பொருளாதாரத்தில் நலிவுற்றோருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கு விசாரணை வரும் 28-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

திங்கட்கிழமை, 11 மார்ச் 2019      உலகம்
Supreme Court 27-09-2018

புது டெல்லி, பொருளாதாரத்தில் நலிந்தவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளின் விசாரணையை வரும் 28-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.

பொதுப் பிரிவினரில் பொருளாதாரத்தில் நலிந்த நிலையில் உள்ளவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் வகையில் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் புதிய மசோதா நிறைவேறியது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சமத்துவத்துக்கான இளைஞர்கள் அமைப்பின் சார்பில் கடந்த ஜனவரி மாதம் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இது தவிர காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரபல தொழிலதிபர் டெஹ்சீன் பூனாவால்லா மற்றும் வேறு சில தொண்டு நிறுவனங்களும் இந்த இட ஒதுக்கீட்டுக்கு தடை விதிக்க கோரி வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. முன்னர் நடந்த விசாரணையின் போது 10 சதவீதம் ஒதுக்கீட்டுக்கு தடை விதிக்க மறுத்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உள்ளிட்டோரை கொண்ட சுப்ரீம் கோர்ட் அமர்வு நேற்று மீண்டும் விசாரணையை தொடங்கியது. இவ்வழக்கின் விசாரணையை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்னும் மனுதாரரின் புதிய கோரிக்கை தொடர்பாக வரும் 28-ம் தேதி பரிசீலிக்கப்படும் என தெரிவித்த நீதிபதிகள் மறுவிசாரணையை அன்றைய தினத்துக்கு ஒத்திவைத்தனர்.

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து