முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாடு முழுவதும் தொடங்கியது லாரிகள் வேலைநிறுத்தம் ரூ. 4,000 கோடி வர்த்தகம் பாதிக்கும்

வெள்ளிக்கிழமை, 20 ஜூலை 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி: பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கியுள்ளன. இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் ரூ. 4,000 கோடி வர்த்தகம் பாதிக்கும் என்று கூறப்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும் ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் கொண்டு வந்து அவற்றின் விலையை குறைக்க வேண்டும். நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும். ஆண்டுக்கு ஒருமுறை சுங்கக் கட்டணம் வசூலிக்கும் முறையை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் நாடு முழுவதும் லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியுள்ளது.

இந்த போராட்டத்திற்கு அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் அழைப்பு விடுத்தது. இந்த வேலைநிறுத்த போராட்டத்திற்கு தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனமும் ஆதரவு தெரிவித்துள்ளது.

மேலும் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு தென்மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம், டிரெய்லர் லாரி உரிமையாளர்கள் சங்கம் மற்றும் சரக்கு புக்கிங் ஏஜெண்டுகள் சம்மேளனம் என பல்வேறு அமைப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதனால் தமிழகத்தில் இருந்து வடமாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படும் ஜவுளி, கட்டுமானப் பொருட்கள், தீப்பெட்டி, ஜவ்வரிசி, மோட்டார் உதிரிபாகங்கள் உள்ளிட்டவை தேக்கம் அடைய தொடங்கி உள்ளன. இதேபோல் வடமாநிலங்களில் இருந்து வரும் பருப்பு வகைகள், மளிகை பொருட்கள் உள்ளிட்டவையும் தடைபட்டுள்ளது.

காலவரையற்ற வேலைநிறுத்தம் காரணமாக நாடு முழுவதும் 90 லட்சம் லாரிகள் இயங்கவில்லை. லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் ஆபத்து உருவாகி உள்ளது. இதனிடையே லாரிகள் வேலை நிறுத்தத்தால் நாள் ஒன்றுக்கு 4000 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கும் என கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து