ஐ.பி.எல். போட்டிகளில் இதுவரை சி.எஸ்.கே. கேப்டனாக 100-வது வெற்றி: மகேந்திர சிங் டோனி புதிய சாதனை

வெள்ளிக்கிழமை, 12 ஏப்ரல் 2019      விளையாட்டு
Dhoni 2019 04 12

Source: provided

ஜெய்ப்பூர் : ஐ.பி.எல். போட்டிகளில்ல சி.எஸ்.கே. கேப்டனாக 100-வது வெற்றியை பெற்றதன் மூலம் மகேந்திர சிங் டோனி புதிய சாதனை படைத்துள்ளார். 75 வெற்றிகளுடன் காம்பீர் அடுத்த இடத்தில் உள்ளார்.

ஐபிஎல் போட்டிகள் 23-ம் தேதி தொடங்கி நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் இரவு நடந்த ஆட்டத்தில் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள சென்னை அணியும், 7-வது இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற சென்னை அணி ராஜஸ்தானை முதலில் பேட் செய்யுமாறு பணித்தது. இதையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி வீரர்கள் மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால், ஒருவர் கூட 30 ரன்களைத் தாண்டாத நிலையில், 20 ஓவர்கள் முடிவில் அந்த அணியால் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 151 ரன்களை மட்டுமே சேர்க்கமுடிந்தது.

தடுமாற்றம்...

152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பின்னர் ஆடிய சென்னை அணி அடுத்தடுத்து 4 விக்கெட்டுகளை இழந்து துவக்கத்திலேயே தடுமாறியது. பின்னர் களமிறங்கிய அம்பத்தி ராயுடு மற்றும் டோனியின் அரைசதத்தால் சென்னை அணி வெற்றியை நோக்கி முன்னேறியது.

த்ரில் வெற்றி...

ஆட்டத்தின் கடைசி ஓவரில் பதற்றம் தொற்றிக்கொண்ட நிலையில், கடைசி பந்தில் மிட்ச்செல் சான்ட்னர் அபாரமாக சிக்ஸர் அடித்து, போட்டியை வெற்றிகரமாக முடித்துவைத்தார். இதனால் 155 ரன்கள் எடுத்த சென்னை அணி, 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தியது.

டோனி சாதனை...

இந்திய அணிக்கு 20 ஓவர் உலக கோப்பை, ஒருநாள் உலக கோப்பை, சாம்பியன் டிரோபி என கோப்பைகளை வாங்கி தந்து சாதனை படைத்த டோனி, விக்கெட் கீப்பிங், பேட்டிங்கிலும் பல்வேறு சாதனைகளை தனது வசம் வைத்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 2008 முதல் கேப்டனாக விளையாடி வரும் தல டோனி, நேற்றைய வெற்றியின் மூலம் கேப்டனாக 100வது வெற்றியை பதிவு செய்தார். இதில் 95 வெற்றிகள் சென்னை அணிக்காகவும், 2016-ல் 5 வெற்றிகள் புனே அணிக்காகவும் பெற்றுக் கொடுத்துள்ளார். இதற்கு அடுத்தபடியாக கௌதம் காம்பீர் 75 வெற்றிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து