முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க பேசி முடிவெடுப்போம் துணை முதல்வர் ஓ.பி.எஸ் பேச்சு

வியாழக்கிழமை, 22 மார்ச் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை: காவிரி மேலாண்மை வாரியமும், காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவும் மத்திய அரசு அமைக்கும் என்ற சூழல் ஏற்படும் எனவும், அதற்காக பொறுத்திருப்போம். அதற்கு எந்த மாதிரி அழுத்தம் கொடுக்க வேண்டுமென்று நாமெல்லாம் மீண்டும் கூடிப்பேசி ஒரு நல்ல முடிவை எடுப்போம் என துணை முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
 
கவன ஈர்ப்பு தீர்மானம்
தமிழக சட்டசபையில் நேற்று எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசியதாவது,
காவிரி நீர் வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வெளிவந்தவுடன், 6 வார காலத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியாது என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்காரி ஒரு ஆங்கில பத்திரிகையில் அளித்திருந்த பேட்டியை நாம் பார்த்தோம். காவிரி விவகாரம் குறித்து நடைபெற்ற மாநில தலைமைச் செயலாளர்களின் கூட்டம் முடிந்த பிறகு, காவிரி மேலாண்மை வாரியம் என்ற வார்த்தை உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் இல்லை என்று மத்திய நீர்வளத்துறையின் செயலாளர் வெளிப்படையாகவே சொல்லி இருக்கிறார். மத்திய நீர்வளத்துறையின் செயலாளர் யு.பி.சிங் 6 வாரங்களில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என்று பேட்டியளித்து இருக்கிறார்.

எதற்கும் பயனில்லை
நம்முடைய மாநிலத்தின் பிரச்சினை தொடர்பாக மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டுமென நாம் பல முயற்சிகளில் ஈடுபட்டும், எதற்கும் பயனில்லை என்ற சூழலில், மத்திய அரசு மீது ஒரு நம்பிக்கையில்லா தீர்மானத்தை அ.தி.மு.க. அரசு அங்கேயிருக்கின்ற உங்களுடைய பாராளுமன்ற உறுப்பினர்கள் மூலமாக கொண்டு வந்து, ஒரு அழுத்தம் தர வேண்டும். அதுமட்டுமல்ல, 6 வார காலத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை என்றால், உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வதற்கான பணியில், இந்த அரசு உடனே ஈடுபட வேண்டும் என்றார்.

வலியுறுத்தி வருகிறோம்
இதற்கு பதிலளித்து பேசிய துணை முதல்வர் ஒ.பன்னீர் செல்வம்,
காவிரிப் பிரச்சினையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்பது, காவிரி நடுவர் மன்றத்தினுடைய பிரச்சினையை, தாவாவை, நீர்ப் பங்கீட்டு முறையைப் பற்றி விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றத்தினுடைய தீர்ப்பில் விளக்கமாகவும், விவரமாகவும் காவிரி மேலாண்மை வாரியம் என்ற வார்த்தையும், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு என்ற அந்தச் சொற்றொடரும் இறுதி செய்யப்பட்டிருக்கின்றன. இறுதி செய்யப்பட்ட அந்தச் சொற்றொடரைத் தான் தமிழக அரசின் சார்பாக, மக்களின் சார்பாக ஒவ்வொரு நிலையிலும் எங்களுடைய தன்மை, உறுதித்தன்மை, நீடித்த, நிலைத்த தன்மை அதுதான் என்று நாங்கள் தொடர்ந்து மறைந்த முதல்வர் ஜெயலலிதா காலத்திலிருந்து இன்று வரை தொடர்ந்து நாம் அனைவரும் வலியுறுத்தி வந்திருக்கின்றோம்.

5 நாட்கள் இருக்கின்றன
இந்தப் பிரச்சினை மீண்டும் உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றபொழுது, உச்ச நீதிமன்றமும் ஒரு தீர்மானத் தீர்ப்பை வழங்கியிருக்கிறது. இரு மாநிலங்கள் அல்லது 3 மாநிலங்கள் என்று வருகின்ற பிரச்சினைகளாக இருந்தால், உச்ச நீதிமன்றத்தில் அந்தப் பிரச்சினையை எடுத்துச் செல்லுகின்ற பொழுது வழங்கப்படுகின்ற தீர்ப்பினை அமல்படுத்துகின்ற கடமையும், பொறுப்பும் மத்திய அரசுக்கு இருக்கிறது. ஆகவே, மத்திய அரசு காவிரி நடுவர் மன்றத்தில் சொல்லப்பட்ட அந்த காவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரி நநிநீர் முறைப்படுத்தும் குழுவையும் 6 வார காலத்திற்குள் அமைத்திட வேண்டுமென்ற உறுதியான தீர்ப்பினை வழங்கியிருக்கிறது. ஏற்கெனவே சொன்னதுபோல, இன்னும் 4, 5 நாட்கள் இருக்கின்றன ஆகவே, அதை தினமும் எதிர்க்கட்சித் தலைவர் எங்களுக்கு நினைவூட்டலாகச் சொல்லிக் கொண்டேயிருக்கிறார்.

13 நாட்களாக...
நீங்கள் எந்தளவுக்கு அந்தப் பிரச்சினையில் அழுத்தம் தருகிறீர்களோ, அதற்கும் மேலாக எங்களுடைய அழுத்தம் பாராளுமன்றத்தில் தினமும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட 13 நாட்களாக சபையே நடக்காதவாறு அங்கே இந்தப் பிரச்சினையை எடுத்துச் சென்று, பாராளுமன்றத்தில் இருக்கின்ற அ.தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர்கள் எந்தளவிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென்று மத்திய அரசை வலியுறுத்துகிறார்களோ அந்த அளவுக்கு அழுத்தம் கொடுக்கின்ற காரணத்தினால்தான் பாராளுமன்றமே 13 தினங்களாக முடங்கிப் போயிருக்கிறதென்ற சரித்திரத்தை தமிழகத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து உருவாக்கியிருக்கின்றனர்.

அரசுக்கு வந்து சேரவில்லை
இந்த அளவிற்கு நாம் அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். இந்தப் பிரச்சினையில் சட்டத்தின் மூலமாக, நீதிமன்றத்தின் மூலமாக வழங்கப்பட்ட தீர்ப்பினை மத்திய அரசு செயல்படுத்துகிறதா என்ற நிலை இப்பொழுது ஏற்பட்டிருக்கிறது. மத்திய நீர்வளத் துறை அமைச்சர் சில கருத்துகளைச் சொல்லியிருக்கின்றார். அந்தக் கருத்துகள் எந்தளவிற்கு அவர் என்ன நினைத்துச் சொன்னார் என்ற விவரம் இன்னும் அரசுக்கு வந்து சேரவில்லை. முழு விவரமும் தெரிந்து அதனை இந்த மாமன்றத்திற்குத் தெரிவிப்பது எங்களுடைய கடமை என்றே நான் கருதுகிறேன். பொறுத்திருப்போம்.

நல்ல முடிவை எடுப்போம்
அது எந்த நிலையை அடைகின்றது என்ற நிலையைத் தீர ஆராய்ந்து, மீண்டும் அனைவரும் கூடிப்பேசி, எந்தமாதிரியான சூழ்நிலையை ஏற்படுத்தினால் காவிரி மேலாண்மை வாரியமும், காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவும் மத்திய அரசு அமைக்கும் என்ற சூழல் ஏற்படும், அதற்கு எந்த மாதிரி அழுத்தம் கொடுக்க வேண்டுமென்று நாமெல்லாம் கூடிப்பேசி ஒரு நல்ல முடிவை எடுப்போம். இவ்வாறு துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து