முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குஜராத் நர்மதா அணை பகுதியில் கட்டப்பட்ட 182 மீட்டர் உயர படேல் சிலையை 31-ம் தேதி பிரதமர் திறந்து வைக்கிறார்

சனிக்கிழமை, 13 அக்டோபர் 2018      இந்தியா
Image Unavailable

காந்திநகர் : இந்தியாவின் முதல் துணை பிரதமராக பதவி வகித்தவர் சர்தார் வல்லபாய் படேல். குஜராத் மாநிலத்தை சேர்ந்த இவர் நாடு சுதந்திரம் அடைந்த பிறகு ஆங்காங்கே துண்டு துண்டாக கிடந்த  சமஸ்தானங்களை கையகப்படுத்தி ஒன்றுபட்ட இந்தியா உருவாக வழிவகுத்தார். இதனால் இவருக்கு இந்தியாவின் இரும்பு மனிதர் என்ற சிறப்பு கிடைத்தது. சர்தார் வல்லபாய் படேலுக்கு உலகிலேயே மிக மிக உயரமான பிரம்மாண்டமான சிலை அமைக்க கடந்த 2013-ம் ஆண்டுஅப்போதைய குஜராத் முதல்வர் மோடி அறிவித்தார்.

இதையடுத்து படேலுக்கு சிலை அமைப்பதற்கான ஏற்பாடுகள் தொடங்கின. நாடு முழுவதும் இரும்பு, மணல் சேகரிக்கப்பட்டது. இந்த நிலையில் மோடி 2014-ம் ஆண்டு பிரதமரானதும், அதே ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி படேல் சிலை தயாரிப்பு பணியினை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து படேல் சிலை தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடந்தன. தற்போது சிலை தயாரிப்பு பணி நிறைவு பெற்றுள்ளது.

படேல் சிலை குஜராத்தில் வதேதரா மாவட்டத்தில் சாதுபேட் எனும் இடத்தில் நர்மதா அணையை பார்த்தபடி நிற்கும் வகையில் படேல் சிலை நிறுவப்பட்டுள்ளது. படேல் சிலையின் மொத்த உயரம் 182 மீட்டராகும். 20 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவு உள்ள தீவில் இந்த சிலை கம்பீரமாக நிற்கப் போகிறது. இந்த சிலையை சுற்றி 12 சதுர கி.மீ. அளவுக்கு செயற்கை ஏரி உருவாக்கப்பட்டுள்ளது.

உலகின் மிக சிறந்த சுற்றுலா தலங்களுள் ஒன்றாக மாற்ற குஜராத் மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இந்த சிலை திறப்பு விழா வருகிற 31-ம் தேதி நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடி விழாவில் கலந்து கொண்டு படேல் சிலையை திறந்து வைக்கிறார். படேல் சிலையை இந்திய ஒற்றுமையின் சின்னமாக அறிவிக்க பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார். இதை கருத்தில் கொண்டு படேல் சிலை திறப்பு விழாவில் கட்சி பாகுபாடு இல்லாமல் அனைத்து மாநில முதல்வர்களையும் விழாவில் பங்கேற்க செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மாநில முதல்வர்களை அழைக்க குஜராத் முதல்வர் விஜய்ரூபானி பல்வேறு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை கொண்ட குழுக்களை அமைத்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து