முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குமரி மாவட்டத்தில் மழை பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் உறுதி

ஞாயிற்றுக்கிழமை, 19 ஆகஸ்ட் 2018      தமிழகம்
Image Unavailable

ஆரல்வாய்மொழி : கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பாதிப்புகள் குறித்து கண்காணிப்பு அதிகாரி ராமசந்திரன் ஆய்வு மேற்கொண்டு அரசுக்கு அனுப்பினார். இதனை தொடர்ந்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவின் பேரில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்,  மற்றும் செய்தி மக்கள் தொடர்பு துறை அமைச்சர் கடம்பூர் ராஜு ஆகியோர் குமரி மாவட்டம் நாகர்கோவில் வந்தனர். பின்னர் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே , மற்றும் பல்வேறு துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

கூட்டத்தில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசியதாவது,

குமரி மாவட்டம் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து எல்லாவற்றிலும் இருந்து மீண்டு கம்பீரமாக நிற்கும் மாவட்டம். இங்கு பொது மக்களுக்காக இணைந்து செயலாற்றும் அதிகாரிகளின் ஒத்துழைப்பினால் எந்த பேரிடரும் பாதிப்புகளும் அசாதாரணமாக மேற்கொள்ளப்பட்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப காரணமாக உள்ளது. ஓகிப்புயலின் பாதிப்பிலிருந்து நிலைமையை துரிதமாக கட்டுக்கோப்பிற்க்குள் அதிகாரிகள் கொண்டு வந்தது சிறப்பான ஒன்று. தற்போதும் குமரி மாவட்டத்தில் மழை பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏற்பட்ட இழப்புகளுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த பாதிப்புகளை வெகு கவனமாக கையாண்டு பெரும் பாதிப்புகள் குறைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தங்கள் உடமைகளை பாதுகாத்திட சென்று வெள்ளத்தில் மூழ்கிய மீனவர்கள் செய்தி பெரும் மனவேதனையை தருகின்றது. ஒருவரது உடல் மீட்கப்பட்டுள்ளது. இன்னொரு மீனவர் உடலை தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. மேலும் குமரி மாவட்டத்தில் மழை வெள்ளம் பாதிப்பு ஏற்படும் இடங்களின் வரிசையில் 14 இடங்கள் மேலும் கூடுதலாக சேர்க்கப்பட்டு உள்ளது.

மேலும் காவிரியில் ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்களின் துயரம் கருதி அவர்களின் நிலைமை கண்காணித்திட வேண்டி முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சேலம் , மற்றும் ஈரோடு மாவட்டங்களுக்கு புறப்பட்டு சென்றுள்ளார். மேலும் குறிப்பாக எவ்வித பேரிடர்கள் வந்தாலும் அதை சாமாளித்திடும் வகையில் அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் நிர்வாகம் சிறந்த கட்டுக்கோப்பாக உள்ளது. இவ்வாறு அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார். 

அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசுகையில்,

பொதுப்பணித்துறை நிர்வாகம் மற்றும் அதிகாரிகள் 24 மணி நேரமும் நிலையை கவனமாக கவனித்து வருகின்றனர். அணைகளின் நீர் வரத்து, நீர்மட்டம் போன்ற தகவல்களை மக்களுக்கு தெரியபடுத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தின் நிலைமை சீராகவும் கட்டுபாட்டுக்குள்ளும் உள்ளது. எனவே பொதுமக்கள் எவ்வித அச்சமும் கொள்ள தேவையில்லை. மேலும் பேரிடர் காலங்களில் பொதுமக்களின் தேவைகளான சாலை வசதி , குடிநீர் வசதி , மின்சார வசதி போன்றவைகள் சீராக கிடைத்திட அந்தந்த துறையை சார்ந்த அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு தந்து உதவ வேண்டும். 

குமரி மாவட்ட பேரிடர் பாதிப்புகளை பற்றி கூட்டாக தெரிவிக்கையில் குறிப்பாக மழையின் காரணமாக பெருஞ்சாணி அணை , பேச்சிப்பாறை அணை சிற்றார் அணை போன்ற பகுதிகளுக்கு வரும் நீர்வரத்து பற்றிய உரிய நடவடிக்கைகள் எடுத்து பொதுமக்களுக்கு மிகுதியான பாதிப்புகள் ஏற்படா வண்ணம் நடவடிக்கை மேற்க்கொண்ட மாவட்ட ஆட்சியர் மற்றும் அணைத்துறை அதிகாரிகளுக்கு நன்றி எனவும் அமைச்சர்கள் தெரிவித்தனர்.

அதிகாரிகளுடனான கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த். மு. வடநேரே , கூடுதல் ஆட்சியர் ராகுல்நாத் , மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் ரேவதி , கோட்டாட்சியர் ஜானகி ,தோவாளை வட்டாட்சியர் ப. சுரேஷ்குமார் , கல்குளம் வட்டாட்சியர் சஜித் , கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விஜயபாஸ்கர் (மதுவிலக்குபிரிவு), மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.ஏ.அசோகன் (கி) , குமரி மேற்கு மாவட்ட செயலாளர் ஜான் தங்கம் , ஆரல்வாய்மொழி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் கிருஷ்ணகுமார் , மாவட்ட மாணவரணி துணைத்தலைவர் ஞாலம் ஜெகதீஸ் , முன்னாள் நகர் மன்ற கவுன்சிலர் விக்கிரமன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நரசிங்க மூர்த்தி, அமைப்பு சாரா ஓட்டுநர் சங்க இணை செயலாளர் சிவ. அழகேசன் , மாவட்ட வழக்கறிஞர் அணி இணை செயலாளர் கே.எல்.எஸ் .ஜெயகோபால் , துணைச்செயலாளர் ஞா.லெட்சுமிகாந்த் ( எ) மது , தாழக்குடி பேரூர் கழக செயலாளர் அய்யப்பன் ,மாவட்ட மகளிரணி இணைசெயலாளர் லதா ராமச்சந்திரன் , தோவாளை ஒன்றிய பாசறை தலைவர் தோவாளை சுதாகர் மற்றும் அனைத்துத்துறை சார்ந்த உயரதிகாரிகள் மற்றும் கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து