முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவிரி வழக்கில் மத்திய அரசுக்கு 4-வது முறையாக கெடு: வரும் 14-ம் தேதி வரைவு திட்டத்தை கண்டிப்பாக தாக்கல் செய்ய வேண்டும் - நீர்வளத்துறை செயலாளர் ஆஜராகவும் சுப்ரீம் கோர்ட் உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 8 மே 2018      தமிழகம்
Image Unavailable

புது டெல்லி : காவிரி நதிநீர் பங்கீடு வழக்கில் வரும் 14-ம் தேதி வரைவு திட்டத்தை கண்டிப்பாக தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு நேற்று 4-வது முறையாக சுப்ரீம் கோர்ட் கெடு விதித்துள்ளது. மேலும் அன்றைய தினம் மத்திய நீர்வளத்துறை செயலாளர் ஆஜராகி விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
காவிரி நீர் பங்கீடு வழக்கில் கடந்த பிப்ரவரி 16-ம் தேதி தீர்ப்பு வழங்கிய சுப்ரீம் கோர்ட், 6 வாரங்களுக்குள் தீர்ப்பை நடைமுறைப்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால் தீர்ப்பை செயல்படுத்தாத மத்திய அரசு 6-வது வார முடிவில் ஸ்கீம் என்பதற்கு சுப்ரீம் கோர்ட்டில் விளக்கம் கேட்டு இழுத்தடித்தது. இதையடுத்து, தீர்ப்பை அமல்படுத்தத் தவறிய மத்திய அரசு மீது தமிழக அரசு சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்பட்டது. இவற்றை விசாரித்த சுப்ரீம் கோர்ட் காவிரி விவகாரத்தில் வரைவுத் திட்டத்தை மே 3-ம் தேதி தாக்கல் செய்யுமாறு‌ மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

ஒப்புதல் பெற...

இந்த வழக்கு கடந்த மே 3-ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது சுப்ரீம் கோர்ட் அறிவித்தபடி மேலாண்மை திட்டத்தை மத்திய அரசு தாக்கல் செய்யவில்லை. காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வரைவு திட்டம் தயாராகி விட்டது, ஆனால் கையெழுத்திட வேண்டிய மத்திய அமைச்சர்கள் கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் இருப்பதால் மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் பெற முடியவில்லை என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

தண்ணீர் திறக்க...

இதை ஏற்க மறுத்த சுப்ரீம் கோர்ட் கர்நாடகாவில் தேர்தல் நடப்பது குறித்து எங்களுக்கு அக்கறை இல்லை, வரும் 8-ம் தேதிக்குள் மத்திய அரசு வரைவு திட்டத்தை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. மேலும், உடனடியாக தமிழகத்திற்கு 4 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம் திறந்து விட வேண்டும். இல்லாவிட்டால் கர்நாடகம் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் என்றும் எச்சரித்தது. சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டும் கர்நாடக முதல்வர் சித்தராமையா இந்த எச்சரிக்கையை பொருட்படுத்தியதாக தெரியவில்லை. எங்களுக்கே குடிக்கத் தண்ணீர் இல்லை. நாங்கள் எப்படி தர முடியும் என்று திரும்ப திரும்ப அதே பல்லவியை பாடி வருகிறார்.

கால அவகாசம்...

இந்நிலையில், காவிரி வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வேணுகோபால் ஆஜராகவில்லை. இதனையடுத்து வழக்கு விசாரணை சிறிது நேரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான வரைவு திட்டத்தை மத்திய அரசு தாக்கல் செய்யவில்லை. கர்நாடக தேர்தல் காரணமாக வரைவு திட்டம் பற்றி முடிவெடுக்க முடியவில்லை, அதனை தாக்கல் செய்ய மேலும் 10 நாட்கள் கால அவகாசம் தேவை என மத்திய அரசின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, மத்திய நீர்வளத்துறை செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டு விசாரணையை வரும் 14-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். வரைவு திட்டத்தை தாக்கல் செய்யாத மத்திய அரசை நீதிபதிகள் கண்டித்தனர். வரும் 14-ம் தேதி கண்டிப்பாக வரைவு திட்டத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

கர்நாடகா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் மே 12ம் தேதி நடைபெற உள்ள நிலையில், காவிரி வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை, கர்நாடகா தேர்தலுக்கு பின்னே நடைபெற உள்ளது.

தமிழகம் மனு

முன்னதாக, நேற்று முன்தினம் கர்நாடக அரசு சார்பில் காவிரி நீர் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் பிரமாண பத்திரம் ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், தமிழகத்திற்கு எங்களால் காவிரி நீரை திறந்து விட முடியாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. கர்நாடகாவின் மனுவை தொடர்ந்து, அன்றே தமிழகம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் இடைக்கால மனுத்தாக்கல் செய்யப்பட்டது.  அந்த மனுவில், கர்நாடக அணைகளில் தற்போது 19 டி.எம்.சி தண்ணீர் உள்ளது. அதில், 4 டி.எம்.சி தண்ணீரை உடனடியாக திறக்க வேண்டும். கால தாமதமின்றி உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசு வாதம்

காவிரி வழக்கு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது கர்நாடகா தேர்தல் காரணமாக வரைவுத் திட்டம் பற்றி முடிவெடுக்க முடியவில்லை என மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. காவிரி விவகாரத்தில் மத்திய அரசை நம்பினால் தமிழகத்திற்கு ஒரு சொட்டு நீரும் கிடைக்காது என தமிழக அரசின் சார்பில் குற்றம்சாட்டப்பட்டது. அத்தோடு மட்டுமில்லாமல் காவிரி விவகாரத்தில் தமிழக அரசை மத்திய அரசு வஞ்சித்துவிட்டதாகவும் வாதம் முன்வைக்கப்பட்டது. அப்போது சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பை மத்திய அரசு அமல்படுத்தாதது நீதிமன்ற அவமதிப்புதான் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து