டெல்லி அமலாக்கத்துறையிடம் வதேரா 3-வது முறையாக ஆஜர்

புதுடெல்லி : நிதி மோசடி வழக்கு விசாரணைக்காக அமலாக்கத்துறையிடம் ராபர்ட் வதேரா நேற்று மீண்டும் 3 - வது முறையாக ஆஜரானார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் மருமகனும், பிரியங்கா காந்தியின் கணவருமான ராபர்ட் வதேரா,மனோஜ் அரோரா என்பவருடன் சேர்ந்து சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்யததாக மத்திய பொருளாதார அமலாக்கத்துறை அதிகாரிகள் டெல்லி பாட்டியாலா ஹவுஸ் வளாகத்தில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கில், தன் மீது அமலாக்கத்துறை கைது நடவடிக்கை எடுக்காமல் இருக்க, டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ராபர்ட் வதேரா முன்ஜாமின் பெற்றார். வரும் 16-ம் தேதி வரை அவரை கைது செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையில், டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ராபர்ட் வதேரா விசாரணைக்கு ஆஜராகி வருகிறார். ஏற்கனவே இருமுறை விசாரணைக்கு ஆஜர் ஆன நிலையில், நேற்று 3-வது முறையாக ராபர்ட் வதேரா மத்திய டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.