2020 ஒலிம்பிக் போட்டியில் விளையாடுவேன்: டென்னிஸ் வீராங்கனை சானியா நம்பிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 29 ஜூலை 2018      விளையாட்டு
sania 2018 07 29

துபாய்: 2020-ம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் விளையாடுவேன் என்று இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தெரிவித்தார்.

முழங்கால் காயம் காரணமாக டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, கடந்த சில மாதங்களாக டென்னிஸ் விளையாடுவதில்லை. முழங்கால் காயத்துக்காக அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் அவர் தற்போது கர்ப்பமாக இருக்கிறார். அவருக்கு வரும் அக்டோபர் மாதம் குழந்தை பிறக்கவுள்ளது. அதன் பிறகு அவர் டென்னிஸ் களத்துக்கு திரும்புவாரர் என்று துபாயிலிருந்து வெளியாகும் கல்ப் நியூஸ் பத்திரிகை தெரிவிக்கிறது.

இதுகுறித்து சானியா மிர்சா அளித்த பேட்டி வருமாறு:
தற்போது நாம் 2018-ம் ஆண்டில் இருக்கிறோம். எனக்கு கடந்த ஆண்டு ஏற்பட்ட முழங்கால் காயம் இன்னும் குணமாகவில்லை. மேலும் நான் தற்போது கர்ப்பமாக இருக்கிறேன். வரும் அக்டோபரில் எனக்கு குழந்தை பிறக்கவுள்ளது. அடுத்த ஆண்டு இறுதிக்குள் எனது குழந்தை பிறந்து ஓராண்டு பூர்த்தியாகிவிடும்.
அதற்குள்ளாகவே நான் மீண்டும் டென்னிஸ் பயிற்சியில் இறங்கிவிடுவேன். 2020-ம் ஆண்டு நடைபெறவுள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்குள் நான் தயாராகி விடுவேன்.

நான் பழமையான பெண்களின் வழியைப் பின்பற்றாமல் எனது வாழ்க்கையை வாழ்ந்து வருகிறேன். மற்ற பெண்களிடமிருந்து நான் வித்தியாசப்பட்டிருக்கிறேன். அப்படி இருப்பதில் நான் பெருமை கொள்கிறேன். எனது முடிவுகளுக்கு எனது பெற்றோரும் ஊக்கம் கொடுத்து வருகின்றனர்.

நான் டென்னிஸ் விளையாட ஆரம்பித்தபோது எனது உறவினர்களும், எனது மதத்தைச் சேர்ந்தவர்களும் கடுமையாக எதிர்த்தனர். அப்போது நான் விம்பிள்டன் போட்டியில் பட்டம் வெல்வேன் என்றோ, நான் விரும்பியவரை திருமணம் செய்து கொள்வேன் என்றோ, 8 ஆண்டுகள் வரை குழந்தை பெற்றுக் கொள்ளாமல் இருப்பேன் என்றோ நினைக்கவில்லை. ஆனால் எனது அனைத்து முடிவுகளுக்கும் எனது பெற்றோர் உறுதுணையாக இருந்தனர்.

என்னையும், எனது கணவர் ஷோயப் மாலிக்கையும் விளையாட்டுதான் இணைத்தது. விளையாட்டிலும் நாங்கள் சாதித்தோம். அதே நேரத்தில் அந்த விளையாட்டுதான் எங்களிடமிருந்து நிறைய எடுத்துக்கொண்டது. நான் ஒரு நாட்டில் விளையாடிக் கொண்டிருந்தால், அவர் ஒரு நாட்டில் விளையாடிக் கொண்டிருப்பார்.
ஆனால், நாங்கள் ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்துகொண்டோம். விளையாட்டிலும் சரி. வாழ்க்கையிலும் சரி. நாங்கள் விட்டுக்கொடுத்து வாழ்வதற்கு பழகிக் கொண்டோம். இவ்வாறு அவர் கூறினார்.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து