உற்பத்தியை அடைய பல்வேறு முன்னோடி தொழில் நுட்பங்களுடன் கூடிய, தீவிர விரிவாக்க அணுகுமுறைகளுடன், பல்வேறு கொள்கை முடிவுகளை எடுத்து முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது. 2010-11-ம் ஆண்டில் 75.25 லட்சம் மெட்ரிக் டன்களாக இருந்த மொத்த உணவு தானிய உற்பத்தியானது, தமிழ்நாடு அரசின் இத்தகைய அணுகுமுறைகளால் 2011-12-ம் ஆண்டு 101.52 லட்சம் மெட்ரிக் டன் என்ற உயரிய அளவினை அடைந்ததற்காக, மத்திய அரசிடமிருந்து கிரிஷி கர்மான் விருதை பெற்றது.

தொடர்ச்சியாக, தமிழ்நாடு அரசு உயர் உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறனை அடைய பல்வேறு முயற்சிகளை எடுத்ததோடு, அகில இந்திய அளவில் தமிழகத்தின் முன்னோடி நிலையினை தக்கவைப்பதற்காக நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதனால், 2013-14-ம் ஆண்டில், 6.14 லட்சம் மெட்ரிக் டன்கள் பயறு வகை உற்பத்தி செய்ததற்காக, இரண்டாம் முறையும், 2014-15-ம் ஆண்டில் 40.75 லட்சம் மெட்ரிக் டன்கள் சிறுதானிய உற்பத்தி செய்ததற்காக, மூன்றாம் முறையும் கிரிஷி கர்மான் விருதுகளை பெற்றது.

உணவுதானிய உற்பத்தியை அதிகரிக்கவும், விவசாயிகளின் நலன் காக்கவும், 2015-16-ம் ஆண்டில், தமிழ்நாடு அரசு பல புரட்சிகரமான முயற்சிகளை எடுத்தது. தமிழ்நாடு அரசு எடுத்த இத்தகைய முயற்சிகளை கௌரவிக்கும் வகையிலும் 2015-16-ம் ஆண்டில் உணவு தானிய உற்பத்தியில் உயரிய சாதனை படைத்து அகில இந்திய அளவில் தமிழ்நாடு சிறந்த மாநிலமாக விளங்கியதற்கும், கிரிஷி கர்மான் விருதினை வழங்க தேர்வு செய்யப்பட்டுள்ளது என மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் 12.04.2017 மற்றும் 27.02.2018 அன்று \தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்ததோடு, கடந்த 17-ம் தேதி புது டெல்லியில் பூசா வளாகத்தில் அமைந்துள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெறும் கிருஷி உன்னதி மேளாவில், பிரதமர் நரேந்திர மோடியிடமிருந்து இவ்விருதினை பெற அழைப்பு விடுத்தார். தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி சார்பாக, வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுவும். வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் ககன்தீப் பேடியு மற்றும் வேளாண்மைத்துறை இயக்குநர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் பெருமைக்குரிய கிரிஷி கர்மான் விருதினை பிரதமரிடம் இருந்து பெற்றுக் கொண்டனர். பரிசுக் கோப்பை, விருதிற்கான சான்று மற்றும் பரிசுத்தொகை ரூ.5 கோடி ஆகியவை இவ்விருதில் அடங்கும்.

மேலும், தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு முன்னோடி விவசாயிகளான அரியலூர்  மாவட்டத்தைச் சார்ந்த.ராசாத்தி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்த சாமிநாதன் ஆகியோரும் நெல் (9,563 கிலோ ஒரு எக்டருக்கு) மற்றும் பயறுவகை (1,700 கிலோ ஒரு எக்டருக்கு) பயிர்களில் அதிக உற்பத்தித் திறன் பெற்றதற்காக பாராட்டுச் சான்றிதழுடன் தலா இரண்டு இலட்சம் ரூபாய் பரிசுத் தொகையும் பிரதமரி்டமிருந்து பெற்றனர்.

வேளாண் உற்பத்திக்கு சாதகமான ஆண்டுகளில் மட்டுமல்லாது, 2016 போன்ற இடர்பாடான ஆண்டுகளிலும், ஏற்பட்ட எதிர்பாராத கடும் வறட்சியினால், மகசூல் பாதிப்படைந்த விவசாயிகளுக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சீரிய தலைமையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு உறுதுணையாக இருந்து வருகிறது. பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், அரசு எடுத்த பெரும் முயற்சிகளின் விளைவாக, 15.37 லட்சம் விவசாயிகள் பதிவு செய்யப்பட்டதோடு, பாதிக்கப்பட்ட 10.15 லட்சம் விவசாயிகளுக்கு 3,113 கோடி ரூபாய்க்கும் மேல் இழப்பீட்டுத் தொகை ஒப்பளிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. 2016-17 ஆம் ஆண்டில் ராபி பருவத்தில் விவசாயிகளுக்கு அதிகபட்ச இழப்பீட்டுத் தொகையை பெற்று வழங்கி அகில இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடத்தை வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து