முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாக்பூரில் இன்று 2-வது ஒருநாள் போட்டி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்தியாவின் அதிரடி தொடருமா?

திங்கட்கிழமை, 4 மார்ச் 2019      விளையாட்டு

நாக்பூர் : இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் இன்று (5-ம்தேதி) நடக்கிறது.

இந்தியா முன்னிலை...

ஆரோன்பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 20 ஓவர் தொடரை ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. 5 ஒருநாள் போட்டித் தொடரில் ஐதராபாத்தில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் இன்று நடக்கிறது.

மாற்றம் இல்லை ?

முதல் போட்டியை போலவே இந்த ஆட்டத்திலும் இந்திய அணியின் அதிரடி தொடருமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. ஐதராபாத் போட்டியில் இந்தியாவின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு சமபலமாக இருந்தது. பேட்டிங்கில் கேப்டன் வீராட்கோலி, டோனி, கேதர் ஜாதவ், ரோகித்சர்மா ஆகியோரும், பந்து வீச்சில் முகமதுஷமி, பும்ரா, குல்தீப் யாதவ், ஜடேஜா ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர். வெற்றி பெற்ற அணி என்பதால் இன்றைய போட்டிக்கான அணியில் கோலி மாற்றம் செய்ய மாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

133-வது ஆட்டம்...

முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுத்து 1-1 என்ற கணக்கில் சமன் செய்யும் ஆர்வத்துடன் ஆஸ்திரேலிய அணி உள்ளது. அதிரடி வீரர் மேக்ஸ்வெல் அந்த அணியின் துருப்பு சீட்டாக உள்ளார். இதுதவிர உஸ்மான் கவாஜா, ஸ்டோனிஸ், ஹேண்ட்ஸ் ஹோம், நாதன் கோல்ட்டர், கும்மின்ஸ் போன்ற சிறந்த வீரர்களும் ஆஸ்திரேலிய அணியில் உள்ளனர். இரு அணிகளும் இன்று மோதுவது 133-வது ஆட்ட மாகும். இதுவரை நடந்த 132 போட்டியில் இந்தியா 48-ல், ஆஸ்திரேலியா 74-ல் வெற்றி பெற்றுள்ளன. 10 ஆட்டம் முடிவு இல்லை.

ஆதிக்கம் இருக்கும்...

நாக்பூர் மைதானத்தில் கடைசி 5 போட்டிகளில் இந்தியா 4-லும், ஆஸ்திரேலியா ஒன்றிலும் வெற்றி பெற்றுள்ளது. 2007-ம் ஆண்டுக்குப்பின் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்த மைதானத்தில் இந்தியா தோற்றது இல்லை. அதனால், இந்த மைதானத்தில் இந்தியாவின் ஆதிக்கம் இருக்கும் என தெரிகிறது.

இன்றைய ஆட்டம் பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிசனில் இந்தப்போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இரு அணிகள் விவரம் வருமாறு:-

இந்தியா:

வீராட்கோலி (கேப்டன்), ரோகித்சர்மா, தவான், அம்பதி ராயுடு, டோனி, கேதர்ஜாதவ், விஜய்சங்கர், ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமதுஷமி, ரிசப்பன்ட், லோகேஷ் ராகுல், பும்ரா, யசுவேந்திர சாஹல், சித்தார்த் கவூல்.

ஆஸ்திரேலியா:

ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), உஸ்மான் கவாஜா, ஸ்டோனிஸ், ஹேண்ட்ஸ் கோம், மேக்ஸ் வெல், கேரி, நாதன் கோல்ட்டர், கும்மின்ஸ், பெகரன்டார்ப், ஆடம் ஜம்பா, நாதன் லயன், ஷான் மார்ஷ், கானே ரிச்சர்ட்சன், ஆர்சிஷார்ட்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து