முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறிய வர்த்தகர்களுக்கு எளிய கடன் வசதி, இலவச விபத்து காப்பீடு: மத்திய அரசு புதிய திட்டம்

செவ்வாய்க்கிழமை, 22 ஜனவரி 2019      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, வரும் பாராளுமன்ற தேர்தலில் சிறிய வர்த்தகர்கள், கடை உரிமையாளர்கள் ஆகியோரைக் கவரும் வகையில் எளிய முறையில் கடன் பெறும் வசதி, இலவச விபத்து காப்பீட்டுத் திட்டத்தை கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டு வருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தத் திட்டத்தின் மூலம் நாட்டில் உள்ள லட்சக்கணக்கான வியாபாரிகளையும், சிறிய கடை வைத்திருப்போர்களையும் கவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக 'ராய்டர்ஸ்' செய்தி நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ஏனென்றால், கடந்த 2016-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி வரியால் சிறிய கடைவைத்திருப்போர், சிறிய வர்த்தகர்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு, அதிருப்தியில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின.

மேலும், 5 மாநில சட்டசபை தேர்தலிலும் பா.ஜ.க. தோல்வியைச் சந்தித்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த பா.ஜ.க. அரசு, வர்த்தகத் தரப்பினரை சமாதானம் செய்யும் நோக்கிலும், பாராளுமன்ற தேர்தலில் இவர்களின் ஆதரவைப் பெறும் நோக்கிலும் திட்டமிட்டு வருவதாகப் பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஆண்டுக்கு 50 லட்சத்துக்குக் குறைவாக விற்று முதல் செய்துவரும் சிறிய கடை உரிமையாளர்கள், வர்த்தகர்களுக்கு எளிய முறையில் கடன்வழங்கும் திட்டத்தை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. மேலும், ஆண்டுக்கு ரூ.10 கோடி வரை விற்று முதல் வைத்துள்ள வர்த்தகர்களுக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான இலவச விபத்துக்காப்பீடு வசதி அளிக்கவும் அரசு பரிசீலித்து வருகிறது.

மேலும், சிறிய கடை வைத்திருப்போர், வர்த்தகர்கள் ஆகியோர் தங்களுக்குத் தேவையான விபத்து காப்பீடு திட்டத்தை தேர்வு செய்யும் போது அவர்களுக்குத் தள்ளுபடி அளிக்கும் திட்டத்தையும் பரிசீலித்து வருகிறது. இந்த அறிவிப்புகள் வரும் இடைக்கால பட்ஜெட்டில் இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசில் பதிவு செய்துள்ள வர்த்தகர்கள் தற்போது 60 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருந்து ஓய்வில் இருந்தால், அவர்களுக்கு ஓய்வூதியம் அளிக்கும் திட்டம், பெண் வர்த்தகர்கள் வங்கியில் கடன் பெற்று கடனைத் திருப்பிச் செலுத்தும் போது வட்டியில் தள்ளுபடி அளித்தல் போன்ற திட்டங்களும் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து