முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரோடு, நாமக்கல்லில் காவிரி வெள்ள சேதங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் பார்த்தார் - பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமும் வழங்கினார்

ஞாயிற்றுக்கிழமை, 19 ஆகஸ்ட் 2018      தமிழகம்
Image Unavailable

ஈரோடு : ஈரோடு, நாமக்கல்லில் காவிரி வெள்ள சேதங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று நேரில் சென்று பார்வையிட்டார்.

தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட உபரி நீர் மேட்டூர் அணைக்கு வந்து சேர்ந்தது. இதையடுத்து மேட்டூர் அணை நிரம்பியதால் அணையில் இருந்து 2 லட்சம் கன அடி நீர் காவிரியில் திறந்து விடப்பட்டது. காவிரி வெள்ளத்துடன் பவானி அணையில் இருந்து திறக்கப்படும் 15 ஆயிரம் கன அடி நீரும் கலந்ததால் காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த காவிரி வெள்ள நீர் கரையோர பகுதிகளில் புகுந்தது. பவானி ஆற்றின் சீற்றத்தால் சின்னாற்று பாலம், மார்க்கெட் வீதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெள்ள நீர் புகுந்தது. மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளிலும் வெள்ள நீர் புகுந்தது. அந்த வீடுகளை சேர்ந்த பொதுமக்கள் திருமண மண்டபங்களிலும், பள்ளிகளிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளிலும் சுமார் 1500 வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்தது. இதனால் அப்பகுதி மக்களும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதே போல் காவிரி வெள்ளத்தால் ஈரோடு கருங்கல்பாளையம், கொடுமுடி, ஊஞ்சலூர் பகுதிகளிலும் தண்ணீர் சூழ்ந்துள்ளது.

வேட்டியை மடித்து கட்டி நீரில் இறங்கிய முதல்வர்

காவிரி மற்றும் பவானி வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று நேரில் சென்று பார்வையிட்டார். சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த அவர் காரில் ஈரோடு மாவட்டம் பவானி சென்றார். அங்கு கல்யாண மண்டப முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களுக்கு நிவாரண பொருட்களையும் அவர் வழங்கினார். பவானியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்வர் எடப்பாடி நடந்து சென்று பார்வையிட்டார். வேட்டியை மடித்து கட்டியபடி தண்ணீரில் இறங்கி பார்வையிட்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

அதிகாரிகளுடன் ஆலோசனை

தொடர்ந்து பவானி, குமாரபாளையம், பழைய காவிரி ஆற்று பாலத்தையும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பவானி மார்க்கெட் பகுதியையும் அவர் பார்வையிட்டார். அதன் பிறகு குமாரபாளையம் பஸ் நிலையம் அருகே புதுப்பாலத்தில் நின்று காவிரி ஆற்றை பார்வையிட்டார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு கல்யாண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள 200-க்கும் மேற்பட்டோரை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறி நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் வழங்கினார். மேலும் தேவையான அனைத்து வசதிகளும் செய்து தர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக என்று முதல்வர் பொதுமக்களிடம் தெரிவித்தார். குமாரபாளையம் நகராட்சி அலுவலக வளாகத்தில் 2599 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்கினார். பின்னர் காரில் பள்ளிபாளையம் சென்ற அவர், அதை தொடர்ந்து ஈரோடு காலிங்கராயன் பயணியர் விடுதியில் ஈரோடு, நாமக்கல், சேலம் மாவட்ட கலெக்டர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து