முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெண் பத்திரிகையாளர் மீது அக்பர் அவதூறு வழக்கு: நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஏற்பு

சனிக்கிழமை, 20 அக்டோபர் 2018      இந்தியா
Image Unavailable

 புதுடெல்லி : பெண் பத்திரிகையாளருக்கு எதிராக மத்திய முன்னாள் இணையமைச்சர் எம்.ஜே.அக்பர் தொடுத்துள்ள அவதூறு வழக்கை டெல்லி பெருநகர கூடுதல் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.

இதையடுத்து வரும் 31-ஆம் தேதி அதன் மீதான வாத, பிரதிவாதங்கள் நடைபெறும் என்றும், அன்றைய தினம் அக்பரின் வாக்குமூலம் பதிவு செய்யப்படும் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

இதனிடையே, அந்த வழக்கை திரும்பப் பெற வேண்டும் என்று இந்திய ஊடக ஆசிரியர்கள் சங்கம் எம்.ஜே. அக்பரிடம் வலியுறுத்தியுள்ளது. அவ்வாறு வாபஸ் பெறாவிட்டால், பாதிக்கப்பட்ட பெண் பத்தரிகையாளர்களுக்குத் தேவையான சட்ட உதவிகளை அளிக்க முன்வருவோம் என்றும் கூறியுள்ளது.

சமீப காலமாக மீ டூ என்ற வார்த்தை தேசத்தின் பிரதான விவாதப் பொருளாக உருவெடுத்துள்ளது. சுட்டுரையில் மீ டூ என்ற தலைப்பில் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்களை பகிர்ந்து வருகின்றனர். அதில் சில முக்கியப் பிரமுகர்களின் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்த வரிசையில், வெளியுறவுத் துறை இணையமைச்சராக இருந்த எம்.ஜே. அக்பரின் பெயரும் இடம்பெற்றது விமர்சனங்களுக்கு வித்திட்டது. அமைச்சராவதற்கு முன்பு பல்வேறு பத்திரிகைகளில் ஆசிரியராகப் பொறுப்பு வகித்த அவர் மீது பெண் பத்திரிகையாளர்கள் சிலர் அக்குற்றச்சாட்டை முன்வைத்திருந்தனர்.

அவர்களில் பிரியா ரமணி என்பவர்தான் முதன் முதலாக அவருக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகளைத் தெரிவித்திருந்தார்.

இது அக்பருக்கு சிக்கலை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து தனது அமைச்சர் பதவியை அவர் ராஜிநாமா செய்தார். இதனிடையே, பிரியா ரமணிக்கு எதிராக அவர் அவதூறு வழக்கு தொடுத்தார். அது, டெல்லி பெருநகர கூடுதல் மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி சமர் விஷால் முன்பு   விசாரணைக்கு வந்தது.    

அப்போது எம்.ஜே.அக்பர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டதாவது:

சம்பந்தப்பட்ட பெண் பத்திரிகையாளர் வேண்டுமென்றே திட்டமிட்டு மனுதாரர் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இதனால், எம்.ஜே. அக்பரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, தனது அமைச்சர் பதவியையும் அவர் துறக்க நேர்ந்தது என்று வழக்கறிஞர் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, வழக்கின் விசாரணையை வரும் 31-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து