முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாலகுமாரன் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்

செவ்வாய்க்கிழமை, 15 மே 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : பிரபல எழுத்தாளர் பாலகுமாரன் மறைவுக்கு தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தஞ்சை மாவட்டம் திருகாட்டுப்பள்ளி அருகே உள்ள பழமார்நேரி என்ற கிராமத்தில் கடந்த 1946-ம் ஆண்டு பிறந்தவர் பாலகுமாரன். நூற்றுக்கணக்கான சிறுகதைகள், இருநூற்றுக்கும் அதிகமான நாவல்களை அவர் எழுதியுள்ளார். அவர் எழுதிய நாவல்களில் மெர்குரி பூக்கள், இரும்பு குதிரைகள் உள்ளிட்டவை மிகவும் பிரபலமானவை. பல்வேறு விருதுகளையும் அவர் வாங்கி இருக்கிறார்.

நாயகன், குணா, ஜென்டில் மேன், முதல்வன், பாட்சா, ஜீன்ஸ் உள்ளிட்ட பல படங்களில் வசனகர்த்தாவாகவும் அவர் பணியாற்றி உள்ளார். பாக்யராஜ் நடித்த இது நம்ம ஆளு படத்தை டைரக்ட் செய்துள்ளார். தமிழக அரசின் கலைமாமணி உள்ளிட்ட பல உயரிய விருதுகளை இவர் பெற்றுள்ளார். 71 வயதான பாலகுமாரன் சென்னையில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டது. ஆனால், சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

வைகோ

பாலகுமாரனின் மறைவுக்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

பாலகுமாரனின் படைப்புத் திறனைக் காலம் காலமாகப் பேசும் வகையில் மாமன்னர் ராஜராஜ சோழன் பற்றியும், தஞ்சை பெருவுடையார் கோயில் பற்றியும் ஆறு பாகங்கள், 2,500 பக்கங்கள் கொண்ட பிற்காலச் சோழர்களின் சரித்திரத்தைக் கண்முன் நிறுத்தும் ‘உடையார்’ எனும் நாவல் விளங்குகிறது. ஆன்மிகச் சிந்தனைகள் அடங்கிய பல படைப்புகளை வழங்கியவர் பாலகுமாரன் என்பதும் அவருக்கு உரிய தனிச் சிறப்பு ஆகும்.

எழுத்து ஆளுமையும், லட்சக்கணக்கான தமிழ் மக்களின் இதயத்தைத் தொட்ட படைப்பாளி எனும் கீர்த்தியும் பெற்றிருந்த பாலகுமாரனின் மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், தமிழ் இலக்கிய ஆர்வலர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என வைகோ தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன

மத்திய நிதி மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்ட இரங்கல் செய்தி பிரபல எழுத்தாளரும் நாவலாசிரியருமான பாலகுமாரன் இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகுந்த மனவேதனையும் அதிர்ச்சியும் அடைந்தேன், அவரது பிரிவை தாங்கும் மனவலிமையை அவரது குடும்பத்தாருக்கும் வாசகர்களுக்கும் அளித்திடவும் அவரது ஆன்மா நற்கதியடையவும் அன்னை சக்தியை பிரார்த்திக்கிறேன் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஜி.கே.வாசன்

தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கையில் மறைந்த பாலகுமாரனின் படைப்புகள் என்றென்றும் புகழோடு சிறக்கும் எழுத்தாளராகவும் வழிகாட்டியாகவும் விளங்கிய போற்றுதலுக்குரியவர் இத்தகைய பெயருக்கும் புகழுக்கும் உரிய தமிழ் எழுத்தாளர் பாலகுமாரனின் மறைவு அவரது குடும்பத்தாருக்கும் எழுத்தாளர்களுக்கும் படைப்பாளர்களுக்கும் பேரிழப்பாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து