முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ரூ.45 கோடி 'தீபாவளி முன்பணம்' : ரூ.251 கோடி நிலுவைத்தொகை வருகிற 5-ம் தேதி வங்கி கணக்கில் செலுத்தப்படும் - தமிழக அரசு அறிவிப்பு

வியாழக்கிழமை, 1 நவம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : போக்குவரத்து தொழிலாளர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரூ.45 கோடி முன் பணம் வழங்கப்படும் என்றும், அந்த பணம் இன்று அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார். மேலும், ரூ.251 கோடி நிலுவைத்தொகை வருகிற 5-ம் தேதி போக்குவரத்து ஊழியர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

5-வது முறை...

சென்னை தலைமைச்செயலகத்தில் போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு போக்குவரத்துறையில் மக்களுக்குத் தேவையான வசதிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஒப்புதலோடு பல்வேறு நடவடிக்கையை எடுத்து வருகிறது. சென்னையிலிருந்து வெளியூர் செல்வதற்கும், மற்ற ஊர்களிலிருந்து சென்னை வருவதற்கும் சிறப்பு பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து 5-வது முறையாகச் சென்னையிலிருந்து 5 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு பேருந்துகள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிறப்பு பேருந்துகள்

வரும் 3,4,5 ம் ஆகிய மூன்று நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். இருந்த போதிலும் திங்கட்கிழமை அரசு விடுமுறை அளிக்கப்பட்ட காரணத்தால் இன்று முதல் பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்க்கு கே.கே.நகர்., ஈ.சி.ஆர் வழியாக செல்ல கூடிய பேருந்துகள் கே.கே.நகர் பகுதியிலிருந்தும், கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், ஒசூர் மார்க்கமாக செல்ல கூடிய பேருந்துகள் பூந்தமல்லியிலிருந்தும், ஆந்திரா மார்க்கமாக செல்லக்கூடிய பேருந்துகள் புதியதாக திறக்கப்பட்ட மாதவரம் பணிமனையிலிருந்தும், வழக்கம்போல கோயம்பேடு பணிமனையிலிருந்து 2-ம் தேதியே பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். திருவண்ணாமலை பகுதிக்கு அதிக அளவு மக்கள் செல்வதால் தாம்பரம் மற்றும் கோயம்பேடு பகுதியில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

சிறப்பு ஏற்பாடுகள்

இதுவரை 30 முன்பதிவு மையங்கள் திறக்கப்பட்டுள்ளது.சேலத்திலும் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதுபோல பண்டிகை முடிந்து மக்கள் திரும்புவதற்க்கும் 7,8,9,10 ஆகிய தேதிகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கை ஏற்று முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் இன்று (நேற்று) 20 சதவீதம் அதாவது 8.33 போனஸ் மற்றும் 11.67 சதவீதம் ஊக்கத்தொகையாகவும் மொத்தம் 20 சதவீதமாகவும் இன்று வழங்கப்பட்டுவிட்டது. மேலும் முன்பணம் வழங்கவேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்கள். ரூ.45 கோடி முன்பணம் வழங்கத் தமிழக முதல்வர் ஒப்புதல் வழங்கியுள்ளார். இந்த தொகை இன்று (நேற்று) போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வழங்கப்படும்.

நம்புகிறோம்...

ஒய்வுப்பெற்ற தொழிலாளர்களுக்கு 2017-ம் ஆண்டு டிசம்பர் மற்றும் 2018-ம் ஆண்டு ஜனவரி, பிப்ரவரி, மார்ச் ஆகிய நான்கு மாதங்களுக்கு ரூ.251 கோடி ரூபாய் திங்கட்கிழமை அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். போக்குவரத்து தொழிலாளர்களுடன் அரசு தரப்பில் தொடர்ந்து அதிகாரிகள் மூன்று கட்டமாக பேசியுள்ளார்கள். முன்பணம் வேண்டும் என்று கேட்டார்கள். அது இன்று (நேற்று) முதலமைச்சரிடம் பேசி அவர்களும் அனுமதி அளித்துள்ளார். ஊழியர்களுக்குத் தேவையாக நிதிகள் வழங்கப்பட்டுள்ளது. எனவே அவர்கள் போராட்டத்தில் ஈடுபடமாட்டார்கள் என்று நம்புகிறோம். சென்ற வருடம் பொங்கல் பண்டிகையின்போது இதுபோன்ற நிலைமையை ஏற்படுத்தினார்கள். இந்த வரும் தீபாவளி பண்டிகைக்கு வேலைநிறுத்தம் என்ற பிரச்சனையை தொழிற்சங்கங்கள் முன்வைத்துள்ளது.

அனைத்து வசதிகள்...

பொதுமக்களுக்கு இடையூடு ஏற்படாத வகையில் பேருந்துகளை இயக்கவேண்டும். அவர்களுக்குத் தேவையான நிதியை அம்மாவின் அரசு தொடர்ந்து வழங்கிவருகிறது. அனைத்தும் சேர்ந்து 665.67 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. எனவே தொழிலாளர்கள் பணிக்குத் திரும்பி சிறப்பு பேருந்துகளை இயக்குவதற்கான பணிகள் சிறப்பாக நடைபெறும். தமிழக அரசிடம் 22 ஆயிரம் பேருந்துகள் உள்ளது. சிறப்பு பேருந்துகளை இயக்குகிறோம். அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் அரசு பேருந்துகளில் பயணம் செய்யலாமே. ஏன் தனியார் பேருந்துகளை எதிர்பார்க்கிறார்கள். பேருந்து வசதிகளை முழுமையாக நாங்கள் செய்து தந்திருக்கிறோம். எவ்வளவு பயணம் செய்தாலும் நாங்கள் பேருந்துகளை இயக்கத் தயார்.

புதிய பேருந்துகள்...

தனியார் பேருந்துகளுக்கு இணையாகப் படுக்கை வசதியுடன் கூடிய அரசு பேருந்துகள் வந்துவிட்டன. கழிவறையுடன் கூடிய அரசு பேருந்து உள்ளது. எல்லா வசதியையும் செய்துவிட்டோம். 2 ஆயிரம் புதிய பேருந்துகளை அறிவித்தோம். தற்போது ஆயிரம் பேருந்துகள் இயக்கத்தில் உள்ளது. அடுத்த மாதத்தில் இன்னும் 500 பேருந்துகள் வந்துவிடும். அதற்கு பிறகு 3 ஆயிரம் பேருந்துகள் வந்துவிடும். பழைய பேருந்துகள் படிப்படியாகக் குறைக்கப்பட்டு புதிய பேருந்துகள் இயக்கப்படும். இவ்வாறு தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து