முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாநிலங்களின் உரிமைகளை பறிக்கும் அணைகள் பாதுகாப்பு மசோதாவை நிறுத்தி வைக்க வேண்டும் பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம்

வெள்ளிக்கிழமை, 15 ஜூன் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை: அணைகள் பாதுகாப்பு சட்டத்திருத்த மசோதா மாநில உரிமையை பறிக்கும் வகையில் உள்ளதால், மாநில அரசுகளின் கருத்தை கேட்டறியும் வரை அந்த மசோதாவை நிறுத்தி வைக்க வேண்டும் என, பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

உரிமைகளை மீறுவதாக...
அணைகள் பாதுகாப்பு சட்டத்திருத்த மசோதா 2018-க்கு மத்திய அமைச்சகம் கடந்த மே மாதம் 13-ம் தேதி ஒப்புதல் வழங்கியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. அணைகள் பாதுகாப்பு சட்டத்திருத்த மசோதா, 2016-ம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட போதே மறைந்த முதல்வர் ஜெயலலிதா கடந்த 11.9.2016 அன்று இச்சட்டத்தின் சில அம்சங்கள் மாநில உரிமைகளை மீறுவதாகவும், மற்ற மாநிலங்களில் அமைந்துள்ள அணைகளை தமிழக அரசு நிர்வகிக்கும் போது மாநிலங்களுக்கு இடையேயான ஒப்பந்தங்களின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள உரிமைகளையும் மீறுவதாகவும் தெரிவித்து தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்தார்.

மீண்டும் பரிசீலிக்க ...
அதனால், இந்த மசோதாவை மீண்டும் பரிசீலிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கிறேன். இந்த மசோதாவுக்கு எதிரான தமிழகத்தின் கருத்துகளை கருத்தில் கொண்டு அதுவரை மசோதாவை நிறுத்தி வைக்க வேண்டும் என கோருகிறேன். மாநில அரசுகளின் கருத்தை கேட்டறிந்த பிறகே மசோதாவை சட்டமாக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் பழனிசாமி தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

மறு ஆய்வு செய்ய...
மேலும் அவர் தனது கடிதத்தில் இந்த அணை பாதுகாப்பு சட்டம் மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் என்றும் அவசர கதியில் இதை செயல்படுத்தக் கூடாது என்றும் வலியுறுத்தி உள்ளார். தமிழகம் எழுப்பியுள்ள ஆட்சேபணைகளை கருத்தில் கொள்ள வேண்டும். அவ்வாறு கருத்தில் கொள்ளாமல் இச்சட்டத்தை செயல்படுத்த கூடாது. 2016-ம் ஆண்டுக்கு பிறகு திருத்தப்பட்ட வரைவு மசோதாவை இந்திய அரசு அனுப்பவே இல்லை. ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட வடிவிலேயே 13.6.2018 அன்று இந்த மசோதா மத்திய அமைச்சரவையால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

கலந்தாலோசித்து...
இது போன்ற ஒரு சட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்னால் அனைத்து மாநிலங்களையும் கலந்தாலோசித்து ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவதே பொருத்தமாக இருக்கும் என்பதே எனது கருத்து. எனவே ஒருமித்த கருத்து ஏற்படும் வரை இந்த சட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும். இதற்கு தாங்கள் உடனடியாக பதிலளிப்பீர்கள் என எதிர்பார்க்கிறேன் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து