முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

"கஜா" புயலை சமாளிக்க அரசு தயார் நிலை

செவ்வாய்க்கிழமை, 13 நவம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை,‘கஜா’ புயலை சமாளிக்க அரசு தயார் நிலையில் உள்ளது. அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது என்று வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறினார்.

‘கஜா’ புயலினை எதிர்கொள்ள மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:–
கஜா புயலானது, மேற்கு மத்திய, கிழக்கு மத்திய மற்றும் தென் வங்கக்கடலில் உருவாகி, கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 5 கி.மீ. வேகத்தில் மேற்கு திசையில் நகர்ந்து சென்னைக்கு கிழக்கு திசையில் 750 கி.மீ. தொலைவில் நாகப்பட்டினத்திற்கு கிழக்கு வடகிழக்கு திசையில் 840 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. இப்புயலானது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு தென்மேற்கு திசையில் நகர்ந்து, மேலும் தீவிரம் அடைந்து தீவிர புயலாக மாறும். மேலும் மேற்கு தென்மேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக தீவிரம் குறைந்து தமிழக கடற்கரை பகுதிகளான கடலூர் மற்றும் பாம்பன் இடையே 15.11.2018 அன்று முற்பகல் புயலாக கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தென்தமிழகத்தின் ஆங்காங்கே 15–ந்தேதி அன்று தீவிர கனமழை பெய்ய கூடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. கஜா புயல் ஏற்கனவே 3 முறை திசை மாறி உள்ளது. காற்றின் திசையானது மணிக்கு 100 கி.மீ வேகத்தில் வடதமிழக கடலோர பகுதிகளில் 14–ந்தேதி காலை முதல் வீசக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளதை அடுத்து மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.முதலமைச்சரின் ஆணைப்படி கடலோர மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு இன்று மாலைக்குள் சென்று ஆயத்த பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.தலைமைச் செயலாளர் அனைத்துத் துறை அலுவலர்கள் மற்றும் மத்திய படை அலுவலர்களுடன் கஜா புயலினை எதிர்கொள்ள மேற்கொள்ளபட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.

கூடுதல் தலைமைச் செயலர், வருவாய் நிருவாக ஆணையர் நேற்று கடலோர மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி காட்சி மூலம் கஜா புயலினை எதிர்கொள்ள மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.‘புயல் மேலாண்மை’ குறித்த நடவடிக்கை பட்டியலின்படி மாவட்ட நிர்வாகங்கள் முன்னேற்பாடுகள் மேற்கொண்டு வருகின்றன.இதுவரையில் கடலோர மாவட்டங்களில் 2559 பாதிக்கப்படக்கூடிய பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன.410 பல்துறை அலுவலர்களை கொண்ட மண்டல குழுக்கள் பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.முதல்நிலை மீட்பாளர்கள் (7158 பெண்கள் உட்பட) 22495 தயார் நிலையில் உள்ளனர்.கூடுதல் தலைமைச் செயலர்–வருவாய் நிருவாக ஆணையரின் ஆணைப்படி, தலா ஒரு குழுவிற்கு 25 நபர்கள் வீதம் சென்னை – 1, கடலூர் – 1, ராமநாதபுரம் – 1, சிதம்பரம் – 2, நாகப்பட்டினம் – 3 என 8 தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் (NDRF) அனுப்பப்பட்டுள்ளன.அதே போல், சென்னை – 1, கடலூர் – 1, நாகப்பட்டினம் – 2 என 4 மாநில பேரிடர் மீட்பு குழுக்கள் (TNDRF) அனுப்பப்பட்டுள்ளன.தேடுதல், மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபடும் காவல்துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை தயார் நிலையில் உள்ளன.ஸ்ரீ சத்யசாய் சேவா மையம், இந்திய செஞ்சிலுவை சங்கம் மற்றும் பிற தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து பேரிடர் காலங்களில் தேடுதல், மீட்பு, நிவாரணப் பணிகளில் ஈடுபடும் வகையில் உருவாக்கப்பட்ட பேரிடர் உதவி படை (Disaster Response Guards) தயார் நிலையில் உள்ளன.

அனைத்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில் முழுஅளவில் தண்ணீர் நிரப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.மருத்துவமனைகளின் கீழ் தளத்திலுள்ள ஜெனரேட்டர்களை உயர் மட்ட அளவில் பொருத்திடவும், போதிய ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் இருப்பில் வைக்கவும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.அத்தியாவசிய மருந்துகள் போதிய அளவில் இருப்பில் உள்ளன.மரம் அறுக்கும் யந்திரங்கள், ஜே.சி.பி, ஜெனரேட்டர்கள் ஆகியன தயார் நிலையில் உள்ளன. மின்சார துறை ஊழியர்கள் கீழே விழும் கம்பங்கள், ஓயர்கள் மற்றும் மின்மாற்றிகள் அகற்றிட தயார் நிலையில் உள்ளனர்.புயல் கரையை கடந்த பின்பு, சுகாதார பணியாளர்கள் சாலைகளில் உள்ள குப்பைகளை உடனடியாக அகற்றிட வழிவகை செய்யப்பட்டுள்ளது.தாழ்வான பகுதிகளில் இருக்கும் மக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு போதிய படகுகள் தயார் நிலையில் உள்ளன.மக்கள் கடலில் குளிக்கவோ மற்ற பொழுது போக்கு செயல்களில் ஈடுபடவோ கூடாது என மாவட்ட நிர்வாகங்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.இந்திய வானிலை ஆய்வு மையம் அளிக்கும் எச்சரிக்கை தகவல்களை உடனுக்குடன் கடலோர மக்களுக்கு தெரிவிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடற்கரையிலிருந்து 25 மீட்டர் தொலைவில் உள்ள பகுதிகள் புயலால் பாதிக்கப்படும் இடமாக கருதி தக்க நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கப்பட்டுள்ளன. புயல் அடித்து ஓய்ந்த பிறகு பாதிப்புகள் ஏற்படும் இடங்களில் பணிகள் மேற்கொள்ள உடனடியாக ஜேசிபி, ஜெனரேட்டர், மின்சாரத் துறை ஊழியர்கள் தயார் நிலையில் உள்ளனர். புயல் சம்பந்தமாக மக்கள் தவறான வதந்திகளை நம்பி, எந்த செயலிலும் ஈடுபட வேண்டாம்.மேலும் 24 மணி நேரமும் வானிலை கட்டுப்பாட்டு மையம் மற்றும் புயல் தடுப்பு கட்டுப்பாட்டு மையங்கள் திறக்கப்பட்டுள்ளது. மாநில அவசர கட்டுப்பாடு மையமும் தகவல்களை உ டனுக்குடன் அறிவிக்க தயார் நிலையில் உள்ளன.1618 ஜேசிபி யந்திரங்கள், 1454 மரம் அறுக்கும் யந்திரங்கள், 1032 படகுகள், 1442 ஜெனரேட்டர்கள், 1463 தண்ணீர் பம்ப் செட்டுகள், 1125 நீச்சல் வீரர்கள், 1557 பாம்பு பிடிக்கும் வீரர்கள், 236 மருத்துவ குழுவினர், 368 நடமாடும் மருத்துவ குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.இப்பேட்டியின்போது, கூடுதல் தலைமைச் செயலர், வருவாய் நிருவாக ஆணையர் கொ.சத்யகோபால், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலர் டாக்டர் அதுல்ய மிடுரா, மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையர் ராஜேந்திர ரத்னூ ஆகியோர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து