முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவாடனையில் குடிமராமத்து திட்ட பணிகள் கலெக்டர் வீரராகவராவ் நேரில் ஆய்வு செய்தார்

வெள்ளிக்கிழமை, 14 செப்டம்பர் 2018      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை ஊராட்சி ஒன்றியம், எட்டிசேரி மற்றும் களியநகரி ஆகிய கிராமங்களில் உள்ள கண்மாய்களில் பொதுப்பணித்துறை, நீர்வள ஆதாரத்துறை (கீழ் வைகை வடிநிலக் கோட்டம்) யின் மூலம் குடிமராமத்து திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் கண்மாய் சீரமைப்புப் பணிகளை மாவட்ட கலெக்டர் கொ.வீர ராகவ ராவ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

 தமிழ்நாடு அரசு, மாநிலத்தில் உள்ள நீர்வள ஆதாரங்களை மேலாண்மை செய்து, மழைக்காலத்தில் அதிகளவில் மழைநீரை சேமித்திட ஏதுவாக பண்டைய குடிமராமத்து திட்டத்திற்கு புத்துயிர் அளித்திடும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பு நிதியாண்டில் மொத்தம் 64 கண்மாய்களில் ரூ.31.20 கோடி மதிப்பீட்டில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக பரமக்குடி, கீழ்வைகை வடிநிலக் கோட்டக் கட்டுப்பாட்டில் மொத்தம் 37 கண்மாய்கள் ரூ.20.72 கோடி மதிப்பீட்டிலும், குண்டாறு வடிநிலக்கோட்டம் கட்டுப்பாட்டின் கீழ் 15 கண்மாய்கள் ரூ.6.81 கோடி மதிப்பீட்டிலும், மணிமுத்தாறு வடிநிலக்கோட்டம், தேவக்கோட்டை கட்டுப்பாட்டின் கீழ் 1 கண்மாய் ரூ. 0.52 கோடி மதிப்பீட்டிலும், முன்னாள் ஜமீன்தாரர்கள் கண்மாய் கோட்டம், காரைக்குடி கட்டுப்பாட்டின் கீழ் 5 கண்மாய்கள் ரூ.1.13 கோடி மதிப்பீட்டிலும், சிறப்பு திட்டக் கோட்டம், மானாமதுரை கட்டுப்பாட்டின் கீழ் பரமக்குடி வட்டத்தில் 6 கண்மாய்கள் ரூ.2.02 கோடி மதிப்பீட்டிலும் குடிமராமத்து திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 
 அதன்படி, குடிமராமத்து திட்டத்தின் கீழ் திருவாடனை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட எட்டிசேரி மற்றும் களியநகரி ஆகிய கிராமங்களில் உள்ள கண்மாய்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்புப் பணிகளை கலெக்டர் வீரராகவராவ் நேரில் ஆய்வு செய்தார். எட்டிசேரி கண்மாயில் ரூ.56 லட்சம் மதிப்பில் குடிமராமத்து திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, 2,675 மீ நீளத்திற்கு கரை பலப்படுத்தும் பணிகளும், 5 மதகுகள் மறுகட்டமைப்பு செய்தல், 1 கலுங்கு சீர்செய்தல் போன்ற பணிகள் முன்னேற்றத்திலுள்ளன. இதன்மூலம் 42.53 ஹெட்டேர் பரப்பளவு விளைநிலங்கள் பாசன வசதி பெறும். அதேபோல, களியநகரி கண்மாயில் ரூ.48.70 லட்சம் மதிப்பில் குடிமராமத்து திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, 2,410 மீ நீளத்திற்கு கரை பலப்படுத்தும் பணிகளும், 4 மதகுகள் மறுகட்டமைப்பு செய்தல், 1 கலுங்கு சீர்செய்தல் போன்ற பணிகள் முன்னேற்றத்திலுள்ளன. இதன்மூலம் 53 ஹெட்டேர் பரப்பளவு விளைநிலங்கள் பாசன வசதி பெறும். பணிகளை ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் முன்னேற்றத்திலுள்ள பணிகளின் நிலை குறித்து அலுவலர்களிடத்தில் கேட்டறிந்தார். மேலும், கண்மாய் சீரமைப்பு பணிகளை துரிதமாக முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது, பொதுப்பணித்துறை, நீர்வள ஆதாரத்துறை செயற்பொறியாளர் கே.வெங்கிடகிருஷ்ணன் (கீழ வைகை கோட்டம்), மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பி.ராஜா, உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன், சிவராமகிருஷ்ணன், உதவி பொறியாளர்கள் முத்தமிழரசன், மகேந்திர பாண்டியன், பரமேஸ்வரன் உள்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து