நாட்டில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீது 4,000 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன - சுப்ரீம் கோர்ட்டில் தகவல்

செவ்வாய்க்கிழமை, 4 டிசம்பர் 2018      இந்தியா
supreme-court 2018 10 24

புது டெல்லி : நாட்டில் உள்ள முன்னாள், இன்னாள் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மீது கடந்த 30 ஆண்டுகளாக, 4 ஆயிரத்து 122 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருப்பதாக சுப்ரீம் கோர்ட்டில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

கேரளா, பீகார் மாநிலத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் எம்.எல்.ஏ, எம்.பி.க்கள் மீதான கிரிமினல் வழக்குகளை விசாரிக்க தனி சிறப்பு நீதிமன்றம் அமைக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

பா.ஜ.க.வைச் சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வானி குமார் உபாத்யாயா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநலன் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் அரசியல்வாதிகள் கிரிமினல் குற்றங்களில் ஈடுபட்டு நீதிமன்றத்தால் தண்டனை பெற்றால் அவர்கள் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்க வேண்டும். இந்த வழக்குகளை விசாரணை செய்து தீர்ப்பு வழங்க சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கை விசாரணை செய்த சுப்ரீம் கோர்ட், கடந்த ஆண்டு நவம்பர் 1-ம் தேதி பிறப்பித்த உத்தரவில், எம்.பி, எல்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரணை செய்ய சிறப்பு விரைவு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும். அந்த வழக்குகளை ஒரு ஆண்டுக்குள் முடித்துத் தீர்ப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது.

மேலும், எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருக்கும் விவரங்களையும், விசாரணை நடந்து வருவது குறித்தும் அறிக்கைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு இருந்தது.மேலும், வழக்குக்கு உதவியாக, மூத்த வழக்கறிஞர் விஜய் ஹன்சாரியாவை நீதிமன்றம் நியமித்தது.

இந்நிலையில், இந்த வழக்குக்கு உதவியாக நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் விஜயன் ஹன்சாரியா, அவரின் உதவியாளர் ஸ்னேகா கலிதா ஆகியோர் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீது பல்வேறு மாநிலங்களின் உயர் நீதிமன்றங்கள், கீழ் நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் கிரிமினல் வழக்குகள் குறித்த விரிவான விவரங்களையும், போதுமான அளவுக்குச் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்த அறிக்கையையும் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று தாக்கல் செய்தனர்.

அந்த அறிக்கையில், முன்னாள், இந்நாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீது கடந்த 30 ஆண்டுகளாக 4 ஆயிரத்து 122 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. 264 வழக்குகளில் விசாரணை நடந்து வருகிறது, கடந்த 1991-ம் ஆண்டில் இருந்து பல்வேறு வழக்குகளில் குற்றச்சாட்டு ஏதும் பதிவு செய்யப்படாமலேயே இருக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் நீதிபதிகள் எஸ்.கே. கவுல், கே.எம்.ஜோஸப் ஆகியோர் கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பிறப்பித்த உத்தரவில்,

பீகார், கேரள மாநிலங்களில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு நீதிமன்றம் அமைத்து, எம்.பி.,எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்க வேண்டும். சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டதற்கான அறிக்கையை வரும் 14-ம் தேதிக்குள் பாட்னா, திருவனந்தபுரம் ஐகோர்ட்டுகள் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்க வேண்டும். மேலும், சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டு இருந்தால் எம்.எல்.ஏ, எம்.பி.க்கள் மீதான கிரிமினல் வழக்குகள் விசாரணையை ஐகோர்ட்டுகள், அங்கு மாற்ற வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து