வேட்பாளர்கள் தேர்வு குறித்து மாநில காங்கிரஸ் தலைவர்களுடன் ராகுல் காந்தி ஆலோசனை

ஞாயிற்றுக்கிழமை, 10 பெப்ரவரி 2019      இந்தியா
rahul-gandhi 2019 01 11

புதுடெல்லி:  நாடாளுமன்ற பொதுத்தேர்தல் இன்னும் ஒருசில மாதங்களில் நடைபெற உள்ளது. இதனை சந்திக்க அரசியல் கட்சிகள் கூட்டணி அமைக்கும் பணிகளில் ஈடுபட்டுவருகின்றன. தேர்தல் கமிஷனும் தேர்தலை நடத்துவதற்கான முதல்கட்ட ஆயத்த பணிகளில் ஈடுபட்டுள்ளது.

இந்த தேர்தலில் ஆளும் பா.ஜனதாவை எதிர்த்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பலமான கூட்டணி அமைத்து வருகின்றன. தேசிய கட்சிகளின் தலைவர்கள் பல்வேறு மாநிலங்களில் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடத் தொடங்கிவிட்டனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்த தேர்தலில் வேட்பாளர்களை தேர்வு செய்வது குறித்து அனைத்து மாநில தலைவர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.

டெல்லியில் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் அனைத்து மாநில காங்கிரஸ் தலைவர்கள், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர்கள் கலந்துகொண்டனர். நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெறும் வகையில் மாநில அளவில் காங்கிரசுடன் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ள கட்சிகள், கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை நடத்துவது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து அவர்களிடம் கேட்டறிந்தார்.காங்கிரஸ் வேட்பாளர்கள் எப்படி தேர்வு செய்யப்பட வேண்டும் என்பது குறித்தும் சில அறிவுரைகளை ராகுல் காந்தி வழங்கினார். குறிப்பாக பா.ஜனதா ஆளும் மாநிலங்களில் அக்கட்சியின் ஊழல்கள் குறித்து மக்கள் மத்தியில் முன்னிலைப்படுத்தி பிரசாரம் செய்ய வேண்டும்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்காலத்தில் 10 ஆண்டுகளில் செய்த சாதனைகள் குறித்தும் மக்களிடம் விளக்க வேண்டும். காங்கிரஸ் தலைமையிலான அரசில் மக்களுக்கு செய்த சாதனைகளை பிரதமர் மோடி ஆட்சியில் செயல்படுத்திய திட்டங்களுடன் ஒப்பிட்டு மக்களுக்கு விளக்க வேண்டும் என்றும் ராகுல் காந்தி கூறியதாக மாநில தலைவர்கள் தெரிவித்தனர்.ராகுல் காந்தியும் இந்த ஆலோசனை கூட்டம் பற்றி டுவிட்டர் வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். அதில், “இந்தியா முழுவதும் உள்ள மாநில காங்கிரஸ் தலைவர்கள், சட்டமன்ற கட்சி தலைவர்கள் ஆகியோரை நான் சந்தித்தேன். தேர்தலுக்கு தயாராவது குறித்தும், ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள அரசியல் நிலைமைகள் குறித்தும் அவர்களுடன் ஆலோசனை நடத்தினேன். நடைபெற உள்ள தேர்தல் தொடர்பாக பல்வேறு பிரச்சினைகள் குறித்து விரிவாக விவாதித்தோம்” என்று கூறியுள்ளார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து