ரெப்போ, ரிவர்ஸ் ரெப்போ விகிதத்தில் மாற்றம் செய்யவில்லை - ரிசர்வ் வங்கி

வெள்ளிக்கிழமை, 5 அக்டோபர் 2018      வர்த்தகம்
RBI

புதுடெல்லி, ரெப்போ விகிதம் மற்றும் ரிவர்ஸ் ரெப்போ விகிதங்களில் ரிசர்வ் வங்கி எந்த மாற்றமும் செய்யவில்லை. எனவே ரெப்போ விகிதம் 6.50 சதவீதமாக நீடிக்கும்.

இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை கூட்டம் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை நடத்தப்பட்டு, வட்டி விகிதம் மற்றும் நிதிக்கொள்கை முடிவுகள் வெளியிடப்படும். கடைசியாக நடந்த இரண்டு கூட்டங்களின் முடிவில் வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டது. கடைசியாக ஆகஸ்ட் மாதம் நடந்த கூட்டத்தில் வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டி விகிதம் (ரெப்போ) மற்றும் வங்கிகளிடமிருந்து ரிசர்வ் வங்கி பெறும் கடன்களுக்கான வட்டி விகிதம் (ரிவர்ஸ் ரெப்போ) 0.25 சதவீதம் அளவுக்கு உயர்த்தப்பட்டது. அதன்படி ரெப்போ வட்டி விகிதம் 6.50 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ 6.25 சதவீதமாகவும் உயர்ந்தது.

இந்நிலையில், ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் தலைமையில் நேற்று நிதிக்கொள்கை குழு  மீண்டும் கூடியது. இக்கூட்டத்தில் நிதிக் கொள்கைக் குழுவின் உறுப்பினர்கள் கலந்து கொண்டு வட்டி விகிதம் தொடர்பாக ஆலோசித்தனர். தற்போதைய சந்தை நிலவரம், பணவீக்கம், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, பொருளாதார நிலை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.  தற்போதைய சந்தை நிலவரத்தை கருத்தில் கொண்டு வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யக்கூடாது என நிதிக்கொள்கை குழுவின் 4 உறுப்பினர்கள் கருத்து தெரிவித்தனர். ஒரு உறுப்பினர் 0.25 சதவீதம் உயர்த்த வேண்டும் என கூறினார். மற்றொரு உறுப்பினர் நடுநிலை வகித்தார்.

இந்த ஆலோசனைக் கூட்டம் நேற்று பிற்பகல் நிறைவடைந்த நிலையில், ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு தனது கொள்கை முடிவை வெளியிட்டது. அதில் ரெப்போ வட்டி விகிதம் மற்றும் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. எனவே ரெப்போ 6.50 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ 6.25 சதவீதமாகவும் நீடிக்கும். மார்ச் வரையிலான காலகட்டத்தில் நாட்டின் பணவீக்கம் 4.5 சதவீதமாக அதிகரிக்கும். ஜி.டி.பி. வளர்ச்சியானது 7.4 சதவீதம் என்ற நிலையில் மாற்றம் இருக்காது எனவும் ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து