சுற்றுச்சூழலை காப்பாற்றவே பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கை முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்

வெள்ளிக்கிழமை, 31 ஆகஸ்ட் 2018      தமிழகம்
cm 3 salem 31-08-2018

சேலம், சுற்றுச்சூழலை காப்பாற்றவே பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கை தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
 

சேலத்தில் நடைபெற்ற விழாவில் அவர் பேசியதாவது, சேலம் மாநகரத்திலே ஏற்கனவே பிளாஸ்டிக் பொருள் தடை செய்யப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் ஒருமுறை உபயோகப்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என்பதற்காக அம்மாவினுடைய அரசு ஆணை பிறப்பித்திருக்கின்றது. இது ஜனவரி, 2019 முதல் அமலுக்கு வருகின்றது. இப்பொழுதே மாநகராட்சியைச் சேர்ந்த ஆணையாளர்கள், சேலம் மாநகரத்திலே ஒருமுறை உபயோகப்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்யக் கூடிய ஒரு சூழ்நிலையை உருவாக்கியிருக்கிறார்கள்.

வரும் ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் தமிழ்நாட்டில் முழுவதுமாக தடை செய்யப்படும் என்ற அரசின் அறிவிப்பிற்கிணங்க, சேலம் மாநகராட்சி,அதன் எல்லைக்குட்பட்ட எம்.ஜிஆர் மத்திய பேருந்து நிலையம் மற்றும் பழைய பேருந்து நிலையங்களில் உள்ள கடைகளில் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் தண்ணீர் பாக்கெட்டுகள் விற்பனையும் அதனது பயன்பாட்டிற்கு 1.8.2018 முதல்  தடை விதித்து ஆணை பிறப்பித்து அது நடைமுறைப்படுத்த இருக்கிறது. 

சுற்றுச் சூழலை காப்பாற்றுவதற்காக தமிழகத்திலே பிளாஸ்டிக் இல்லாத தமிழகமாக பாதுகாக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு 1.1.2019 முதல் தமிழகத்தில் தடை விதிக்கப்பட உள்ளது என்பதை சட்டப்பேரவையில் அறிவித்தேன். தமிழகம் முழுவதும் மேற்கூறிய தடையை அமல்படுத்த தலைமைச் செயலாளர் தலைமையில் வழிகாட்டுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவில், மேற்கூறிய நோக்கத்தை செயல்படுத்தும் நோக்கில், மாவட்ட ஆட்சியாளர் தலைமையில் மாவட்டங்களில் குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசாணையின்படி, ஒருமுறை பயன்படுத்திய பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்தல், சேமித்தல், வாகனங்களில் எடுத்துச் செல்லுதல், விநியோகம், விற்பனை மற்றும் பயன்படுத்துவதை தடைவிதித்து உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் பொருட்களின் தீமைகள் பலவகை பிளாஸ்டிக் பொருட்களை உபயோகித்தால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதாக பெரும்பாலும் அறியப்பட்டுள்ளது. ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக்,  ஒவ்வொரு உபயோகப்படுத்தும் பிளாஸ்டிக் பொருளும் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் நீண்டகாலம் பூமியில் நிலைத்து இருக்கிறது. பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகத்தினால் மரபணு பாதிக்கும் நிலை ஏற்படுத்துதல், நீர்நிலைகளை மாசுபடுத்துதல், நிலத்தடி நீர் நிலத்தில் ஊடுருவுவதையும் தடுக்கிறது. கீழ்க்கண்ட ஒருமுறை உபயோகப்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்படுகின்றன.

பிளாஸ்டிக் பேப்பர்கள், பிளாஸ்டிக் மேசை விரிப்புகள், பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் தடவப்பட்ட டம்ளர், பிளாஸ்டிக் டீ டம்ளர், பிளாஸ்டிக் கை-பைகள், பிளாஸ்டிக் தடவப்பட்ட கை-பைகள், பிளாஸ்டிக் தண்ணீர் பாக்கெட்டுகள் இவையெல்லாம் தடை செய்யப்பட்டிருக்கின்றன. அதற்கு பதிலாக, மாற்றாக பயன்படுத்தக்கூடிய பொருட்கள் வாழை இலை, தாமரை இலை, பாக்குமர இலையிலான தட்டுகள், கண்ணாடி, உலோகங்களிலான பொருட்கள், துணி, காகிதம், சணல் பைகள், காகித துணிப் பைகள், பீங்கான் பாத்திரங்கள், மண் கரண்டிகள் மற்றும் மண்பானைகள் ஆகியவைகளை பயன்படுத்தலாம்.   

விலக்கு அளிக்கப்படுகின்ற பொருட்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள், பிளாஸ்டிக் பேனர்கள், பால், தயிர், எண்ணெய் விற்கக்கூடிய பிளாஸ்டிக் பைகள், மருத்துவப் பொருட்களுக்கான உறைகள்,    பிளாஸ்டிக் கன்டெய்னர்.  அனைத்து அரசு அலுவலகங்களிலும் ஒருமுறை மட்டும் உபயோகப்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை உடனடியாக தடை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பு பலகைகள் அனைத்து அலுவலகங்களிலும் பொதுமக்கள் அறியும்படியான இடங்களில் நிறுவுமாறும்  அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து