மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணம் வெகுவிமர்சையாக நடைபெற்றது - மாசி வீதிகளில் இன்று தேரோட்டம்

புதன்கிழமை, 17 ஏப்ரல் 2019      ஆன்மிகம்
meenakshi thirukalyanam 2019 04 17

மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சியம்மன் - சுந்தரேஸ்வர் திருக்கல்யாணம் நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனை அடுத்து மாசி வீதிகளில் இன்று தேரோட்டம் நடக்கிறது.

திருகல்யாணம்...

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 8-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பட்டாபிஷேகத்தன்று மதுரையில் அரசியாக மீனாட்சி அம்மனுக்கு பட்டம் சூட்டப்பட்டது. சித்திரை திருவிழாவின் முத்திரை பதிக்கும் மற்றொரு நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் மேற்கு, வடக்கு ஆடி வீதியில் நேற்று காலை கோலாகலமாக நடந்தது. இதையொட்டி திருக்கல்யாண மண்டபம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. சுவாமிக்கு பல வண்ண பட்டுகள் சூடி, மலர் மாலைகள் அணிவித்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதையடுத்து, 9.50 மணிக்கு மேல் 10.14 மணிக்குள் சுந்தரேஸ்வரர் மீனாட்சியின் கழுத்தில் தாலி கட்டினர்.

பக்தர்கள் தரிசனம்...

திருக்கல்யாணத்தை காண திருப்பரங்குன்றத்தில் இருந்து சுப்பிரமணியர், வள்ளி தெய்வானை சமேதராக திருக்கல்யாண மேடையில் தோன்றினார். திருக்கல்யாண நிகழ்ச்சிக்கு வந்திருந்த பெண்கள், தங்கள் கழுத்தில் புதுத்தாலி அணிந்தனர். திருமணம் முடிந்த மீனாட்சி, சுந்தரேஸ்வரர், திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். திருக்கல்யாணத்துக்கு வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு கல்யாண விருந்து கொடுக்கப்பட்டது.

இன்று தேரோட்டம்

சித்திரை திருவிழாவின் 11-ம் நாளான இன்று தேரோட்டம் நடக்கிறது. இன்று அதிகாலை 4.30 மணி முதல் 4.45 மணிக்குள் மீன லக்னத்தில் சுவாமி - அம்மன் தலைப்பாகை அணிந்த கோலத்தில் தேர்களில் எழுந்தருளி சிறப்பு பூஜைகளுக்குப் பின் அதிகாலை 5.45 மணிக்கு முதலில் பிரியாவிடையுடன் சுந்தரேஸ்வரர் அமர்ந்திருக்கும் பெரிய தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. அது சிறிது தூரம் சென்றதும் மீனாட்சி அம்மன் அமர்ந்திருக்கும் சிறிய தேர் இழுக்கப்படுகிறது. 4 மாசி வீதிகளில் தேர் வலம் வருவதை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு நின்று சுவாமி, அம்மனை தரிசிப்பார்கள்.

எதிர்சேவை நிகழ்ச்சி...

இன்று வாக்குப்பதிவும் நடைபெறுவதால் 2 நிகழ்ச்சிகளுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை 19-ம் தேதி தேவேந்திர பூஜையுடன் மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது. அதே நேரத்தில் அழகர் கோவிலின் சித்திரை திருவிழா தொடங்குகிறது. அழகர் கோயிலில் இருந்து கள்ளழகர் இன்று மதுரை நோக்கி புறப்படுகிறார். அவருக்கு வழியெங்கும் பக்தர்கள் மண்டகபடி அமைத்து எதிர்சேவை செய்து வரவேற்பு கொடுக்கிறார்கள். குறிப்பாக மதுரை தல்லாகுளம் பகுதியில் அழகருக்கு எதிர்சேவை நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெறவுள்ளது. நாளை 19-ம் தேதி காலை அழகர் ஆற்றில் இறங்குகிறார். இந்த நிகழ்வில் சுமார் 10 லட்சம் பக்தர்கள் வரை கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து