உலகக்கோப்பை கால்பந்து: அரையிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து

ஞாயிற்றுக்கிழமை, 8 ஜூலை 2018      விளையாட்டு
england 2018 07 08

கார்டிப்: ஃபிபா உலகக்கோப்பையில், காலிறுதி சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. முதலிரண்டு காலிறுதி போட்டியில் பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் ஆகிய அணிகள் வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு ஏற்கனவே முன்னேறிவிட்டன.

இந்நிலையில், சனிக்கிழமை 3-ஆவது காலிறுதி போட்டி நடைபெற்றது. இதில், இங்கிலாந்து அணி ஸ்வீடனை எதிர்கொண்டது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 30-ஆவது நிமிடத்தில் கார்னர் வாய்ப்பு கிடைத்தது. இது போட்டியின் முதல் கார்னராகும்.

கார்னர் பகுதியில் இருந்து இங்கிலாந்தின் ஆஷ்லே யங் பந்தை உதைக்க ஹாரி மாகுயிர் சரியாக கணித்து பந்தை கோல் வலையை நோக்கி தலையில் தட்டினார். பந்து ஸ்வீடன் கோல் கீப்பர் ராபின் ஓல்சனை கடந்து கோல் வலையில் விழுந்தது. இதன்மூலம் இங்கிலாந்து அணி 1-0 என முன்னிலை வகித்தது. இந்த கோலானது, தேசிய அணிக்காக மாகுயிர் அடிக்கும் முதல் கோலாகும்.

இந்த முதல் கோலுக்குப் பிறகு ஆட்டம் நன்றாக சூடுபிடிக்கத் தொடங்கியது. இதைத்தொடர்ந்து, இங்கிலாந்தின் ரஹீம் ஸ்டிர்லிங் கோல் அடிக்க முயன்றார். ஆனால், ஓல்சன் அதனை தடுத்துவிட்டார். இதனால், முதல் பாதியில் இங்கிலாந்து அணியால் 2-0 என்ற முன்னிலை பெற முடியவில்லை.

2-ஆவது பாதி ஆட்டம் தொடங்கிய சில நேரத்திலேயே ஸ்வீடன் பதிலடி தர முயற்சித்தது. அந்த அணியின் மார்கஸ் பெர்க் 47-ஆவது நிமிடத்தில் பந்தை தலையில் முட்டி சமன் செய்ய முயற்சித்தார். ஆனால், இங்கிலாந்து கோல் கீப்பர் ஜோர்டன் பிக்ஃபோர்ட் அபாரமாக டைவ் அடித்து தடுத்தார். இதனால், ஸ்வீடனின் கோல் முயற்சி தோல்வியில் முடிந்தது. அதன் பிறகு ஸ்வீடன் அணி கோல் முயற்சியில் ஈடுபட்டு இங்கிலாந்துக்கு சற்று நெருக்கடி கொடுத்தது.

பின்னர், 53-ஆவது நிமிடத்தில் இங்கிலாந்து அணிக்கு மீண்டும் கார்னர் வாய்ப்பு கிடைத்தது. முதல் கோல் அடித்ததை அப்படியே திரும்ப செய்ய முயற்சித்து, ஆஷ்லே யங் பந்தை உள்ளே அனுப்ப மாகுயிர் அதனை பெற்று மீண்டும் கோலாக மாற்ற முயற்சித்தார். ஆனால், இந்த முறை அது பலனளிக்கவில்லை.

இருப்பினும், 59-ஆவது நிமிடத்தில் டேலே அல்லி இங்கிலாந்து அணியின் முன்னிலையை இரட்டித்தார். 2 கோல்கள் பின்தங்கியதால் ஸ்வீடன் அணி எழுச்சி பெறும் முனைப்பில் அடுத்த 2-ஆவது நிமிடத்திலேயே கோல் அடிக்க முயற்சித்தது. ஆனால், ஜோர்டன் பிக்ஃபோர்ட் மீண்டும் அற்புதமாக பந்தை தடுக்க ஸ்வீடன் கோல் வாய்ப்பு பறிபோனது.

தொடர்ந்து விடாமுயற்சியோடு விளையாடிய ஸ்வீடன் அணிக்கு ஜான் காய்டெட்டி கோல் வலையை நோக்கி பந்தை அடித்தார். ஜோர்டன் மீண்டும் அற்புதமாக பந்தை தடுத்தார். ஆனால், இந்த முறை அவரால் பந்தை கோல் வலைக்கு செல்லாமல் இருக்க மட்டுமே தடுக்க முடிந்தது.

அதனால், ஸ்வீடன் அணிக்கு கார்னர் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அது ஃபவுலில் முடிந்ததால் ஸ்வீடனுக்கு கோல் வாய்ப்பு கிடைக்கவில்லை.

அதன்பிறகு ஸ்வீடன் அணியால் கோல் அடிக்கவே முடியவில்லை. போட்டியில் கூடுதலாக 5 நிமிடங்கள் வழங்கப்பட்டது. அந்த கூடுதல் நேர ஆட்டத்திலும் இரு அணிகள் கோல் அடிக்கவில்லை.
இதன்மூலம், இங்கிலாந்து அணி ஆட்டநேர முடிவில் 2-0 என்ற வலுவான கோல் முன்னிலையுடன் வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

ரஷியா, குரோஷியா அணிகளுக்கிடையிலான காலிறுதி போட்டியில் வெற்றி பெறும் அணியை இங்கிலாந்து அணி அரையிறுதியில் எதிர்கொள்ளும்.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து