முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை விசாரணை கமிஷனும் அமைக்கப்படும்: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 22 மே 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று அறிவித்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி இது தொடர்பாக ஒரு நபர் விசாரணை  கமிஷனும் அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

144 தடை உத்தரவை மீறி...
இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக் கோரி,  பெருந்திரளான நபர்கள் இன்று (நேற்று), மாவட்ட ஆட்சித் தலைவரால் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவையும் மீறி ஊர்வலமாகச் சென்று மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.  அப்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் முற்றுகையிட்டவர்களை கலைந்து செல்லும்படி அறிவுறுத்தினர்.  ஆனால் அவர்கள் தடை உத்தரவையும் மீறி, காவலர்களின் அறிவுரையையும் புறக்கணித்து, காவலர்கள் மீது கற்களை எறிந்து வன்முறையில் ஈடுபட்டது மட்டுமல்லாமல், காவல் துறையினரின் வாகனங்களை தீயிட்டும், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்குள் புகுந்து அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை தீயிட்டும், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தையும் கல் வீசி தாக்கியும் சேதப்படுத்தியுள்ளனர். 

துப்பாக்கிச்சூடு ஏன்?
இவர்கள் தொடர்ச்சியாக வன்முறையில் ஈடுபட்டும், பொது மக்கள் உயிருக்கும், பொதுச் சொத்துக்களுக்கும் சேதம் விளைவித்த காரணத்தினால், பொது மக்களின் உயிர்களை பாதுகாக்கும் பொருட்டும், பொது சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பதை தவிர்க்கும் பொருட்டும், முற்றுகையாளர்கள் கட்டவிழ்த்துவிட்ட வன்முறையை கட்டுக்குள் கொண்டு வரவும், தவிர்க்க முடியாத சூழ்நிலையில் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க நேரிட்டது.  இந்நிகழ்வில், துரதிருஷ்டவசமாக ஒன்பது நபர்கள் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த ஒன்பது நபர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தலா ரூ. 10 லட்சம் - அரசு வேலை
இந்நிகழ்வில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகத்திற்கும், மருத்துவமனை அதிகாரிகளுக்கும் நான் உத்தரவிட்டுள்ளேன். இவர்கள் அனைவரும் விரைவில் பூரண குணமடைய வேண்டும் என்ற எனது விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இச்சம்பவம் தொடர்பாக, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் ஒருவரை தலைவராகக் கொண்ட ஒரு நபர் விசாரணைக் கமிஷன் அமைக்க நான் உத்தரவிட்டுள்ளேன். இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா பத்து லட்சம் ரூபாயும்; பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா மூன்று லட்சம் ரூபாயும்; லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

மேலும், இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரில் ஒருவருக்கு தகுதிக்கேற்றவாறு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன்.  இவ்வாறு  முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் கூறியுள்ளார். தூத்துக்குடி சம்பவத்தில் பலியானவர்களுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித்தும் தனது ஆழ்ந்த இரங்கலை  தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து